சென்னை: சென்னையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த பொதுக்குழு முடிவுகள் நீதிமன்ற இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டவை என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழுவை கூட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் அணியின் சார்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். திங்களன்று காலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடை விதிக்க மறுத்ததோடு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்த வெற்றிவேலுக்கு ரூ 1 லட்சம் அபராதமும் விதித்தது. இதனை தொடர்ந்து வெற்றிவேல் இந்த தீர்ப்பை  எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுமுன்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரவு 9:30 மணியளவில் பொதுக்குழுவிற்கு தடையில்லை என தீர்ப்பளித்துள்ளது. மேலும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்து நீதிமன்ற இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டவை என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில்  டிடிவி தினகரன் அணியை சேர்ந்த கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார். அதில் அதிமுக சட்டவிதிகளின் படி அதிமுகவின்  பொது செயலாளருக்கு மட்டுமே பொதுக்குழு கூட்ட அதிகாரம் உள்ளதாகவும், தற்போது கூட்டப்படும் பொதுக்குழு கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் இதனை விசாரித்த பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் அதிமுக பொது குழுவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த விசாரணை அக்டோபர் 13 அன்று விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply