கான்ஸ்டாண்டின் செர்னென்கோ                                                                                                                                                              தோழர்களே,மனிதனையே மாற்றாமல் சமுதாயத்தைப் புரட்சிகரமாக மாற்றுவது சாத்தியமல்ல. புதிய மனிதனை உருவாக்குவது கம்யூனிச நிர்மாணத்தின் மிக முக்கியமான குறிக்கோள் மட்டுமன்றி ஓர் அத்தியாவசியமான நிபந்தனையுமாகும் என்ற அடிப்படையில்தான் நமது கட்சி செயல்படுகிறது.மக்களின் படைப்பாற்றல்களை நூற்றாண்டு நூற்றாண்டுக் காலமாக ஒடுக்கி வந்த சமூக மற்றும் ஆன்மீகத் தளைகளை மாபெரும் அக்டோபர் புரட்சி ஒழித்துக் கட்டியது. புரட்சியானது, தொழிலாளி வர்க்கத்தை இன்றைய சகாப்தத்தின் நாயகனாக ஆக்கிற்று; உழைக்கும் மக்களின் பிரம்மாண்டமான படைப்பாற்றலை விடுவித்தது. இதில்தான் சோவியத் குணப்பண்பின் சிறந்த இயல்புகளது வேர் அடங்கியுள்ளது.

ஆர்வக் கனல் வீசும் தேசபக்தனும், கம்யூனிச லட்சியங்களின் பிழையற்ற தன்மையைத் தேர்ந்து தெளிந்த சர்வ தேசியவாதியுமாகிய சோவியத் மனிதன், புரட்சிகரப் போராட்டம் மற்றும் புரட்சிகரப் படைப்பு நடவடிக்கைகளின் இயக்கப்போக்கில் முதிர்ச்சியடைந்தான்; வளர்ச்சியடைந்தான்; உரம் பெற்றான். தனது தீவிரமான சமுதாயக் கண்ணோட்டத்தினாலும், அனைத்து அரசு மற்றும் பொது விவகாரங்களிலும் ஜீவாதாரமான அக்கறை கொண்டிருப்பதனாலும் உழைப்பின்பாலான கற்பனை வளமும் படைப்பாக்க மனோபாவத்தினாலும் அவன் தனிச்சிறப்புப் பெற்றுள்ளான். தோழர்களே, சுருங்கக்கூறின் புதிய மனிதன், ஏதோ ஒரு தொலைதூர லட்சியமல்ல; மாறாக நமது காலத்தின் மெய்ப்பாடுமாகும் என்று நியாயமாகவே கருதமுடியும்.

இதில் லெனினியக் கட்சியின் வழிகாட்டுதலில் தோற்றுவிக்கப்பட்ட மிகவும் ஆழமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் பயனையும் சோசலிச ஜனநாயகத்தின் வளர்ச்சியிலும் உழைக்கும் மக்களின் உணர்வு, நல்வாழ்வு மற்றும் பண்பாட்டின் வளர்ச்சியிலும் அது காட்டிவந்துள்ள இடையறாத அக்கறையின் பயனையும் காண்கிறோம்.
இதில் நாம் வெகுஜனங்களிடையில் கட்சியின் செல்வாக்கு இடையறாது வளர்ந்து வருவதற்கான சான்றினை காண்கிறோம்; தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் அறிவுத்துறையினருடன் அதற்குள்ள பந்தங்கள் வலுப்பெற்று வருவதற்கான சான்றினைக் காண்கிறோம்; இன்னும் கட்சிக்கும் மக்களுக்கும் இடையேயான மீறவொண்ணாத ஒற்றுமையின் முனைப்பான சான்றினைக் காண்கிறோம்.கட்சியின் 26ஆவது காங்கிரசின் கொள்கை வழியைத் தொடர்ந்து பின்பற்றி வந்த மற்றும் அதனுடைய உள்துறை, அயல்துறைக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் 1982 நவம்பர் பிளீனம் கூட்டங்களின் முடிவுகள், அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளன. சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி மத்தியக் கமிட்டியின் மற்றும் அதன் பொதுச் செயலாளர் யூரி விளதிமிரோவிச் ஆந்திரபோவின் தலைமையிலான அரசியல் குழுவின் நடவடிக்கைகளை சோவியத் உழைக்கும் மக்கள் ஆர்வத்துடன் அங்கீகரிக்கின்றனர்.

அரசு மற்றும் பொருளாதார அமைப்பு முழுமையின் பணியை இடையறாது மேம்படுத்துவதையும், ஊழியர்களது பொறுப்பை உயர்த்துவதையும், ஒழுங்கமைப்பையும் கட்டுப்பாட்டையும் அபிவிருத்தி செய்வதையும், தமது தாயகத்தின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு வலிமையை மேலும் பெருக்குவதையும், சோவியத் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சித்தாந்த செல்வாக்கை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த மிகவும் பல்வேறான சாதனங்களையும், நன்கு பயிற்சி பெற்ற பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களையும், பிரச்சாரம் மற்றும் போதனையின் உயர் பயனுறுதித் தன்மையையும், தரத்தையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான யாவற்றையும் கட்சி கொண்டுள்ளது.

ஆயினும், புதிய மனிதனை உருவாக்கும் நிகழ்வுப் போக்கானது, வாழ்க்கையே எவ்வாறு தொடர்ச்சியானதாகவும், சிக்கலானதாகவும் இருக்கின்றதோ, அதைப்போன்ற தொடர்ச்சியானதும் சிக்கலானதுமாக உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. உழைப்பின் மற்றும் அன்றாட வாழ்க்கையின் சமூக நிலைமைகளும், பொருளாதார நிலைமைகளும் மாற்றம் அடைந்து வருகின்றன. மேலும் மேலும் புதிய தலைமுறைகள் முதிர்ச்சி அடையும் கட்டத்தினுள் பிரவேசித்து வருகின்றன. இது எண்ணற்ற புதிய கடமைகளை முன்வைக்கிறது. இவற்றில் கட்சி பிரதான கவனம் செலுத்தி வருகிறது.

இன்றைய நிலைமைகளில் சித்தாந்த, அரசியல் மற்றும் கல்விப் பணியை மேம்படுத்துவதற்கான பிரதானத் திசை வழிகள் மத்திய கமிட்டியின் 1979, ஏப்ரல் 26ஆம்தேதிய தீர்மானத்திலும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது காங்கிரஸ் அறிக்கைகளிலும், பிற கட்சி தஸ்தாவேஜூகளிலும் வகுத்தளிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் எவ்வாறு அமலாக்கப்பட்டிருக்கின்றன என்பதை விவாதிப்பதும் வருங்காலத்தில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதும் நமது பிளீனம் கூட்டத்தின் நோக்கமாகும்.

சோசலிச அரசு, வெகுஜனங்களின் உணர்விலிருந்து தனது பலத்தைப் பெறுகிறது என்று லெனின் வலியுறுத்தினார். சோவியத் மக்களின் சித்தாந்த, அரசியல், உழைப்பு மற்றும் தார்மீக வளர்ச்சி செம்மையுறுவதற்குக் கட்சி ஓய்வொழிச்சலின்றிப் பாடுபடுகிறது. இந்தப் பணியை அது ஸ்தூலமான வரலாற்று நிலைமையுடனும் நமது வளர்ச்சி நடந்தேறி வருகிற உள்நாட்டு, வெளிநாட்டு நிலைமைகளுடனும் இடையறாது இணைக்கிறது.

இன்று கட்சியும் மக்களும் முன்னென்றும் காணாத வீச்சுடைய பணிகளை சமாளித்து வருகின்றனர். உணவுத் திட்டம், விசை ஆற்றல் திட்டம் உள்ளிட்ட விரிவான மாபெரும் சமூக பொருளாதாரத் திட்டங்களை நாம் நிறைவேற்றி வருகிறோம்; உற்பத்தியைத் தீவிரப்படுத்துவதற்கும் விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கும் பாடுபட்டு வருகிறோம். பிரம்மாண்டமான பிராந்தியங்களின் தோற்றத்தையே நாம் மாற்றி வருகிறோம்.

நமது பொருளாதாரம், விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றின் மாபெரும் சாத்தியப்பாடுகளும் நமது இயற்கை வளங்களும் கூடிய மட்டும் பூரணமாகவும் பயனுறுதியாகவும் பயன்படுத்தப்படுவதற்காக நாம் விடாப்பிடியாகப் பணியாற்றி வருகிறோம். சித்தாந்தப் பணி இந்தக் கடமைகள் யாவற்றிற்கும் இசைவானதாக இருக்க வேண்டும் என்பது நியாயமானதே. ஐந்தாண்டு திட்டத்தின் நிறைவேற்றம், நமது முன்னேற்றத்தின் வேகம், நாட்டின் பாதுகாப்பு வல்லமை பலப்படுத்தப்படுவது இவையாவும் நாம் மக்களின் ஆன்மீக ஆற்றலை எவ்வாறு திரட்டப்போகிறோம் என்பதையும் அவர்களுடைய உழைப்பு மற்றும் சமூக நடவடிக்கைகளை எவ்வாறு உயர்த்தப்போகிறோம் என்பதையுமே பலவழிகளில் பொறுத்துள்ளன.

கட்சியின் சித்தாந்த, வெகுஜன அரசியல் பணிகள் குறித்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பிளீனம் கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து(1983)
நன்றி: சமாதான முன்னேற்றப் பாதையில் நூல்(1984)

Leave A Reply

%d bloggers like this: