ஈரோடு, செப்.11-
ஒப்பந்த ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோட்டில் 4வது நாளாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 33 ஒப்பந்த தொழிலாளர்களை ஈரோடு பிஎஸ்என்எல் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இதனை கண்டித்தும், அத்தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்.நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கு பணியின் தன்மையை குறித்து சம்பள உயர்வு மற்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். கட்டாய விடுப்பு வழங்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஈரோடு பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நான்காவது நாளாக ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன் தலைமை வகித்தார். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கே.பழனிசாமி, மாநில அமைப்புச் செயலாளர் வி.மணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.