பாலாற்றில் கழிவு பொருட்களை  கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வலியுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அடுத்த பாலாற்று பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓரிக்கை பகுதி பாலாற்றுக்குள் காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருமண மண்டப கழிவுகள், உணவக கழிவுகள், இறைச்சிக் கடை கழிவுகள் என பல்வேறு வகையான கழிவுகளை வாகனத்தில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.
இதனால் அப்பகுதியில் பன்றி மற்றும் நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதாலும் கழிவுகள் நிலத்தடி நீருடன் கலப்பதாலும் குடிதண்ணீர் மாசு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கழிவுகளை கொட்டிவருபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் காஞ்சிபுரம் பெருநகரக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காஞ்சி பெருநகர செயலாளர் சி.சங்கரிடம் கேட்டபோது நகர மக்களின் குடிதண்ணீர் ஆழ்துளை கிணறுகள் உள்ள இடத்தில்  கழிவுப்பொருட்களை கொட்டப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. பாலாற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளும் சாதாரண மக்களை மட்டும் விரட்டி விரட்டி பிடிக்கும் அதிகாரிகள் இதுபோன்றவர்களை  பிடிப்பதில்லை.எனவே கழிவுப்பொருட்களை கொட்டுவோர்மீதும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: