பழங்குடியினரின் கல்வி குறித்த மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் பழங்குடி மக்கள் சங்க மாநில அமைப்பாளர் வி.பி.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.  மக்கள் கண்காணிப்பக செயல் இயக்குனர் ஹென்றி திபென் கூட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பெ.சண்முகம், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் பிரபா கல்விமணி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மோகனா, சுடர் நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் பேசிய முன்னாள் துணைவேந்தர் வெ.வசந்திதேவி கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் பல பெயர்களால் பழங்குடியின மக்கள் சிதறி கிடக்கிறார்கள். கல்வி உரிமை சட்டப்படி அவர்களுக்கான கல்வி மறுக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் தனியாகவும், விடுதி நிர்வாகம் தனியாகவும் இருக்க வேண்டும். கல்வி மற்றும் சரியான உணவு போன்றவை வழங்கப்பட வேண்டும். உண்டு உறைவிடப் பள்ளிகளை வருவாய்த்துறை கண்காணித்து வருகிறது. இதனை கல்வித்துறைக்கு மாற்றப்பட வேண்டும்.
மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அதே ஊரை சேர்ந்த ஒரு இளைஞரை பிடித்து 1000 ரூபாய் கொடுத்து பாடம் கற்று கொடுக்க சொல்கிறார்கள். அவர்கள் என்ன கற்று கொடுப்பார்கள். தற்போது, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் கிடையாது. அவ்வாறு இருந்தாலும் மதியம் 12.30 மணியளவில் பள்ளிக்கு சென்று மாலை 2.30 மணியளவில் பள்ளியை விட்டு வெளியேறி விடுகிறார்கள். விடுதி காப்பாளர் இல்லை. இதுபோன்ற செயல்களால் பழங்குடியினருக்கு கல்வி எட்டாகனியாக உள்ளது. இந்தச் செயல்பாடுகளை பள்ளி நிர்வாகக் குழு கண்காணிக்க வேண்டும். அந்த பஞ்சாயத்து உறுப்பினர் கவனிக்க வேண்டும். அல்லது அப்பகுதி மக்களுக்கு கல்வி உரிமை குறித்து உண்மை நிலையை புரிய வைக்க வேண்டும்.

இவைகளுக்கு தீர்வு காண அந்தந்த பகுதிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து, கண்காணிக்க வேண்டும். இதற்காகத்தான் சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் சிறப்பு திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டது. இதில் பழங்குடியின மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 8 விழுக்காடு நிதி கொடுக்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குகிறார்கள். பிறகு அதனை தனித் தனியாக பிரித்து கொடுக்கிறார்கள். இதில் எஸ்டி, எஸ்சி மக்களுக்கு என்று தனியாக எதுவும் செய்வதில்லை, மாறாக ஏதோ மொத்தமாக செய்கிறார்கள்.

ஆனால், 8 விழுக்காடு எஸ்டி மக்களுக்கும், 1 விழுக்காடு எஸ்சி மக்களுக்கும் அவர்களது தனிப்பட்ட தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எல்லாவற்றிலும் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த நிதி என்ன திட்டங்களுக்காக பயன்படுத்துவது குறித்து மக்கள் பிரதிநிதி திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்கள் இதுபோன்று தான் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதனால் தான் அம்மாணவர்கள் சிபிஎஸ்சி பாட திட்டத்தில் படித்த மாணவர்களுடன் போட்டி போடுகிறார்கள். ஆகவே, இது போன்ற திட்டங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

தீர்மானங்கள்
தமிழகம் முழுவதும் உள்ள பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே நிரப்பப்படாமல் உள்ளதால் பழங்குடியின குழந்தைகளின் கல்வித்தரம் பெருமளவில் பாதிப்படைகிறது. எனவே, உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் அனைத்தையும், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்பட வேண்டும். திட்ட செயலாக்கத்தையும், தொடர் கண்காணிப்பையும், பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.

பழங்குடியின மக்களின் நலனில் அக்கறையுள்ள, அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களை நன்கு தேர்வு செய்ய வேண்டும். விடுதிகாப்பாளர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் விடுதிகளில் தங்க உறுதி செய்திட வேண்டும். மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க தொடர்ந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ஒரு தொகையினை கல்வி ஊக்கத் தொகையாக வழங்கலாம். விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நிர்ணயம் இல்லாமல், பயிலும் மாணவர்கள் அனைவரையும் சேர்க்க வேண்டும். உண்டு உறைவிடப்பள்ளிகள் என பெயர் பலகை மட்டுமே உள்ளது. மேலும் விடுதி வசதிகளையும், தரமான உணவையும், கழிப்பறை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். பழங்குடி மக்களின் வாழ்வியலை உள்ளடக்கிய தனிப்பாடத் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழக பழங்குடியினர் கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் தலைவராக வசந்தி தேவி,  ஒருங்கிணைப்பாளராக சுடர் நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் மாநில முழுவதும் உள்ள பழங்குடி அமைப்பை சேர்ந்த மக்கள் பிரதிதிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: