டில்லி:
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு திணித்து வரும் நிலையில் ஆன்லைன் சைபர் கிரைம் குற்றவாளிகளின் அட்டூழியம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கிரெடிட், டெபிட் கார்ட் வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
எதிர்பாராத நிலையில் கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தணையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் இந்த ஆன்லைன் மோசடி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் ரொக்கமற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பு இல்லாததாக அமைந்துள்ளது.
இது குறித்து சைபர் நிபுணரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பவான் துகல் கூறுகையில், ‘‘பணமதிப்பிழப்புக்கு பின் சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது. இதை இந்த நாடு எதிர்கொள்ள தவறிவிட்டது’’ என்றார்.
2016ம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் 27 ஆயிரம் சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக புள்ளி விபரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முழுவதும் 50 ஆயிரத்து 362 புகார்கள் வந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 1.5 சதவீதம் மட்டுமே சைபர் குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் 10 சதவீத சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு பின் கடந்த ஆண்டு அக்டோபரில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.71.27 கோடியாக இருந்தது. அடுத்த 2 மாதங்களில் இது ரூ. 123.5 கோடியாக உயர்ந்தது.
சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 21 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய ஜூனியர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் சவுத்ரி கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து பேசுகையில், ‘‘உலகத்தில் உள்ளது போல் தான் இங்கும் சைபர் கிரைம்கள் நடக்கிறது’’ என்றார்.
சைபர் குற்றங்கள் சர்வதேச அளவில் அதிகரித்து வருவது என்பது ஏற்றுக் கொள்ள கூடிய விஷயமாக தான் உள்ளது. எனினும், விரைவு பரிமாற்றம் நடப்பது குறித்து புகார் கிடைத்தவுடன் உடனடியாக வங்கிகள் கார்டுகளை பிளாக் செய்ய வேண்டும். இதற்கு கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பிழப்பால் ஆதாயம் அடைத்துள்ள பே டிஎம், பிஎச்ஐஎம் போன்ற டிஜிட்டல் வாலட்கள் பாதுகாப்பு இல்லாததாக இருக்கிறது என்று கான்பூர் ஐஐடி ஆராய்ச்சி மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன்  பரிவர்த்தனைக்கு தனிப்பட்ட தகவல்களை கேட்பதன் மூலமே பொதுவான சைபர் குற்றங்கள் நடப்பதாக தெரியவந்துள்ளது.
மோசடி நபர்களும் பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளை கையாளுகின்றனர். அதிக வருமானம், வங்கிகளில் கடன், குறைந்த நாட்களின் அதிக பணம் கிடைப்பது போன்று பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கேட்டு பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஜூலை வரை புனே மற்றும் நொய்டாவில் அதிகளவில் சைபர் மோசடிகள் நடந்துள்ளது. குர்கான் மற்றும் மும்பையில் அதிக புகார்கள் வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் திகாமார்க், ஜார்கண்டில் ஜமத்ரா, பீகாரில் கத்ரிசாராய் போன்ற பகுதிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளின் புகழிடமாக உள்ளது. பெங்களூருவில் உள்ள மக்களை ஜார்கண்டை சேர்ந்த இணையதளம் மூலம் ஏமாற்றியுள்ளனர், திகாமார்கில் இருந்து மோசடி போன் அழைப்புகள் அதிகளவில் வருகிறது என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: