கோவை. செப்.11-
நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும். பாட திட்டத்தை மாற்றாமல் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தக் கூடாது, என வலியுறுத்தி கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டிலிருந்து 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை போத்தனூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவ,மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் திங்களன்று காலாண்டு தேர்வை புறக்கணித்து பள்ளிக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்தகாவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், தங்களது கோரிக்கை ஏற்கும் வரை போராடுவோம் என தெரிவித்து கோசங்களை எழுப்பி, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் காவல் துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

போராட்டத்திற்கு தூண்டியதாக கைது:
இதற்கிடையே, மாணவர்கள் போராட்டத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் வீரமணி மற்றும் பிரபாகரன், தாமோதரன் ஆகியோர் போராட்டத்தை தூண்டியதாக கூறி காவல் துறையினர் திடீரென கைது செய்தனர். இதுமாணவர்களிடமும், அப்பகுதி மக்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவர்களை விடுதலை செய்யக்கோரி மீண்டும் போராட்டங்களில் ஈடுபட அப்பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் முடிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply