பாட்னா;
சிரிஜன் நிறுவனம் மூலம் 2005-இல் இருந்து 2015-ஆம் ஆண்டு வரை ரூ. 1200 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக நிதிஷ்குமார் மீது, லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.பீகார் மாநிலம் பகல்பூரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், பீகாரில் நடந்த சிரிஜன் ஊழலில் நிதிஷ்குமாருக்கும், பாஜக-வைச் சேர்ந்த துணை முதல்வர் சுசில்குமார் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

பகல்பூரில் சிரிஜன் மகிளா சங்கம் என்ற பெயரில் அரசு சாரா சமூக சேவை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை மனோரமாதேவி என்பவர் 2004-ஆம் ஆண்டு தொடங்கினார். 2 தையல் எந்திரங்களை வைத்து பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்த அந்த நிறுவனம் பின்னர் பல நூறு கோடி ரூபாய் புழங்கும் நிறுவனமாக மாறியது.

அரசு திட்டங்கள் சார்பில் செயல்படுத்தும் பல்வேறு பயிற்சிகளையும் இந்த நிறுவனம் வழங்கியது. இதன் மூலம் அரசு பணம் அதிக அளவில் கிடைத்தது.
இந்த நிலையில் பகல்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த பெரும் பகுதி பணத்தை இந்த நிறுவனம், தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டது. சில அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோர் உதவியுடன் இவ்வாறு செய்திருந்தது.

போலி பத்திரங்கள், போலி காசோலைகள் போன்றவற்றின் மூலம் இதுபோல நிதியை மாற்றிப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதில் 1200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. தற்போது இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
நிதிஷ்குமார் முதல்வராக இருந்த காலத்தில் தான் இந்த ஊழல் நடந்தது. எனவே இந்த ஊழலில் நிதிஷ் குமாருக்கும், சுசில்குமார் மோடிக்கும் பங்கு இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிரிஜன் ஊழலை வைத்துத்தான், நிதிஷ்குமாரை சிறையில் அடைப்போம் என்று மிரட்டி பாஜக அவரைப் பணிய வைத்துள்ளதாகவும் லாலு கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: