பெங்களூரு,
பழம்பெரும் நடிகை பி.வி ராதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் நடித்த தாழம்பூ, ஜெய்சங்கர் நடித்த சி.ஐ.டி சங்கர், ஜெயலலிதா நடித்த யார் நீ உள்பட 300க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்தவர், பி.வி.ராதா(69). பெங்களூரில் வசித்து வந்த அவர், நேற்று இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். இறந்த பிறகு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு ஆராய்ச்சிக்காக தானம் செய்வதாக உறுதி அளித்திருந்தார். அதன்படி அவரது உடல் தானம் செய்யப்பட்டது.1948ல் பெங்களூரில் பிறந்த ராதாவின் இயற்பெயர் ராஜலட்சுமி. 1964ல் குமாரி ராதா என்ற பெயரில், ராஜ்குமார் ஜோடியாக நவகோடி நாராயணா என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ், சிவாஜி கணேசன், நாகேஸ்வர ராவ் ஆகியோர்களுடன் நடித்தார். படங்களையும் தயாரித்தார். ராதாவின் கணவர் இயக்குனர் கே.எஸ்.எல்.சுவாமி கடந்த ஆண்டு இறந்துவிட்டார். ராதாவின் மறைவுக்கு தென்னிந்திய  நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது

Leave A Reply