மதுரை;
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு, மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை ஒதுக்குவதோடு 8 வாரங்களுக்குள் தடையில்லா சான்றிதழையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று, குமரி மகா சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இவ்வகைப் பள்ளிகளை தொடங்க மாநில அரசு போதிய இடங்களைக் கொடுக்க வேண்டும்; ஆனால், மாநில அரசு இந்த பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், நவோதயா பள்ளிகள் மூலம் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயன்றதாலேயே இந்த பள்ளிகளை கொண்டு வர மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், “நவோதயா பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாநில மொழி கற்பிக்கப்படுகிறது; 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் மொழியை விருப்பப்பாடமாக தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்படுகிறது; எனவே, இந்தித் திணிப்பு இருக்காது” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முடிவில் தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கினார். தமிழக அரசு நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு, மாவட்டந் தோறும் நிலம் ஒதுக்கி, உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருவதுடன், முன்னதாக தடையில்லா சான்றிதழை 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: