கோவை, செப். 11-
நீட்தேர்விற்கு விலக்கு கேட்டு போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகளுக்கு ஆதரவாக இருந்த சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினரை கைது செய்த காவல்துறையினரின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை வெள்ளளூர் அரசுப்பள்ளி மாணவிகள் திங்களன்று காலாண்டு தேர்வை புறக்கணித்து அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

இத்தகவலை கேள்விப்பட்டு சிபிஎம் கோவை மாவட்டக்குழு உறுப்பினரும், அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினருமான வீரமணி, சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.கொடும் வெயிலில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவிகளுக்கு தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் காவல்துறையினர் வீரமணி உள்ளிட்ட மூன்றுபேரை போராட்டத்தை தூண்டியதாக கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அடக்குமுறையை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அடக்குமுறையால் ஒருபோதும் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என்பதை எச்சரிக்க விரும்புகிறோம்.

ஆகவே, காவல்துறை உடனடியாக பொய்வழக்கை திரும்பப் பெற்று கைது செய்த வீரமணி உள்ளிட்ட மூன்றுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: