தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 6வது ஆண்டாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் தாக்குதலில் இருந்து விவசாயிகள் இன்னமும் விடுபடவில்லை. இந்த நிலையில் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள இப்போது பொருத்தமான காலம் ஆகும். மேட்டூர் அணையில் 75 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் தேதியை தமிழக அரசு உடனடியாக அறிவிப்பதன் மூலம் விவசாயிகள் சாகுபடிக்கான தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். மேலும், காலதாமதம் செய்வது விவசாயத்திற்கு உகந்ததாக இருக்காது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இருப்பினும் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் படி இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவு 104 டி.எம்.சி ஆகும். ஆனால், செப்டம்பர் 7ம் தேதி வரை 36.8 டி.எம்.சி அளவு தண்ணீர் மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு கர்நாடக மாநிலம் தர வேண்டிய பாக்கி 67 டி.எம்.சி தண்ணீரை பெற தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடியாவது முழுமையாக செய்யும் வகையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  கர்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெறவும், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: