திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் திருநங்கைகளுக்கென சிறப்பு மருத்துவ பிரிவு அமைக்கப்படும் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கேகே.சைலஜா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் திருநங்கைகளுக்கென பிரத்யேக இலவச மருத்துவ பிரிவு அமைக்கப்படும் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக கோட்டயத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே திருநங்கைகளுக்கென தனியாக சிறப்பு  மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு மாதம் ஒருமுறை செயல்பட்டு வருகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையின் அனைத்து துறை மருத்துவர்களும் , இந்த திருநங்கைகளுக்கென பிரத்யேக பிரிவிற்கு மிகவும் நன்றாக ஒத்துழைப்பு தருகிறார்கள். மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை இந்த பிரிவு செயல்படும். பொது மருத்துவம், மனநல மருத்துவர், தோல் நோய், உட்சுரப்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என 5 மருத்துவர்களை கொண்ட குழு இந்த பிரிவில் தங்களது பணியை நீட்டிப்பார்கள். சோதனை ஓட்டமாக மாதம் ஒரு முறை மட்டும் செயல்படும் இந்த பிரிவு வரும் காலங்களில் , சேவை நாட்கள் விரிவுபடுத்தப்படும். மேலும் திருநங்கைகளுக்கான இரண்டு தனி அறுவை சிகிச்சை மையங்களும் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இது கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்படுகிறது. மற்ற மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு செவ்வாயன்றும் இந்த பிரிவு செயல்படும். திருநங்கைகளுக்கு சுகாதார அட்டை வழங்கப்பட்டு , அனைத்து மருத்துவ சேவைகளும் முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படும். இந்த பிரிவுகளில் திருநங்கை தன்னார்வலர்கள் சட்ட உதவியை வழங்குவதற்காக நியமிக்கப்படுவார்கள்.இது தவிர சமுதாய உறுப்பினர்களுக்கான சட்ட உதவியை வழங்குவதற்கென்று, சட்ட பூர்வமாகவும் ஒரு திருநங்கை தன்னார்வலர் நியமிக்கப்படுவார். இதற்காக ஏற்கனவே மூன்று திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில்,
திருநங்கைகளுக்கு அசாதாரண சுகாதார சிக்கல்கள் ஏற்படுகிறது. அதற்கான உரிய சிகிச்சை முறைகள் குறித்து அவர்கள் அறியவில்லை. இந்த மருத்துவ பிரிவு அவர்களுக்கு தேவையான சிகிச்சை உரிய நேரத்தில் கிடைக்க உறுதுணையாக இருக்கும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: