புதுதில்லி;
பஞ்சமா பாதகங்களை செய்பவர்கள் யார் என்றால், கொஞ்சமும் யோசிக்காமல் அவர்கள் சாமியார்கள்தான் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.காடுகள் அழிப்பு, கற்பழிப்பு, மோசடி, போதை மருந்து விற்பனை, கூலிப்படை கொலை என அத்தனையிலும் கொடிகட்டப் பறப்பவர்களாக- அதன்மூலம் பெருந்தொழிலதிபர்களாக சாமியார்கள் இன்று மாறியிருக்கின்றனர். அதில் ஆசா ராம் பாபு, குர்மீத் ராம் சிங் போன்ற ஒரு சிலர் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பலர், ஆட்சியாளர்களின் துணையுடன் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், குர்மீத் ராம், ஆசா ராம், அசீமானந்தா, ராதே மா உட்பட 14 பேரை போலிச்சாமியார்கள் என்று ‘அகில பாரதிய அக்காரா பரிஷத்’ என்ற சாமியார்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனுக்காகவே இந்த போலிச் சாமியார்களின் பட்டியலை வெளியிடுவதாக இந்த அமைப்பு சப்-டைட்டிலும் போட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சாமியார்கள் சிறைக்கு செல்வது அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அகில பாரதிய அக்காரா பரிஷத் என்ற அமைப்பில் இடம்பெற்றுள்ள சாமியார்கள், அவசர அவசரமாக அலகாபாத்தில் கூடி ஆலோசித்தனர். மஹந்த் நரேந்திர கிரி தலைமையில் 13 அக்காராக்களைச் சேர்ந்த 26 சாமியார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதன்முடிவில் 14 போலிச் சாமியார்களின் பட்டியலை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

போலிச் சாமியார்களின் பட்டியலில் குர்மீத் ராம் பெயர் முதலாவதாக இடம் பெற்றுள்ளது. அடுத்து பாலியல் வல்லுறவு உட்பட பல வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் 76 வயதான ஆசா ராம் பாபுவின் பெயர் உள்ளது. பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதும் ஆசிரமம் நடத்தி வரும், அசுமல் சிருமாளனி, அவரது மகனும் பல்வேறு கொலை வழக்குகளும் சிக்கியுள்ளவருமான நாராயண் ஆகியோரின் பெயர்களும் போலிகள் பட்டியலில் உள்ளது.

சாய் ராதே மா என அழைக்கப்படும் சுக்வீந்த்ர் கவுர் எனும் பெண் சாமியார், வங்கிக் கடன், அடுக்குமாடி வீடுகள் மோசடி வழக்குகளை கொண்டுள்ள நொய்டாவைச் சேர்ந்த ‘பில்டர் பாபா சச்சின் தத்தா’ எனும் சச்சினாந்தா, மகாராட்ஷ்டிராவின் அஜ்மீர் தர்ஹா மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புகள் வழக்கில் சிக்கி அப்ரூவரான அசீமானந்தா, உத்தரபிரதேசத்தின் பிரஹஸ்பதி கிரி, ஹரியானாவின் ராம் பால், மகாராஷ்டிராவின் இச்சாதரி பீமானந்த், ஜார்கண்டின் நிர்மல் பாபா, தில்லியைச் சேர்ந்த ஓம்ஜி மற்றும் ஆச்சார்யா குஷ்முனி ஆகியோரும் போலிச் சாமியார்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.‘நாங்கள் அறிவித்துள்ள 14 போலிச் சாமியார்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்; இவர்களுக்கு கும்ப மேளா, மஹாகும்பமேளா மற்றும் ஆன்மீகக் கூட்டங்களில் மத்திய – மாநில அரசுகள் எந்தவிதமான அங்கீகாரமும் அளிக்கக் கூடாது; அவர்களுக்கு மற்ற சாமியார்களுக்கு போல இடங்களையும் அரசுகள் ஒதுக்கக் கூடாது’ என்று அக்காரா பரிஷத் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply