திருப்பூர், செப். 11-
இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் மீது புனையப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சனிக்கிழமை அன்று அங்கு படிக்கும் மாணவிகள், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது அழைப்பின்பேரில் அங்கு சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.விமல் போராட்டத்தை வாழ்த்திப் பேசியுள்ளார். அப்போது அங்கு வந்த காவலர்கள் ஜனநாயகப்பூர்வமான முறையில் அமைதியான வழியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் வாழ்த்திப் பேசிய ஆர்.விமலை வலுக்கட்டாயமாக வெளியேற்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் போராட்டத்தை வாழ்த்திவிட்டு வெளியே சென்றபோதும் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றுவதற்கு பலவந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகள் காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியரை கட்டாயப்படுத்தி புகார் மனுவை கேட்டுப் பெற்று, காவல் துறையினர் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.விமல் மீது பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அத்துமீறி நுழைந்ததாகவும் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் மீது இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது. காவல் துறையின் இந்நடவடிக்கை, மாணவர்கள் சங்கமாகச் செயல்படுவதற்கு அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பறிப்பதுடன், நீட் எதிர்ப்புப் போராட்டத்தை சீர்குலைக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் நோக்கமும் கொண்டதாகும். எனவே திருப்பூர் மாநகர காவல் துறையின் இந்நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வன்மையாக கண்டிப்பதுடன், மாணவர் சங்கச் செயலாளர் ஆர்.விமல் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேலும், காவல் துறையின் ஜனநாயக உரிமைப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து தரப்பினர் குரல் எழுப்புமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: