கோவை,
கோவை ஆலாந்துறை அடுத்த பூண்டியில் பிரபல ஈஷா யோக மையம் இயங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியை ஆக்கிரமித்து அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதியோகி சிலை நிறுவப்பட்டது. யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த சிலையை பார்ப்பதற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் ஆதி யோகியின் சிலையை வைப்பதற்கு சூழல் ஆர்வலர்கள் அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஈஷா யோக மையத்தின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ராஜஸ்தானை சார்ந்த மனீஷ் என்பவர், ஈஷா மையத்தின் அருகில் சென்றுகொண்டிருந்த போது காட்டுக்குள் இருந்து வந்த ஒற்றை யானை மனீஷை தாக்கி காலால் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒற்றை யானை நின்றிருந்ததை பார்த்து சத்தம் எழுப்பி யானையை விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் இது குறித்து தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியது. ஈஷா யோக மையம் வனப்பகுதியில் யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார்கள் இருந்து வரும் சூழலில் அம்மைய ஊழியர் யானை தாக்கி இருந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாலை 5 மணிக்கு மேல் ஈசா மையம் உள்ள வனப்பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

Leave A Reply