நாமக்கல், செப்.11-
இலவச பஸ்பாஸ் வழங்க தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் திங்களன்று அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பஸ்பாஸ் முழுமையாக வழங்கப்பட வில்லை. இதனால் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பேருந்து பயணத்திற்காக மட்டும் தினசரி ரூ.50 வரை செலவழிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே, அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டும்.

அல்லது, அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக பஸ்பாஸ் வழங்கிட வேண்டும் எனக்கோரி திங்களன்று நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சக்தி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தை தொடர்ந்து அக்கல்லூரி முதல்வர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரிரு தினங்களில் பஸ்பாஸ் வழங்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave A Reply

%d bloggers like this: