பாவம் பொன்னார்

மோடி எனும் வாராது வந்த மாமணியை புகழ்ந்து பரணி பாடி வந்த,வரும் கூட்டம் பிடித்திருக்கும் அடுத்த சர்வரோக நிவாரணி நீட் தேர்வு.நீட் எதிர்ப்பு கூட்டத்திற்கு எதிரான ஆக்ரோஷ பதிலடி கூட்டம் நேற்று அசுரர்கள் மட்டுமன்றி முப்பத்துமுக்கோடி தேவர்களும் நடுங்கும் அளவுக்கு நடந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

அதில் மதிப்புக்குரிய மத்திய அமைச்சர் பொன்னார் பல புள்ளிவிவரங்களை கேப்டன் விஜயகாந்த் போல எடுத்து வீசி ருத்ர தாண்டவமாடினார்.ஆந்திராவை பார் ,டெலிங்கானாவை பார்,மானம் கெட்டவர்களே பீகாரையாவது பாருங்கள் என்று பிஹார்,தமிழகம் இரண்டையும் மட்டம் தட்டினார்.அதனை கூட மன்னித்து விட்டு விடலாம்.ஆனால் புரியாத புதிர் ஒன்று உண்டு ..

அவருக்கு சில பதில்கள்.அரசின் அடிப்படை கடமைகள் என்ன என்று இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கும் பொன்னாருக்கு புரியவில்லையே என்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது .அவர் சுட்டி காட்டிய மாநிலங்களில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் இருவதில் இருந்து நாப்பது சதவீதம்.தமிழ்நாட்டில் அது இரு சதவீதத்துக்கும் குறைவு.அதவாது ஒன்றாம் வகுப்புக்கு தமிழ்நாட்டில் சேரும் பத்து லட்சம் மாணவமானவர்களில் 990000 பேர் பத்தாவது முடிக்கிறார்கள்.அதன் பிறகு மிக பெரும்பான்மையானோர் பிளஸ் ஒன்சேருகிறார்கள். குறிப்பிட்ட சதவீதம் டிப்ளோமா படிப்புகளுக்கு செல்கிறார்கள்.பிளஸ் டூ முடித்த மாணவ மாணவிகளில் அதிகமானவர்கள் கல்லூரிகளுக்கு செல்கிறார்கள்.நாட்டில் தமிழ்நாட்டுக்கு தான் GER இல் முதலிடம் .

அவர் குறிப்பிட்ட மாநிலங்களில் பல லட்சம் மாணவர்கள் குறிப்பாக பெண்கள் பள்ளிகளை விட்டு எட்டாவதுக்கு முன்பே நிறுத்தப்படுகிறார்கள். இந்த மாநிலங்கள் தமிழ்நாட்டை பார்த்து கற்று கொள்ள வேண்டுமா அல்லது நாம் அவர்களை பார்த்தா என்று கொஞ்சம் சிந்திப்பீர்களா பொன்னார்?

நீட் என்ன என்று உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன்.இதுவரை ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்காமல் நேரடியாக அமைச்சர்,ராஜயசபா எம் பி ,முக்கியத்துவம் வாய்ந்த துறை,தனி பொறுப்பு ,இப்போது பாதுகாப்புத்துறை கேபினட் அமைச்சர் என்று நிர்மலா சீதாராமன் முன்னேறி இருப்பது தான் நீட் வழி.இதனை நிர்மலா சீதாராமன்கள் விழுந்து விழுந்து ஆதரிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் பொன்னார் ஆதரிப்பதை விளங்கி கொள்ளவே முடியவில்லை.

மோடி,அமித் ஷா இதே போல இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்தவர்கள் தான்.கட்சியில் சேர்ந்து பொறுப்புகள் வகித்து,பொது கூட்டங்கள் போட்டு,கூட்டத்தை கூட்டி,போராட்டங்கள் நடத்தி,பல தேர்தல்களில் பங்கு பெற்று.கட்சிக்காரர்களின் சுகம்,துக்கத்தில் முழு பங்கெடுத்து,கொள்கைகளை விளக்கி(ஒரு பேச்சுக்கு )1998 இல் அமைச்சராக இருந்து ,பாஜக வின் தனி குரலாக இந்த முறையும் இருந்தும் உங்களை விட நிர்மலா சீதாராமன் எப்படி உயர்வு என்பதை உணர்ந்து கொண்டால் ஏன் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்பது விளங்கும்.இதை போன்ற ?தகுதி,?தரம்,திறமை என்று வருவதை ஒரு 15 சதவீதம் பல்லை கடித்து பொறுத்து கொள்ளலாம். ஆனால் நூறு சதவீதம் அப்படி என்றால் உங்கள் நிலைமை என்னாவது ?

மோடி வெற்றி பெற்ற பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நிர்மலா சீதாராமன் முதல்வராக முன் நிறுத்தப்படுவார் என்று திடீர் என்று ஒரு பேச்சு கிளம்பியது உங்களுக்கு தெரியும் தானே .அதே தான்
நீட் எவ்வளவு நல்லது,எளியவர்களுக்கு உதவுவது, கல்வியை மீட்பது ,தனியார் கொள்ளையை அழிப்பது, பின்தங்கிய மாவட்டங்களை சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் தருவது என்று திடீர் என்று இப்போது கிளம்பும்,உருவாக்கப்படும் குரல்களும்.

உங்களுக்கும் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் இடையே என்ன வித்தியாசம். அவர் முன் நிறுத்தப்பட சொல்லப்படும் காரணங்களுக்கும் நீட் ஆதரவு பொய்களுக்கு இடையே ஏதாவது வித்தியாசம் உண்டா ?

உங்களுக்கு இன்றும் தனி அமைச்சரவை கிடையாது.மக்கள் முன் நின்று ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றவர் நீங்கள்.தோல்வி அடைந்த ,இதுவரை ஒரு மக்களவை தேர்தலில் கூட வெற்றி பெறாத அருண் ஜைட்லீ நிதி மற்றும் பாதுகாப்புத்துறை பொறுப்புக்கு தகுதி வாய்ந்த ஒரே ஒருவராக இருப்பது தான் நீட் தேர்வு.

தேர்தலில் நிற்காத கூட்டணி கட்சியை சார்ந்த ,கார்கில் புகழ் ஆதர்ஷ் பிளாட்டில் ஒரு பிளாட் உள்ள முன்னாள் சுற்றுப்புறசூழல் அமைச்சராக இருந்த கார்கில் தியாகி சுரேஷ் பிரபு திடீர் என்று காலையில் கட்சியில் சேர்ந்து மாலையில் கேபினட் அமைச்சராக ஆனது தான் நீட் வழி .

உங்க வழி பிளஸ் டூ வழி.நீங்கள் எவ்வளவு கோச்சிங் போனாலும் பூனையை போல சூடு போட்டு கொண்டாலும் நீட் வழி ஜைட்லீ, மோடி, அமித் ஷா, சுரேஷ் பிரபு, நிர்மலா சீதாராமன்களுக்காக உருவாக்கப்பட்ட வழி. சரியான தகுதி என்று அவர்களே அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு,அவர்களுக்கு வேண்டியவர்கள் மட்டுமே இடம் கிடைக்க உருவாக்கிய வழி

அரசியலில் எந்த தேர்தலிலும் நிற்காத ,தலைமையின் கையை காலை பிடித்து பின்வாசல் வழியே மக்கள் முன் முதல்வராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற கேசுபாய் படேலை முதுகில் குத்தி விட்டு முதல்வர் ஆன மோடி வழி ,தோற்று விட்டாலும் மிக முக்கிய பதவியான நிதி மற்றும் பாதுகாப்புத்துறை வைத்திருந்த ஜைட்லீ வழி ,இப்போது பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா அவர்களின் வழி. இது தான் அவர்கள் சொல்லும் தரம், தகுதி, திறமை..!

இதற்காகவா இவ்வளவு ஆக்ரோஷமாக பொய்களையும்,பாதி உண்மைகளையும் கொட்டி கொடி பிடிக்கிறீர்கள்.

திரு. பூவண்ணன் கணபதி.

Leave A Reply

%d bloggers like this: