===மதுக்கூர் இராமலிங்கம்===
பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது இந்தியா வந்துவிட்டு போவது போல தமிழக பொறுப்பு ஆளுநர் என்று கூறப்படும் வித்யாசாகர் ராவ் அவ்வப்போது சென்னைக்கு விஜயம் செய்கிறார். பெரும்பான்மையை இழந்த நிலையில் சிறுபான்மை அரசாக பதவியில் தொங்கிக்கொண்டிருக்கும் எடப்பாடி அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையைத்தான் இப்போது சட்டவிரோதமாக ஆளுநர் செய்து வருகிறார்.

முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்திலேயே ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் மோடி அரசு தமிழகத்திற்கு ஒரு முழு நேர ஆளுநரை நியமிக்க மறுக்கிறது. பகுதி நேர ஆளுநரே போதும் என்ற நினைப்பில் அவ்வப்போது வித்யாசாகர் ராவை சென்னைக்கு அனுப்புகிறது. ஆளுநர் பதவி தேவையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, ஆளுநர் என்கிற ஒரு பதவி இருக்கும் நிலையில் அதற்கு ஒருவரை நியமிப்பதே நியாயமாக இருக்கும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், தமிழகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. அப்போது கூட ஆளுநர் சென்னையில் இருக்கவில்லை. ஓரிரு முறை வந்து எட்டிப்பார்த்துவிட்டு போனதுதோடு சரி.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் அடித்து பிடித்துக் கொண்டு சென்னைக்கு பறந்து வந்தது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தபோதுதான். இரு அணிகள் இணைவதில் இழுபறி நிலவிய போது ஆளுநர் சென்னை பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. தம்மை முதல்வராக நியமிக்க கோரியபோது, ஆளுநர் ஊட்டியிலிருந்து கோவைக்கு வந்து அப்படியே தில்லிக்கு சென்று பிறகு மும்பைக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். இன்னும் கொஞ்சம் நெருக்கடி கொடுத்திருந்தால் வெளிநாட்டிற்கே தப்பியிருப்பார். ஆனால் எடப்பாடியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் பதவியேற்பு விழாவில் கையைப்பிடித்து சேர்த்து வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த காட்சியை தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது. அப்போது ஆளுநர் முகத்தில் படர்ந்த வெளிச்சத்தில் ஆர்எஸ்எஸ் ஜொலிப்பு.
தற்போதுள்ள எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

அதிமுகவின் ஒரு பிரிவு அதாவது தினகரன் அணியைச் சேர்ந்த 19 பேர் எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையிலேயே சட்டமன்றத்தை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து இதை வலியுறுத்தினர். தினகரன் அணியினரும் ஆளுநரை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹருல்லா ஆகிய தலைவர்களும் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரினர். ஆனால் இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இதில் தலையிட முடியாது என்று அடம்பிடித்து வருகிறார். உள்கட்சி விவகாரம் என்ற பெயரில் குதிரை பேரத்திற்கு கூட அல்ல. கழுதை பேரத்திற்குத்தான் ஆளுநர் வழி வகுக்கிறார். பாண்டிச்சேரியில் வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களில் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் தாவிக்குதித்து எடப்பாடி பக்கம் வந்துவிட்டார்.

இப்படி இன்னும் பலர் தாவிக்குதித்து வரவேண்டும் என்பதுதான் ஆளுநரின் விருப்பம்.
பாண்டிச்சேரி பாதுகாப்பாக இல்லையென்பதால் குடகுமலைக்கு கூடாரத்தை மாற்றிவிட்டது தினகரன் தரப்பு. அடுத்து இமயமலை பக்கம் போகும் திட்டமும் இருக்கக்கூடும். இதை விமர்சிக்க எடப்பாடிக்கும் துணிச்சல் இல்லை. ஏனெனில் சசிகலா தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூவத்தூர் அடைப்பினால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றவர்தான் அவர்.

தமிழகத்தில் குட்கா வியாபாரம் செய்ய லஞ்சம் வாங்கியதை கண்டிக்கும் வகையில் குட்காவை கொண்டு வந்த திமுகவினரை தற்காலிக பதவிநீக்கம் செய்தால் எடப்பாடிக்கு மறைமுகமாக பெரும்பான்மை கிடைத்துவிடும் என ஒரு திட்டம் தீட்டப்பட்டது. நீதிமன்றம் அதற்கு ஆப்பு வைத்துவிட்டது. தினகரன் அணியினர் கொறடாவின் உத்தரவை மீறிவிட்டதாகச் சொல்லி மொத்தமாக காலி செய்ய முயன்றார்கள், அதுவும் நடக்கவில்லை.

கொறடாவின் ஆணை அவையில் மட்டும்தான் செல்லும் என அறியாத அறிவாளிகளிடம் யோசனை கேட்டால் இப்படித்தான் நடக்கும். அடுத்து எடப்பாடி அரசை ஆதரிக்காத பொதுமக்கள் உட்பட எல்லோரையும் இடைநீக்கம் செய்ய வழி இருக்கிறதா என்று யோசிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் குடியரசு தலைவரிடம் சென்று முறையிட்டனர். ஆளுநர்களின் குருவாக விளங்குகிற அவரும் ஆவன செய்வதாக கூறினாரே அன்றி ஆளுநருக்கு எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை. உள்துறை அமைச்சரிடம் முறையிட்டும் பயனில்லை. உள்ளூர் பாஜக மைக்செட்டுகள் ஆளுநரின் தாமதத்தை நியாயப்படுத்தி காது கிழியும் அளவுக்கு கத்தி வருகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் டிவி வெடித்து விடுமோ என்று பயப்படும் அளவுக்கு கூச்சல் போடுகின்றன.

தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது தங்களது அடிமைக்கூட்டத்தின் ஆட்சி தான் என்பதே பாஜகவின் நினைப்பு. அதனால் தான் சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக கடைந்தெடுத்த மதவெறியரும், சகிப்புத்தன்மை சற்றும் அற்றவருமான எச்.ராஜா என்பவரை நியமிக்க முயற்சி நடக்கிறது. அப்படி நடந்தால் சாரண, சாரணியர் இயக்கம் என்பது ஆர்எஸ்எஸ் ஷாகாவாக மாற்றப்பட்டுவிடும்.

பிரதமராக உள்ள மோடியின் அருளாசியின்றி ஆளுநர் இப்படிச் செயல்பட வாய்ப்பில்லை. பல மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்ததுபோல அதிமுகவை அணைத்து அழித்து அதன்மூலம் தமிழகத்தில் தாமரையை முளைக்க வைத்துவிடலாம் என்று சதித்திட்டம் தீட்டுகிறது பாஜக. அரசியல் சட்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டிய ஆளுநர் இந்த வேலைகளுக்கு துணை நிற்பது நியாயம் அல்ல.

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அறப்போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜாக்டோ – ஜியோ சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். வஞ்சிக்கப்பட்ட ஆத்திரத்துடன் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நெடுவாசல், கதிராமங்கலம் என விவசாயத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை குறித்து அதிமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. பொதுக்குழு கூடுகிறது என்று குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடிமைகள் கூடி என்ன ஆகப் போகிறது?

வெளியிலிருந்து அதிமுகவை குருபெயர்ச்சி இயக்குவதால், அந்தக் கட்சியில் சனிப்பெயர்ச்சி பலன்களே நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்ட எடப்பாடி அரசு நீடிப்பதும் அதற்கு ஆளுநரே அருளாசி வழங்குவதும் சட்ட விரோதமானது.

Leave A Reply

%d bloggers like this: