சென்னை:
சென்னையில் நாளை அதிமுக பொதுக்குழு கூட இருக்கும் சூழலில் பல்வேறு பரபரப்புகள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன அணியின் சார்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். காலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடை விதிக்க மறுத்ததோடு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்த வெற்றிவேலுக்கு ரூ 1 லட்சம் அபதாரமும் விதித்தது.

இதனை தொடர்ந்து வெற்றிவேல் இந்த தீர்ப்பை  எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு  முன்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் ( 7.15 மணிக்கு ) தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில்  டிடிவி தினகரன் அணியை சேர்ந்த கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார். அதில் அதிமுக சட்டவிதிகளின் படி அதிமுகவின்  பொது செயலாளருக்கு மட்டுமே பொதுக்குழு கூட்ட அதிகாரம் உள்ளதாகவும், தற்போது கூட்டப்படும் பொதுக்குழு கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் இதனை விசாரித்த பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் அதிமுக பொது குழுவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த விசாரணை அக்டோபர் 13 அன்று விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.

Leave A Reply