ஐதராபாத்,

ஜிஎஸ்டி கவுன்சிலின் 21 ஆவது கூட்டம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் சனியன்று நடைபெற்றது.இதில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் , மத்திய , மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். 8 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், ஆட்டோ துறை பொருட்களுக்கான செஸ் வரி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக அன்றாடம் பயன்படுத்தப்படும், 40 பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கான செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதற்கான சட்ட முன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதால், கார்களுக்கான ஜிஎஸ்டியை உயர்த்தவில்லை என கூறப்படுகிறது.

கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது,

ரப்பர் பேண்ட், இட்லி தோசை மாவு, வறுத்த பருப்பு, புண்ணாக்கு, கஸ்டர்ட் பவுடர், புளி, அகர்பத்தி, பிளாஸ்டிக் ரெயின் கோட், காதி மற்றும் கிராம வளர்ச்சி கழகத்திடம் இருந்து பெறப்படும் காதி துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியையும் நீட்டிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறிய ரக கார்களுக்கு செஸ் வரி உயர்த்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நடுத்தர கார்களுக்கு கூடுதலாக 2 சதவீத வரி விதிக்கப்படும். பெரிய அளவு கார்களுக்கு 5 சதவீதமும், சொகுசு ரக கார்களுக்கு 7 சதவீதமும் கூடுதலாக வரி விதிக்கப்படும்.

13 இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கான ஒட்டுமொத்த வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. வரி செலுத்த தகுதியான 70 சதவீதம் பேர் ஜிஎஸ்டி.யில் கணக்கு தாக்கல் செய்திருப்பதன் மூலம் ரூ.95 ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: