புதுதில்லி;                                                                                                                                                                                   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 2018 ஏப்ரல் 18 – 22 தேதிகளில் நடத்தலாம் என மத்தியக்குழுவிடம் முன்மொழிவது என அரசியல் தலைமைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த மாநாட்டில் பரிசீலனைக்கு வைப்பதற்கான ஆவணங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் பணியை அரசியல் தலைமைக்குழு துவக்கியிருப்பதாகவும் கூறியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் செப்டம்பர் 6, 7 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது.

                        இக்கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

தீவிரமடையும் பொருளாதார வீழ்ச்சி                                                                                                                                                                    ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு அச்சந்தரும்வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிதியாண்டின் கடைசி காலாண்டுக்காக மதிப்பிடப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி, அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு 5.7 சதவீதமாகும். இக்காலாண்டிற்கு தொழில் உற்பத்தியின் அட்டவணையும் 1.8 சதவீத வளர்ச்சி விகிதத்தையே காட்டுகிறது. 

ஏற்றுமதி அசைவற்று மந்தமாக இருக்கிறது. தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளின் வராக்கடன் 2017 ஜூன் மாத இறுதியில் (வட்டித் தொகையை சேர்க்காமலேயே) 8.26 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. வேளாண் நெருக்கடி ஆழமாகியிருப்பது தொடர்கிறது.  அனைத்துத்துறைகளிலும் வேலையில்லாக் கொடுமை அதிகரித்திருக்கிறது. சேவைத் துறையில் வெளியாகியுள்ள சமீபத்திய தரவு, பொருளாதார நடவடிக்கை சுருங்கி யிருப்பதைக் காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டிற்கு கேடு பயக்கக்கூடியவை என்பது மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதிகரித்துவரும் கிளர்ச்சிகள்                                                                                                                                                                   நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும்,  மதவெறி சக்திகளிடமிருந்து நாட்டின் அரசியலுக்கும் ஜனநாயகத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துகளுக்கு எதிராகவும் கிளர்ச்சிகள் அதிகரித்துக்கொண்டிருப்பது குறித்து வரும் செய்திகள் திருப்தி அளிப்பவைகளாக உள்ளன. பல்வேறு பிரிவு மக்களாலும் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் குறித்தும் அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஜன் ஏக்தா ஜன் அந்தோலன் என்னும் வெகுஜன மற்றும் வர்க்க அமைப்புக்கள் நடத்தவுள்ள செப்டம்பர் 18 அகில இந்திய சிறப்பு மாநாட்டிற்கும், செப்டம்பர் 28 அன்று வேலையின்மைக்கு எதிராக இளைஞர்கள் நடத்தவுள்ள அணிதிரட்டலுக்கும், நாடாளுமன்றத்தின் முன் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் நவம்பர் 9 முதல் 11 வரை நடத்தவுள்ள மூன்று நாள் மகத்தான காத்திருப்பு போராட்டத்திற்கும் அரசியல் தலைமைக்குழு தன் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

ரோகிங்யா முஸ்லிம் மக்கள் பிரச்சனை: மனிதாபிமான நெருக்கடி                                                                                                                            பிரதமர் நரேந்திரமோடி மியான்மர் தலைநகருக்கு சென்றிருந்த  சமயத்தில் ரோகிங்யா பிரச்சனையை எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்ப்புகள் இருந்தன. அது பொய்த்துப்போய்விட்டது. துரதிர்ஷ்டவசமாக, மியான்மரில் லட்சக்கணக்கான மக்கள்  தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளான வங்க தேசத்திற்கும், இந்தியாவிற்கும் புகழிடம் தேடி இடம் பெயர்ந்துள்ளார்கள். இப்பிரச்சனை இந்தியப் பிரதமருக்கும், மியான்மர் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும்போது எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் .அவர்களின் பேச்சுவார்த்தைகளின்போது இப்பிரச்சனை எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்திய அரசு, இதனை மனிதாபிமான பிரச்சனையாகக் கருதிட வேண்டும். இப்பிரச்சனையைத் தீர்த்திட உடனடியாக மியான்மர் மற்றும் வங்கதேசத்துடன் பேசிட வேண்டும். இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வந்துள்ள ரோகிங்யாக்களை அகதிகளாகக் கருதிட வேண்டும். அவர்களைத் திருப்பி அனுப்பிடக் கூடாது. இப்பிரச்சனையை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்திற்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கும்  எடுத்துச்சென்றிட வேண்டும். மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளுக்கும் இதனை எடுத்துச் சென்றிட வேண்டும்.

22வது அகில இந்திய மாநாடு                                                                                                                                                                               கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டினை 2018 ஏப்ரல் 18-22 தேதிகளில் ஹைதராபாத்தில் நடத்தலாம் என  எதிர்வரும் மத்தியக்குழு கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு முன்மொழியும். இம்மாநாட்டில் பரிசீலனைக்கு வைப்பதற்கான ஆவணங்கள் மற்றும் நிகழ்ச்சிநிரல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் தலைமைக்குழு விளக்கம்                                                                                                                                                          கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் சில ஊடகங்களில், அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில் நடந்ததாக சில செய்திகள் வெளியாகின. அவை குறித்து அரசியல் தலைமைக்குழு சார்பில் விளக்கம் அளித்து ஒரு குறிப்பும் பின்னர் வெளியிடப்பட்டது.

அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:                                                                                                                                                      செப்டம்பர் 6-7 தேதிகளில் நடைபெற்ற அரசியல் தலைமைக்குழு கூட்டம், அரசியல் அணி சேர்க்கையில் ஒரு மாற்றம் தேவைப்படுவதற்கான சூழல் உருவாகியிருப்பதாக தீர்மானித்தது என ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்சி அகில இந்திய மாநாட்டிற்கான நகல் அரசியல் தீர்மானத்தை தயாரிப்பதற்கான விவாதங்கள் தற்போதுதான் துவங்கியுள்ளன என்பதை தெளிவுபடுத்த அரசியல் தலைமைக்குழு விரும்புகிறது. கடந்த அகில இந்திய மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டபடி, பாஜகவை எதிர்த்து போராடுவது என்ற கட்சியின் பிரதான இலக்கை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து இறுதிசெய்யப்பட்டு, அந்த நகல் தீர்மானம் மத்தியக்குழுவின் முன்பு வைக்கப்படும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தனது விளக்கத்தை கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: