தூத்துக்குடியில் சுதேசி கப்பல் கம்பெனி ஒன்று (1906இல் என்று என் நினைவு) ஏற்பட்டது. அந்தக்கம்பெனிக்கு உயிர்நாடி, தேசபக்த ஜாம்பவான் ஸ்ரீ வ.உ.சிதம்பரம் பிள்ளை. அந்தக் கம்பெனி பி.ஐ.எஸ்.என். என்ற இங்கிலீஷ் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக நிறுவப்பட்டது என்பது கொள்ளைக்கார வியாபார கோஷ்டியாரின் எண்ணம். பி.ஐ.எஸ்.என். கப்பல் கம்பெனிக்கு கப்பல் கட்டணத்தை எவ்வளவோ குறைத்துப்பார்த்தும் இந்தியர்களில் பெரும்பான்மையோர் வெள்ளைக்காரக் கப்பலில் ஏறுவதுமில்லை. சாமான் அனுப்புவதுமில்லை. இந்தச் செய்தியை விஸ்தாரமாக வர்ணித்துப் பேசுவதில் பாரதியாருக்கு மிகுந்த உற்சாகம். “நம்ம ஜனங்களுக்கு நல்ல புத்தி வந்துவிட்டது.

இனிமேல் அவர்களுக்கு யாதொரு குறையும் ஏற்படாது” என்று ரிஷிகள் வரங்கொடு
ப்பதைப் போலப் பேசுவார். பின்னர், சிதம்பரம் பிள்ளை சிறைசென்றதும், கம்பெனி நிர்வாகம் ஊழல் நிறைந்து உடைந்து போனதும், திருநெல்வேலி கலகக் கேஸ் நடந்ததும் பழங்கதை. கடைசியாகச் சுதேசிக்கப்பல் கம்பெனிக்கு மிகுந்து இருந்தது ‘கோயாலண்டே’ என்னும் கப்பல் ஒன்றுதான்; இதை யாரிடம் விற்பது, எப்படி விற்பது? என்ற நிலைமைக்கு வந்துவிட்டது கம்பெனியின் நிர்வாகம். பிரெஞ்சு இந்தியாவில் ஒரு ஸ்தலமாகிய சந்திர நாகூர் என்னும் பட்டினத்தில் ( இது கல்கத்தாவுக்கு மேற்கில் இருக்கிறது) வசித்து வந்த புதுச்சேரி சட்டசபை மெம்பரான வங்காளி ஒருவரின் மூலமாய், இந்தக் கப்பலை விற்பதற்குப் பேரம் நடந்தது. இது 1913 இல் என்று நினைக்கிறேன். எந்த வெள்ளைக்காரக் கம்பெனி, சுதேசிக் கப்பல் கம்பெனியின் சீர்குலைவுக்கு முக்கிய காரணமாயிருந்ததோ, அதே பி.ஐ.எஸ்.என். கம்பெனியிடம் சுதேசிக்கப்பலை விற்கும்படி நேர்ந்தது. இதைப் பற்றிப் பேசும் பொழுது பாரதியாருக்கு ஆத்திரமும் துக்கமும் அடைத்துக்கொள்ளும்.

“ஏதோ ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு விற்று, இந்தத் தேசத்தின் நஷ்டத்தைப் போக்க இவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ? மானங்கெட்டவர்கள்! கப்பலைச் சுக்குச் சுக்காய் உடைத்துக் கடலில் மிதக்க விடுகிறதுதானே! இந்தத் தேசம் தாங்கும். மானம் பெரிது, மானம் பெரிது” என்று உள்ளம் பொங்கித் துடிப்பார் பாரதியார். ‘‘நடிப்புச் சுதேசிகள்’ என்று பாரதியார் பாடியிருக்கும் பாட்டுகளில் மானம் மானம் என்று அதையொன்றையே அவர் அழுத்திக் கூறியிருக்கிறார். மனிதனுக்கு உயிரைக்காட்டிலும் மானம் பெரிது என்று இடித்திடித்துச் சொல்லுவதில் பாரதியாருக்கு அலுப்புத்தட்டுவதேயில்லை. “மானமில்லாதவனுக்கு மரியாதை தெரியாது. அவன் ஒரு நாளும் வளர மாட்டான்” என்று அவர் அடிக்கடி சொல்லுவார். இடையே, நீலகண்ட பிரம்மசாரி என்பவர் புதுச்சேரிக்கு வந்தார். இவர் பாரதியாருக்கு எப்படிப் பழக்கமானார் என்பது எனக்குத் தெரியாது. பின்னர், திருநெல்வேலி சதியாலோசனை வழக்கில் இவர் முக்கிய எதிரியாயிருந்ததைச் சர்க்கார் தஸ்தாவேஜில் காணலாம். இந்த நீலகண்டர் – இருவருக்குக் கண்டம் மட்டும் கறுப்பல்ல; உடம்பு முழுவதுமே அட்டைக் கரி – புதுச்சேரியில் ‘சூர்யோதயம்’ என்ற பத்திரிகையை நடத்தினார். இந்தப் பத்திரிகைக்குப் பாரதியார் கட்டுரை தந்து உதவி செய்துவந்தார்.

நாங்கள் (பக்தர்களும் நண்பர்களும் கூடி) ஒரு நாள் பாரதியாரோடு வாதாடினோம். “ நீங்கள் ஏன் உங்கள் பழைய ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு எழுதப்படாது?” என்று கேட்டோம். “எழுதலாம்” என்றார் “எழுதுகிறதுதானே?” என்றோம். எழுத முடியாது என்று முடித்துவிடுவதைப் போலக் கண்டிப்பாய் பேசினார். பாரதியாரிடம் எங்களுக்கு அன்பு பாத்தியம், பக்தி பாத்தியம் ஏராளமாய் உண்டு. அவர் சொன்ன ஜவாப்பு எங்களுக்குத் திருப்தி உண்டாக்கவில்லை. மறுபடியும் கிளறிக் கேட்டோம். “பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா,” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டார். “ஆமாம்” என்று சொல்லி, நாங்கள் இன்னும் அழுத்தமாக வாயை மூடிக்கொண்டோம். “நீங்கள் பச்சைக் குழந்தைகள்; உங்களுக்குச் சங்கதி தெரியாது; ‘சுதேசமித்திரன்’ பழைய காலத்துப் பத்திரிகை. பாரதி எழுத்தைப் பிரசுரித்து, அது தன்கௌரவப் பெயரைக் கெடுத்துக்கொள்ளுமா? என்று சொல்லிச் சிரித்தார். இந்தக் கேலி சமாதானத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அடுத்த கேள்விக்கு இடம் வைத்துக்கொள்ளாமல் பாரதியார் சொன்னார்.

“எனக்கும் ‘சுதேசமித்திர’னுக்கும் கொள்கையில் வேறுபாடு, என் எழுத்தை உங்கள் பத்திரிகையில் போடுங்கள் என்று நான் அவர்களிடம் சொல்லுவது நியாயமாகுமா? மேலும், இப்பொழுதோ தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ‘நித்திய கண்டம்’ என் ஓர் எழுத்தின் மூலமாய்ச் சுதேசமித்திரனுக்கு ஆபத்து வந்தால் என்ன செய்கிறது? நான் எங்கெங்கே எழுதுகிறேனோ அதையெல்லாம் சர்க்கார் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ‘சுதேசமித்திரன்’ பேரில் அவர்கள் ‘லபக்’கென்று பாய்ந்தாலும் பாய்வார்கள். இப்பொழுது ஒழுங்காக நடக்கிற பத்திரிகை ‘சுதேசமித்திரன்’ ஒன்றுதான். என்னால் அதற்கு ஏன் ஆபத்து வர வேண்டும்?”

எங்களில் ஒருவருக்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் ஜாஸ்தி; “அவர்கள் உங்களை எழுதும்படி கேட்டார்களா?” என்றார் அவர்.கேட்காதவற்றைச் ‘சுதேசமித்திரன்’ நிர்வாகிகளின் பேரில் போட்டாலொழிய, அந்த நண்பருக்கு மனச்சமாதானம் உண்டாகாது போலத் தோன்றிற்று. பாரதியார் நேருக்கு நேராக யாருடனும் சண்டை போடுவார்; யாரையும் கண்டிப்பார்.ஆனால், எதிரில் இல்லாதவர்களைப் பற்றி அவதூறு பேசும் கெட்ட வழக்கம் அவரிடம் துளிகூடக் கிடையாது. ‘சுதேசமித்திரன்’ ஆபிசிலிருந்து எனக்கு ஏன்எழுத வேண்டும்? நீங்கள் அவர்கள் பேரில் வீண்பழி சுமத்தப் பார்ப்பது தவறு. பாரதி உங்களுக்குப் பெரியவன். அவர்களுக்கும் பெரியவனாயிருக்க வேண்டுமென்பதுண்டோ? உலகமறியாத பச்சைக் குழந்தைகள்” என்று முடித்தார். இந்தப் பதில் எங்களுக்கு ஒருவாறுதான் சமாதானத்தைத் தந்தது. பாரதியார் ‘சுதேசமித்திரன்’ நிர்வாகிகளை ஆதரித்துப் பேசினாலும் அவருக்குகிருந்த மனக்குறையை அந்தப் பேச்சு ஒருவாறு வெளிக்காண்பித்துவிட்டது.

எங்களுக்கோ ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. ஆனால் என்ன செய்கிறது? 1910-1911 ஆம் வருஷங்களில், பாரதியாரின் பெரும் கீர்த்தியும் நாடு முழுவதும் பரவவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுபவர் என்று மட்டும் தெரியும். இலக்கியத்தையும் அரசியல் போராட்டத்தையும் பிரித்துப் பார்த்து, பாரதியாரின் இலக்கிய மேதைமையை, கல்வித்திறனை அளந்து பார்க்க அப்பொழுது முடியாமற்போனால், அதைப்பற்றி இப்பொழுது யாரும் நிஷ்டூரம் பேசலாகாது. ரொமென் ரோலண்டு என்ற பிரெஞ்சு ஆசிரியரின் மேதையை உலகம் ஒப்புக்கொள்ளச் சுமார் நாற்பது வருஷங்கள் செல்ல வேண்டியிருந்தது. 1905-1910 இந்த வருஷங்களுக்குள் பாரதியாரின் மேதைமையைத் தமிழ்நாட்டு ஆசிரியர்களும், மற்றவர்களும் தெரிந்துகொள்ளாதது பெருந்தவறாகாது.

(வ.ரா.எழுதிய மகாகவி பாரதியார் நூலிலிருந்து)

Leave A Reply

%d bloggers like this: