சென்னை, செப். 10 –
போக்குவரத்துக் கழகங்களின் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் சனிக்கிழமையன்று வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், டிஎம்டிஎஸ்பி, பிடிஎஸ், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிடபுள்யுயு ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சுமார் 22 ஆயிரம் பேருந்து களை இயக்கி வருகின்றன. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட மிகச்சிறந்த போக்குவரத்து சேவையை தமிழக மக்களுக்கு அளிப்பதில் தமிழக போக்குவரத்துக் கழகங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன. தமிழக மக்கள் நலன் கருதி நஷ்டமான வழித்தடங்கள் என்ற போதிலும் கிராமப்புறங்களுக்கு பேருந்து இயக்கம், நகரப்பேருந்துகளாக 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு இலவச பயணச்சேவை அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துக் கழகங்கள் சேவைத்துறை என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை அரசு ஈடுகட்டவேண்டும். ஆனால் அரசு போதுமான நிதியுதவி செய்யாத காரணத்தால் போக்குவரத்துக் கழகங்களின் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. 75 சதவீதத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் காலாவதியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. மறுபுறத்தில் போக்குவரத்துக் கழகங்களின் நிதிபற்றாக்குறைக்கு கழக நிர்வாகங்கள் போக்குவரத்துக் கழக தொழி லாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை நிதி போன்றவற்றை செலவு செய்வதுடன் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் ஆயுள்காப்பீடு, அஞ்சல் காப்பீடு, கூட்டுறவு நிறுவனங்களுக்காக பிடிக்கப்படும் பணம் போன்றவற்றையும் செலவு செய்துவிட்டன.

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத்தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்கவேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை உரிய கணக்கில் சேர்க்கவேண்டும் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அரசிடம் 2016 அக்டோபர் மாதம் தொழிற்சங்கங் களால் கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் அரசு இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கடந்த 2017 மே மாதம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இவ்வேலைநிறுத்தத்தை யொட்டி மே மாதம் 16ஆம் தேதியன்று கல்வித்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு 2017 செப்டம்பர் மாத இறுதிக்குள் நிலுவைத்தொகைகள் முழுமையாக வழங்கப்படும்.

பணியாளர்களின் சம்பளத்தில் சட்டப்பூர்வமாக பிடித்தம் செய்யப்படும் தொகையை சம்பந்தப்பட்ட இணங்களில் செலுத்துவது குறித்தும் கொள்கைரீதியான முடிவெடுத்து 3 மாதங்களில் அறிவிக்கப்படும். போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலையை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப் பட்டு அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்த நிலையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்தன. இதற்கு பின்பு பலகட்ட பேச்சு வார்த்தைகள் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. வேலைநிறுத்தத்தின் போது ஏற்பட்ட உடன்பாட்டின்படி 3 மாத காலம் நிறைவடைந்து விட்டது. ஆனாலும் கூட இதுவரை போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான நிதியை வழங்கவோ, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்தை செலவழிப்பதை நிறுத்திடவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி பணம் ரூ.2200 கோடி, பங்களிப்பு ஓய்வூதிய பணம் ரூ.1700கோடி, பணிக்கொடை நிதி ரூ.750 கோடி, கூட்டுறவு நிறுவனங்களுக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணம் ரூ.300 கோடி,விடுப்பு சம்பளம் ரூ.300 கோடி என சுமார் 5500 கோடி தொழிலாளர்களின் பணம் சட்டவிரோதமாக செலவு செய்யப்பட்டுவிட்டது. மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பணம் சுமார் ரூ.1200 கோடி நிலுவை உள்ளது. வேலைநிறுத்தத்தின் போது அரசு ரூ.1250 கோடி நிதி வழங்கியது. அதற்கு பின்பு நிர்வாகச் செலவிற்காக தொழிலாளர்கள் பணம் ரூ.600 கோடி உரிய கணக்கில் செலுத்தப்படாமல் செலவு செய்யப்பட்டுள்ளது. நடைபெறும் பேச்சுவார்த்தையிலும் இது சம்பந்தமாக எவ்வித உத்தரவாதமும் கொடுக்க அரசோ, அதிகாரிகளோ முன்வரவில்லை.

மேலும் நடைபெறும் ஊதிய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் ஊதியம் மற்ற துறை ஊழியர்களை விட குறைவாக உள்ளது. அதை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்திய போதும் அதை சரிசெய்யாமல் மேலும் குறைவான ஊதியத்தை வழங்குவோம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. மிக கடுமையான பணியினை செய்துவரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அனைத்து துறை ஊழியர்களை விட குறைவான ஊதியம் வழங்குவது மிகப்பெறும் வஞ்சனையாகும். அத்துடன் பிரதான கோரிக்கைகளான 01.04.2003க்குப்பின் பணிநியமனம் செய்யப்பட்ட தொழிலாளர் களுக்கு வருங்காலவைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கவும் அரசு முன்வரவில்லை. கடந்த காலங்களில் தினக்கூலி ஊதியம், மிகைநேர ஊதியம் சம்பந்தமாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் அமலாக்க மறுத்து வருகின்றனர். அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களின் நடவடிக்கை மிக கடினமாக பணிசெய்யும் இத்தொழிலாளர்களை வஞ்சிக்கும் அடிப்படையிலேயே உள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக அரசு விரும்பும் அடிப்படையிலான ஒப்பந்தத்தை உருவாக்க பல சங்கங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் அடிப்படையில் பலருக்கு கடந்த ஒருமாதகாலமாக வேலை பார்க்காமல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்களில் 5 ஆயி ரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரியாமல் ஊதியம் பெற்று வருகின்றனர். இது தவறு என சுட்டிக்காட்டி வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலனை மறுப்பதற்காக மேலும் சில சங்கங்களுக்கு OD கொடுத்துள்ளது மிக மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும். அரசின் இந்த நடவடிக்கையை தொழிற்சங்க கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன், இப்போக்கை கைவிடவேண்டுமென வலியுறுத்துகிறது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நிதியால் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் நிதியில் செயல்படும் இம்மருத்துவக் கல்லூரியை அரசு எடுத்துக் கொள்வதாக முதலமைச்சர் தன்னிச்சையாக அறிவித்து ள்ளதையும் கண்டிப்பதுடன், முதலமைச்சரின் அறிவிப்பை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். மேற்கண்ட சூழ்நிலையில் போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கவும், தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளை தீர்க்கவும் அரசை வலியுறுத்தி 09.09.2017 அன்று வேலைநிறுத்த அறிவிப்பு கொடுப்ப தென தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவுசெய்கிறது. இதுபோன்ற சூழ்நிலை உருவாவதற்கு அரசின் நடவடிக்கையே காரணமாகும். எனவே தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டுமெனவும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக முதன்மைச் செயலாளர், மேலாண் இயக்குநர், பொது மேலாளர் உள்ளிட்டோருக்கு அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் மேற்கண்ட தீர்மானத்தை அனுப்பி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: