நீட் தேர்வு ஏதோ தமிழகத்தின் பிரச்சனை என்பது போன்றும் பிற மாநிலங்கள் எதுவும் எதிர்க்கவில்லை, ஏற்றுக்கொண்டார்கள் எனவும் பாஜகவினர் பேசி வருகிறார்கள். ஆனால், இது மொத்தமும் பொய். பிற மாநிலங்களுக்கு தமிழகம் விலக்குக் கேட்க முடியாதல்லவா. எனவே, தமிழகத்துக்கு விலக்கு தாருங்கள் என தமிழகம் கேட்கிறது.

ஆனால், பாஜகவினர் என்ன சொல்கிறார்கள்? மாநிலப் பாடத்திட்டம் தரமாக இல்லையாம். அதை மாற்றிவிட்டால் சரியாகிவிடுமாம். மருத்துவக் கல்வியை தரப்படுத்தவே நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளார்களாம். அதிமுக அரசு என்ன சொல்கிறது? அரசே நுழைவுத்தேர்வு பயிற்சி அளிக்கும் என்கிறது. அரசுப் பள்ளிக்கூடங்களை தனியாருக்குக் கொடுத்தால் தரமாகிவிடும் எனச்சொல்லும் பாஜகவும், அரசுப்பள்ளிகளை தரமாய் நடத்த வக்கில்லாத அதிமுகவும் தரத்தைப் பற்றிப் பேசுவதுதான் நகைச்சுவையாய் இருக்கிறது. சரி, நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரமும், பள்ளிக்கல்வியின் தரமும் அதிகரிக்குமா? உண்மைகள் சொல்வதென்ன?

இப்போது நீட்டில் வெற்றி பெற்றவர்களில் கணிசமானோர் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதியோர் ஆவர். இவர்கள் அனைவரும் முழு ஆண்டையும் செலவழித்து, பயிற்சி மையத்தில் படித்து தேறியவர்கள். அதுமட்டுமல்ல, முதல் முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களிலும் அறுதிப் பெரும்பான்மை மாணவர்கள் பயிற்சிமையத்தில் படித்தவர்களே. இந்த பயிற்சி மையத்தில் படிக்கவேண்டுமெனில் குறைந்தது சில இலட்சங்களாவது வேண்டும்.  இதோ சில சிறப்பான பயிற்சி மையங்களின் பட்டியலும், அதில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல்.(கீழே) இது இந்திய அளவிலான தலைசிறந்த ஐந்து மருத்துவ நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களின் பட்டியல் மட்டுமே. தலைசிறந்த பத்து மையங்கள் பட்டியலை எடுத்தால், மொத்த மாணவர்களில் அநேகமாக 50 சதவீதம் அதற்குள் தான் இருப்பார்கள். ஆக, மொத்தப் பயிற்சி மையங்களையும் கணக்கில் எடுத்தால் நீட்டில் தேறியவர்களில் சுமார் 99 சதவீதமான மாணவர்களும் அடங்கிவிடுவார்கள்.

இதுதான் கல்வித்தரத்தை அதிகரிக்க மத்திய அரசு கொண்டுவரும் திட்டமா? ஆக, மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர் மட்டுமல்ல; மத்திய பாடத்திட்டத்தில் நவோதயா பள்ளியில் படித்தாலும், வேலம்மாள் பள்ளியில் படித்தா லும், மும்பை சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்தாலும், ஐஐடியினுள் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் படித்தாலும், பீகாரில் அரசுப்பள்ளியில் படித்தாலும் அல்லது குஜராத்தின் தரம் உயர்ந்த மத்தியப் பள்ளியில் படித்தாலும், மேற்படி பயிற்சி மையத்தில் படிக்காத எந்த மாணவரும் நீட்டில் தேர்ச்சி பெறமுடியாது எனும்போது, இது எப்படிதமிழகத்திற்கு மட்டும் எதிரான திட்டமாக மாற முடியும்? இந்தியாவில் எங்கு பிறந்தாலும், எங்கு படித்தாலும் காசுள்ளவனுக்கு மட்டும்தானே நீட்டில் இடம் கிடைக்கும்?

புள்ளி விபரங்களை அள்ளிவிட்டு பதில் சொல்லும் நீட் கனவான்கள் இந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லட்டுமே!

1. பஞ்சாப், மகாராஷ்டிரா, பீகாரில் இருந்து எத்தனை ஏழை மாணவர்களுக்கு நீட்டில் இடம் கிடைத்திருக்கிறது?

2. முதல் தலைமுறையாக மருத்துவக்கல்விக்கு மொத்த இந்தியாவிலும் எத்தனை பேர் இப்போது தேர்வாகியுள்ளார்கள்?

3. உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ்மக்களில் எத்த னை பேருக்கு நீட்டில் இடம் கிடைத்திருக்கிறது?

4. விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் என சமூகத்தின் அடித்தட்டில் உள்ள எத்தனை பேருக்கு நீட்டில் இடம் கிடைத்திருக்கிறது? அமிதாப் பச்சனும் விவசாயிதான். மோடியும் டீக்கடைத் தொழிலாளிதான் என்றெல்லாம் கணக்கு காட்டக்கூடாது. சரியா?

5. மற்ற மாநிலங்களில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தோருக்கு இடம் கிடைத்திருக்கிறது. தமிழகப் பாடத்திட்டம் தரம் குறைந்தது என்கிறீர்கள். சரி. அப்படியெனில் கல்வியில் வளர்ந்த மாநிலமென நீங்கள் சொல்லும் ஒடிசா, குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் எத்தனை மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது?

6. தில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், இந்தூர், அகமதாபாத், சூரத், நொய்டா,கோட்டா, ராஜ்கோட் போன்ற வளர்ந்த நகரங்களில் இருந்து அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனரா அல்லது கிராமங்களில் இருந்தா?

7. தரமான சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் இருக்கையில் தரத்தை வியாபாரம் செய்யும் பயிற்சி மையங்கள் எதற்கு? மொத்த பாடத்திட்டத்தையும் சொல்லித்தரும் பள்ளிகள் போல் இல்லாமல், குறிப்பிட்ட கேள்விகளை மட்டும் மனப்பாடம் செய்து குறுக்கு வழியில் மாணவர்களை தேர்ச்சி பெறவைக்கும் பயிற்சி மையங்களை தடை செய்யவேண்டும் எனச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

8. சி.பி.எஸ்.இ. மாணவர்கள் எல்லோரும் அறிவாளிகள் என்கிறீர்களே, அப்படியெனில் அங்கு பயிலும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் வகுப்பில் இருந்தே நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து இலட்சக்கணக்கில் கட்டணம் கட்டிப் படிக்கிறார்களே, ஏன்? சி.பி.எஸ்.இ யைவிடவும் தரமானதா அந்த நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள்? ஆக, அவர்களிடம் உள்ள திறமை க்கு பள்ளி காரணமா அல்லது பயிற்சி மையம் காரணமா? இழுத்து மூடிவிடலாமா பள்ளிகளை?

9. ஜெ.இ.இ. என ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டிக் களுக்கான நுழைவுத்தேர்வு போன்றதே இதுவும் எனச்சொல்லும் கண்ணியத்துக்குரிய கன வான்களே, அவையெல்லாம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள். ஆனால், அண்ணா பல்கலைக்கும் சென்னை பல்கலைக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வு என மத்திய அரசு நாளை அறிவித்தால் அதை எதிர்ப்பீர்களா அல்லது அதுவும் தரமானவர்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்பீர்களா?

10.தரமும், தகுதியும் உடையவருக்கு மட்டுமே உயர்கல்வியும், தொழிற்கல்வியும் அளிக்கப்பட வேண்டும் என்கிறீர்களே, எது தரம்? பிளஸ் டூ படித்துமுடித்துவிட்டு இரண்டு அல்லது மூன்றாண்டுகள் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயில்கிறார்களே, அதுவா தரம்? இதற்குப் பெயர்தான் சம வாய்ப்பா?

ஆக, பயிற்சி மையத்தில் பயிலும் இந்த ஒரு சதவீதம் மாணவர்கள் மட்டுமே தரமானவர்கள் எனில், இந்தியாவின் 99 சதவீத மாணவர்கள் தரமற்றவர்களா? இதுதான் புதிய இந்தியாவா?

11.தமிழ் மொழிவழிக் கல்வியில் படித்தவர் களுக்கு நீட் கேள்வித்தாள் எளிதில் புரியுமா? அதற்கான வழிகாட்டும் குறிப்புகளே கிடையாது என்கிறார்களே, இதுதான் மாநில மொழிகளை மதிக்கும் இலட்சணமா?

12.முதல் 250 ரேங்கில் தமிழகத்தில் இருந்து சி.பி.எஸ்.இ படித்த மாணவர்களில் ஒருவர் கூட வரவில்லையே, ஏன் தமிழகத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தரமில்லையா அல்லது சிறப்பு வாய்ந்த கோச்சிங் மையங்கள் இன்னும் இங்கு துவங்கப்படவில்லையா, எது காரணம்?

13.பத்தாண்டுகளாய் தமிழகத்தில் நுழைவுத் தேர்வே இல்லை. ஆகையால், பள்ளி மதிப்பெண்களை வைத்து மட்டுமே மாணவர்கள் மருத்துவக்கல்விக்கு சென்றார்கள். அதற்கும் முன்னர் மாநில நுழைவுத்தேர்வுதான் இருந்தது. இதனால், தமிழகத்தில் மருத்துவக்கல்வியின் தரம் குறைந்துவிட்டதா?

ஆலன் ஆகாஷ் ரெசோனன்ஸ் நாராயணா எப்ஐஐடிஜேஇஇ
முதல் நூறு மாணவர்களில் எண்ணிக்கை (எய்ம்ஸ்) 12 35 25 20 2
முதல் ஆயிரம் மாணவர்களில் எண்ணிக்கை (நீட்) 170 210 250 50 120
மொத்தம் தேறியோர் எய்ம்ஸ் 46 683 213 20 விபரம் இல்லை
மொத்தம் தேறியோர் நீட்/ ஏஐபிஎம்டி 3106 9629 1787 1200 500
ஓராண்டு கட்டணம் (ரூபாய்) 1,20,000 1,20,000 1,33,500 76,600 1,50,000.
இந்தியாவெங்கும் உள்ள கிளைகள் 18 110 100 + 500 120

கேள்விகள் எப்படி இருக்கும்?
ஆக, போட்டியில் இருந்து பலர் விலக்கப்படு கிறார்கள் என்பதைத்தாண்டி இந்த ”தகுத்தேர்வில்” என்ன இருக்கிறது? சரி, அந்தத் தகுதிதான் என்ன?  உதாரணத்துக்கு நீட்டில் உள்ள ஒரு மாதிரி வினாவை எடுத்துக்கொள்வோம்.

During the vapourization of some amount of water at 373K at atmospheric pressure which of the following statements is correct ?
a) Work is done by the steam – water system on the atmosphere
b) Work is done on the steam – water system by the atmosphere
c) The internal energy of the steam – water system increases
d) The internal energy of the steam – water system decreases
1. a, c only 2. b, d only 3. b, c only 4. a, d only

இது இயற்பியலில் உள்ள ஒரு மாதிரிக் கேள்வி. நீட்டில் உள்ள கேள்விக்கு ஒருவன் பதிலளிக்க வேண்டுமானால் அவனுக்கு பாடப்புத்தகங்கள் மட்டும் நிச்சயம் உதவாது. அதில் கரைத்துக் குடித்த மாணவருக்கும் அது சாத்தியமில்லை. ஏனெனில் இதற்கு விடையளிக்க ஒரு தனிப் பயிற்சி தேவைப்படுகிறது.  உயர்கல்வித்தரம் நிறைந்த பள்ளியில் கூட அத்தகைய பயிற்சியளிப்பது சாத்தியமில்லை. பாடம் சொல்லித்தந்து, மாதம் ஒரு தேர்வு நடத்தவே பள்ளிகளில் நேரமில்லாதபோது, நவோதயா பள்ளியானா லும் அது சாத்தியமில்லை என்பதால்தான் பயிற்சி மையங்களுக்கான மவுசு ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகிறது. ஆறாவது வகுப்பில் இருந்தே ஆன் லைன் மூலமாகப் பயிற்சி பெறவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

குறிப்பாக, ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டுமெனில், மூன்று கோணங்களில் பயிற்சி தேவைப்படுகிறது. ஒன்று, ஆங்கிலத்தில் தேர்ந்திருப்பது. இரண்டு, கேள்வியைக் கூர்மையாகப் புரிந்துகொள்வது. மூன்று, சரியானது போலவே தோன்றும் நான்கு விடைகளில் இருந்து பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது. இவை அத்தனை யையும் விட முக்கியப் பயிற்சி எதற்கெனில், குறைந்த நேரம், அதிகக் கேள்விகள் என்பதால் விரைவாகப் பதில் அளிப்பது என்ற திறன்சார்ந்த பயிற்சியாகும். இந்தப் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகள் இந்தியாவின் எல்லா மாணவர்களுக்கும் தரப்பட்டிருக்கிறதா என்பதை நீட்டை ஆதரிக்கும் மேதாவிகள்தான் சொல்லவேண்டும்.

மத்தியப் பாடத்திட்டத்தில் இதற்கான பயிற்சி ஓரளவு உண்டெனினும், ஜெஇஇ அல்லது நீட் என எந்த நுழைவுத்தேர்வாய் இருந்தாலும், தனிப்பயிற்சி மையங்களின் துணையின்றி தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை மிகச்சொற்பமே ஆகும். அதனால்தான், பள்ளிக்கூடங்களை மட்டும் நம்பாமல் அரசே பேராசிரியர்களைக் கொண்ட தனிப்பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டிய அவசியமிருக்கிறது.  தமிழக அரசு சார்பாக கடந்தாண்டே பயிற்சி நடத்தியிருந்தால், இந்த மரணத்தை தடுத்திருக்க லாமாம். இது ஒரு மேதாவியின் கண்டுபிடிப்பு. அரசுப்பள்ளியும், வேலம்மாள் பள்ளியுமே ஒரே தரத்தில் இல்லாதபோது, அரசு நடத்தும் நுழைவுத்தேர்வு பயிற்சியும், வேலம்மாள் பள்ளி நடத்தும் நுழைவுத்தேர்வு பயிற்சியும் மட்டும் எப்படி ஒரே தரத்தில் இருக்கும்? பயிற்சியளித்தோம், மாணவர்கள் தரமானவர்களாக இல்லையென்று தப்பித்துக்கொள்ள நடத்தப்படுவதே அரசு சார்பான பயிற்சிமையங்களாகும்.

அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில், அண்ணா பல்கலை.யின் ஒற்றைச்சாளர முறை மூலம் சேர்ந்து படித்துவந்த மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு வேலைசெய்யும் தகுதி இல்லையென புள்ளிவிபரம் வெளியிடுவதுபோல, கிராமப்புற மாணவர்களுக்கு தரமில்லையென நிச்சயம் ஒரு நாளில் அறிவிப்பார்கள்.இருபது வருடத்திற்கு முன்பு பிளஸ் டூ முடித்து, மருத்துவம் படித்தவரால் இன்றும் சிறந்த மருத்து வராக எய்ம்ஸில் பணிபுரிய முடியும் அல்லது அரசின் இந்திய மருத்துவ கவுன்சில் போன்ற சுகாதாரத்துறை யில் உயர் அதிகாரியாக பணிபுரிய முடியும் என்றால், 196 கட் ஆப் மதிப்பெண் பெற்ற எங்கள் அனிதாவால் முடியாதா? இருவருக்கும் கல்வித்தகுதியில் என்ன வித்தியாசம் இருக்கிறதென்று ஹெச்.ராஜா சொல்வாரா? பல வருடத்திற்கு முன்பு மருத்துவம் படித்த உங்களுக்கு இன்றைய தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கத்தெரியாது என்றால் அதை பாஜக தலைவர் தமிழிசை ஏற்றுக்கொள்வாரா?

எனவே, நீட் எனும் தேர்வு முற்றிலும் வியாபாரம் சார்ந்தது. கல்வியையும், சுகாதாரத்தையும் முற்றாகவணிக மயமாக்குவது என்பதே இதன் அடிப்படை. இதை உணர்ந்து கொண்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த மாணவர்களும் களத்தில் இறங்குவார்கள்!

Leave A Reply

%d bloggers like this: