தூத்துக்குடி, செப். 10-
தூத்துக்குடியில் 2018 பிப்ரவரி 17 முதல் 20 வரை நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் பேரணி பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்க உள்ளதாக ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். தூத்துக்குடியில் ஞாயிறன்று நடைபெற்ற மாநில மாநாட்டு தயாரிப்பு பேரவைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதற்காக தூத்துக்குடிக்கு வருகை தந்த ஜி.ராமகிருஷ்ணன் செய்தி யாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாநிலமாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-20 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஆகியோர் பங்கேற்கின்றனர். இறுதிநாளில் நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கிறார்.

கே.பாலபாரதி, பிரின்ஸ் கஜேந்திரபாபுவை மிரட்டுவதற்கு கண்டனம்

 தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு மாறாக நீட் தேர்வுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசிவருகிறார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. பாஜகவினரையேமிஞ்சும் அளவிற்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், அம்பேத்கர்-பெரியார் தேவையில்லை என்றும் அவர் பேசி வருகிறார். நீட் தேர்வால் தகுதி உயரும் என்று கூறி வரும் அவர், முன்பு தனது மகளுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் பேசி மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றது, சட்டமன்றத்திலேயே விவாதமாக மாறியது. இதை சரியான நேரத்தில் எங்கள் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி அம்பலப்படுத்தினார். இதனால் டாக்டர் கிருஷ்ணசாமியின் ஆத்திரம் அளவுகடந்துள்ளது. நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கருத்தால் எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் மிரட்டல் தொனியில் அவர் பேசிவருவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.இதேபோல, பொதுக்கல்வியை பாதுகாக்கவும், நீட் தேர்வு எனும் அநீதிக்கு எதிராகவும் போராடி வரும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவை பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மிரட்டும் வகையிலும், அவதூறாகவும் பேசி வருகிறார். இதுவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் மாநில கல்வித் திட்டத்தில் படிக்கும் ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. 1200 க்கு 1200 மதிப்பெண் பெற்றாலும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வில்லை என்றால் அவர்களது மருத்துவ கனவு பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்ணும் மெடிக்கல் கட்ஆப் 196.5 எடுத்திருந்தும் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெறாததால் மருத்துவக் கல்லூரி யில் இடம் பெறமுடியாத நிலையில் அரியலூரில் மாணவி அனிதா தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான கட்-ஆப் 191 என்ற நிலையில் வழக்கமான நடைமுறை கடைபிடிக்கப்பட்டிருந்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா சென்னையில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெற்றிருப்பார். இவரைப் போலவே பிளஸ் டூ தேர்வில் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்ற ஏராளமான மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்து வக் கல்லூரி, ஏழு எய்ம்ஸ் மருத்து வக் கல்லூரிகள், சண்டிகார் மத்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு பொருந்தாது. அதற்கு தனியாக சட்டம் உள்ளது என்று சுட்டிக்காட்டியஅவர், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் கட்ட ணக் கொள்ளையை தடுப்பதற்காக தனியாக மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். மாநிலத் தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட்தேவையில்லை என்றும் வலியுறுத்தினார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்ற வேண்டும், அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வைத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறைஅடக்குமுறையை ஏவி வருவதுடன் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறது. ஜனநாயக ரீதியிலான போராட்டங் களின் மீது தமிழக எடப்பாடி பழனி சாமி அரசின் காவல்துறை நடத்தி வரும் இத்தகைய அடக்குமுறைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  இதே கோரிக்கைகளை முன் வைத்து தமிழக எதிர்கட்சிகள் செப்டம்பர் 13 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களில் நடத்தவிருக்கிற ஆர்ப்பாட் டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்து அதை நடத்துவதற்கு அரசு நிதியை ஒதுக்கீடு செய்து கல்வி வியாபாரத்தை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. பொதுக்கல்வியை பாதுகாக்க போராடி வரும் கல்வி யாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவை பாஜக தலைவர் ஒருவர் மிரட்டும் வகையில் விமர்சித்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.

மோடி அரசின் பணமதிப்பு நீக்க நட வடிக்கையால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் மேலும் நிலைமை சிக்க லாகி பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல மாநிலங்களின் பிரதிநிதிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர். பெரும் பாலான பொருட்கள் மற்றும் சேவை களில் கூடுதலான வரி விகிதங்கள் அமல் படுத்தப்பட்டதால் அனைத்துப் பகுதியினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி அறிவிப்பிற்கு முந்தைய நிலைக்கு வரி விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாடுமுழுவதும் அதிகரித்துவரும் மதவெறி நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய ஜி.ராமகிருஷ்ணன், சிலநாட் களுக்கு முன்பு பெங்களூரில் முற்போக்கு சிந்தனையாளரும், மதவெறி எதிர்ப்பாளருமான மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பெங்களூரில் பேரா சிரியர் எம்எம்.கல்புர்கி கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.இத்தகைய படுகொலைகளை கண்டிப்பதற்கு பதிலாக வன்முறைகளை நியாயப்படுத்தும் வகையில் சங் பரிவார அமைப்பு களை சமூக வலைத்தளங்களில் கொண்டாடும் போக்கு கடுமையான கண்டனத்துக்கு உரியது என்றார். முத லமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக 19 தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் தனித்தனியாக கவர்னருக்கு கடிதம் அளித்துள்ள நிலையில் பெறும்பான்மை எம்எல்ஏ களின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார். இது குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து சட்டசபையை கூட்டி பழனிசாமி அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சிபிஎம், சிபிஐ, விடுதலைசிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சிகளின் சார்பில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

தங்கள் கோஷ்டி பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே அதிமுகவின் அணிகள் தொடர்ந்து தில்லியில் முகாமிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மூலம் முயற்சிகள் செய்தார்களே தவிர தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.17ஆயிரம் கோடி நிதியை பெறுவது, காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோருவது போன்ற மாநில பிரச்சனைகளுக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் புதிய பென்சன் திட்டத்தை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட நியாயமான கோரிக்கை களுக்காக ஆசிரியர்-அரசுஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு அளித்த வாக்குறுதி அடிப்படையில் ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை கவனத்தில் கொண்டு ஏற்கனவே அவர்களுக்கு அளித்த அரசு வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தினார்.

சந்திப்பின் போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சு ணன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply