தில்லி,

தில்லியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக வேலை பார்ப்பவர் விகாஸ் (40). முதலில் காவலராக பணி புரிந்த வந்த விகாஸ் தற்போது அதே பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சனியன்று அந்த பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி மதிய உணவு சாப்பிட்டுவிட்டு உணவுப் பையை வைக்க வகுப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்த விகாஸ் , சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.

வீட்டுக்கு திரும்பிய சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டு காணப்பட , பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி விகாஸ் பற்றி கூறியுள்ளார்.இதையடுத்து சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விகாஸை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளியன்று அரியானாவில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2 ஆம் வகுப்பு மாணவன் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு , பின்னர் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். இந்த பரபரப்பு ஓயும் முன்னரே , மீண்டும் அதே போன்ற மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply