திருப்பூர், செப்.10 –
அவிநாசி ஒன்றியம் அசநல்லிபாளையம் ஏ.டி.காலனியில் குடியிருக்கும் தலித் மக்களுக்கு பக்கத்தில் உள்ள குளம் நிரம்பிய நிலையில் போய் வருவதற்கான பாதை இல்லாமல் மூழ்கியுள்ளது. எனவே குளத்தின் தடுப்பணை மதகைத் திறந்துவிட்டு வழி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அவிநாசி, திருப்பூர் சுற்று வட்டார குளங்கள், தடுப்பணைகளில் நீர் நிரம்பி வருகிறது. இந்நிலையில் அசநல்லிபாளையம் தலித் மக்கள்குடியிருப்பு அருகே குளம் நிரம்பியுள்ளது. அங்கிருக்கும் நீர் தலித் மக்களின் குடியிருப்புக்கான பாதையையும் சூழ்ந்துவிட்டதால் அம்மக்கள் வெளியேறிச் சென்றுவர வழியில்லை. அத்துடன் மாற்றுப் பாதையையும் மாற்று சமூகத்தினர் அடைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பக்கத்தில் இருக்கும் குளத்தின் தடுப்பணை மதகைத் திறந்துவிட்டால் பாதை கிடைக்கும் என்பதால் தங்களுக்கு பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும் கிராமத்தினர் இங்கிருக்கும் தண்ணீரை திறந்து விடக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்ததுடன், மணல் மூட்டை
களை அடுக்கி தடுப்பு ஏற்படுத்திவிட்டனர்.

இதனால் தலித் குடியிருப்பில் நூறு குடும்பங்கள் தனித் தீவாக துண்டிக்கப்பட்டநிலையில் சிக்கியிருக்கின்றனர். தங்கள் கோரிக்கை குறித்து அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆபத்தான சூழலில் சிக்கியிருக்கும் மக்கள் ஞாயிறன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக சார் ஆட்சியர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நேரில் வந்து அவர்கள் குடியிருப்பைப் பார்வையிட்டு பாதை வசதி செய்து தருவதாக உறுதியளித்ததுடன், அசநல்லிபாளையம் தலித் மக்கள் குடியிருப்புக்கும் சார் ஆட்சியர் சென்றார். இதையடுத்து அந்த மக்களுக்கு பாதை ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply