தனுஷ்கோடி ராமசாமியின் சிறுகதையில் தலைமை மாந்தர்கள் சமூக அக்கறை உடையவர்களாக, இலட்சிய வாதிகளாக, மனிதநேயம் மிக்கவர்களாக போராட்டகுணம் கொண்டவர்களாக, தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பதை சென்றவாரம் பார்த்தோம். அவரது சிறுகதைகளில் துணை மாந்தர்கள், எதிர்முனைமாந்தர்கள், சிறப்பு நிலை மாந்தர்கள் போன்றோர் எப்படிப்படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தவாரம் காண்போம்.

துணைமை மாந்தர்கள்
கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை நில்லாது. இடையில் எங்கேனும் ஓரிடத்தில் தோன்றி, முதன்மை மாந்தருக்கு இயைவுற கருப்பொருளை நகர்த்திச் செல்பவர்கள் துணைமை மாந்தர்கள். ‘இளையநிலா’-வங்கி அலுவலர், ‘அந்தக்கவிதை நினைவில் நிற்கும்’ -தனசேகரன், ‘சட்டம்தாண்டிய நியாயம்’ -பாலசுந்தரம், ‘ரெட்டியார் சத்திரம்’ – சோமநாதன், ‘போதை’ – பேருந்துப் பயணி, ‘அழகின் ரகசியம்’ – தமிழாசிரியர், போன்றோர் துணைமை மாந்தர்களாக சிறுகதைகளுக்குள் வலம் வருகின்றனர்.

‘இளையநிலா’ கதையில், வங்கியில் பணியாற்றுபவர். கதை எழுதுகிறவர். அவன் ஒரு புரட்சிக்காரன் என மாந்தரை ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார். இக்கதையில் ஆவடத்தாய் என்ற பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அவமானம் தாங்காது இறந்துவிடுகிறாள். அவள் உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அச்சமயம் புரட்சிக்காரர், சமுதாயத்த அசிங்கம் பண்ணி லஞ்சம் வாங்கி, கருப்புப் பணம் சேத்து வாழ்ற கொள்ளக்காரப் பயக எல்லாம் செழிப்பா… இங்கே வாழ்றாங்க… பாவம் நல்ல கூலிக்கார ஜனங்க… அவள சீரழிச்சிட்டாங்களே.. பாவி சிதச்சிட்டாங்களே… (ப.185) என ஆதங்கப்படுகிறார்.

‘அந்தக்கவிதை நினைவில் சிற்கும்’ கதையில் இடம் பெற்றுள்ள தனசேகரன் தொழிலாளர்கள் உரிமைக்குப் போராடுகிறான். செம்படை சமூக அமைப்பில் ஈடுபடுகிறான். அரசியல், பொருளாதாரங்களில் தேர்ந்த அறிவுடையவனாக விளங்குகிறான். போராட்டங்களின்போது, வியட்நாம், கம்போடியா, நிகரகுவா, கியூபா, பிடல் காஸ்ட்ரோ, உலக சமாதானம் குறித்த கருத்துக்கள் பேசுகிறான். இறுதியில், மக்கள் உரிமைப் போராட்டத்தில் காவல்காரர்களின் தோட்டாக்களுக்குப் பலியாகிறான். ‘போதை’ கதை. பேருந்து நிலைய நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்து ஒன்று புறப்படத் தயாராகிறது. அதில் ஏற வேண்டிய பெண் மற்ற பயணிகளின் நேரம் மற்றும் சூழல் அறியாது காலதாமதம் செய்கிறாள். அவளுக்காக ஓட்டுனரும், நடத்துனரும் காத்திருக்கின்றனர். “ஒரு அலட்டல் பொம்பளைக்காக இவ்வளவு பேரு ‘தேமே’ன்னு காத்துக்கிட்டிருக்க வேண்டியிருக்கு. ஒரு ஏழை கூலி ‘பஸ்கொஞ்சம் நிக்கட்டும்’னு சொன்னா… இவனுக நிப்பாட்டுவானுகளா…?” (ப.460) என ஒருவர் ஆசேவமாகச் சீறுகிறார்.

சிறுகதைகளில் வரும் துணைமாந்தர்கள், தலைமை பாத்திரங்களுக்கு இணையானஉயர் பண்புகள் கொண்டவர்களாக உள்ளனர். கதையின் இறுதிவரை வருகின்றனர். சமூக ஆர்வலர்களாக, பெண்களிடத்து மதிப்பு உடையவர்களாகத் திகழ்கின்றனர். தலைமை மாந்தர்கள் மற்றும் துணைமை மாந்தர்களின் கருத்துருவாக்க அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் காணப்படவில்லை. கருப்பொருளின் ஆழத்திற்கு ஏற்பப் பாத்திரங்களை திறம்பட வடிவமைத்திருக்கிறார்.

எதிர்முனை மாந்தர்கள்:
முதன்மை மற்றும் துணைமை மாந்தர்களுக்கு ஊறு விளைவிப்பவர்களாக இருப்பவர்கள் எதிர்முனை மாந்தர்கள். பெண்கள், அடித்தட்டு மக்களை ஏமாற்றுபவர்கள், அரசு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள். ‘கஸ்ப்பா’-கஸ்ப்பா, ‘தரகன்பாடு’ – நம்மையா, ‘ஆயிரம் ஆண்டுத்தணல்’ – சாதி சங்கச் செயலாளர், ‘வழிகள்’ – எழுத்தாளன் வெண்ணிலவன், ‘திரியுரானுக’ -எழுத்தாளன் அமுதகவி, ஆகியோர் எதிர்முனை மாந்தர்களாகச் செயல்படுகின்றனர். கஸ்ப்பா கதையில், கஸ்ப்பா அரசு ஊழியராக பணியாற்றுகிறான். அரசுச் சலுகைகளை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கிறான். ஏழை பணக்காரன் என்று பாராது அனைவரிடமும் லஞ்சம் பெற்று மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறான்.

வழிகள் மற்றும் திரியுரானுக கதைகளில் முறையே இடம்பெற்றுள்ள வெண்ணிலவன் மற்றும் அமுதகவி போன்ற எழுத்தாளர்கள், தங்கள் கவித்துவத்தால் இளம் பெண்களை ஏமாற்றி, அவர்கள் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் பாத்திரமாக இருக்கின்றனர். போலி எழுத்தாளர்களின் முகத்திரை கிழிக்கும் பாத்திரங்களாக இவர்களைத் த.ரா.எடுத்துக்காட்டுகிறார். சட்டம் தாண்டிய நியாயம் கதையில் மாணவர்களுக்கு கேடு நினைக்கும் இரக்கச் சிந்தனை இல்லாத முகாம் அலுவலர் எதிர் மாந்தராகச் செயல்படுகிறார்.

ஆய்விற்கு உட்பட்ட எதிர்முனை மாந்தர்கள் வன்முறை, சூழ்ச்சி,நயவஞ்சகம், கொலை, கொள்ளை போன்ற நேரடிப் பாதகங்களில் ஈடுபடுபவர்களாக அமையவில்லை. புரையோடிக் கிடக்கும் சமூக குறைபாடுகளை ஏற்கும் பாத்திரங்களாக அமைந்துள்ளனர்.

சிறப்புநிலை மாந்தர்கள்
கதையின் முடிவில் இடம்பெற்று, சிக்கலுக்கானத் தீர்வை முன்வைப்பவர்கள் சிறப்புநிலை மாந்தர்கள் அல்லது கௌரவமாந்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சமூக மதிப்புடையவர்களாக காணப்படுவர்.கஸ்பா, புதிய பூ கதைகளில், த.ரா. சிறப்பு நிலை மாந்தராகச் செயல்படுகிறார். வசதி படைத்தவர்கள் ஏழைகளை அடிமைகளாக பாவிக்கின்றனர். அவர்களுக்குப் பயந்து ஒடுங்கிப் போவதால், மீண்டும் மீண்டும் துன்புறுத்துகின்றனர். தவறு இழைக்கும் பணக்கார வர்க்கத்தை ஏழைகள் துணிவோடு எதிர் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் முதலாளி வர்க்கம் அடங்கிப்போகும் என்பதைக் கஸ்ப்பா கதையில் வரும் சிறப்புநிலைமாந்தர் உணர்த்துகிறார்.

புதிய பூ கதையில், பூவாத்தாளை அவள் கணவன் ஞானவேல்ராஜன் குடித்துவிட்டு தினமும் அடித்துக் கொடுமைப்படுத்துகிறான். அவன் கொடுமையைத் தாங்க முடியாத பூவாத்தாள், ஞானவேலுவின் அண்ணனிடம் முறையிடுகிறாள். அதற்கு அவர், கணவன் அடித்தால் திரும்ப அடித்துவிடு என்கிறார். மேலும், தொட்டுத் தாலி கட்ன புருஷனத்தான் அடிக்கச் சொல்றேன். இப்ப இருக்கிற ஒரே மருந்து அதுதான். அப்படிச் செய்யாம அவனுக்கு வீடு போட்டுக் குடுக்கறது… ஆடு குட்டி விடறது…, எரும மாடு குடுக்கறது… எல்லாமே அவன நாசமாக்கறதுதான்… (ப.530) என்கிறார். கணவனின் கொடுமைகளுக்கு பெண்கள் அடங்கிப் போகவேண்டும் என்ற அவசியம் கிடையாது. வேலை இல்லாமல் ஊர் சுற்றிச் திரியும் கணவனை ஊக்குவித்தல் தவறு, மேலும் பெண்கள் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதை மேற்கூறிய பாத்திரம் தெளிவுபடுத்துகிறது.

பெண்கள்
தனுஷ்கோடியின் கதைகளில், பெண் மாந்தர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் துடிப்பும், வைராக்கியமும் நிரம்பியவர்களாக இருக்கின்றனர். கதைகளில், பெண்களின் பலவீனமான அழுகை, பயம், விரக்தியில் தற்கொலை செய்தல் குறித்த பதிவுகளும் காணப்படுகின்றன. ரோஷம் – மாரியம்மாள், நல்லதோர் வீணை செய்தே – சாந்தாமணி, அழகின் ரகசியம் -ருக்குமணி, நாரணம்மா – நாரணம்மா, சேதாரம் – ராமுத்தாய், வழிகள் – அல்லி, பரசவம் – நிர்மலா, இளையநிலா – சீதா, தூ- மாரியம்மாள் போன்ற பெண் மாந்தர்களின் பண்பு நிலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ரோஷம் கதையில், மாரியம்மாள், கணவனால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படுகிறாள். தன் இரண்டு குழந்தைகளோடு ஆதரவின்றி நிற்கிறாள். அச்சூழலில், மாரியம்மாள் நம்பிக்கைத் தளராது, தான் நடுத்தெருவில் நிற்கவில்லை. மனதில் ஈரமுள்ள கோடி மக்களுக்கு மத்தியில் நிற்கிறேன் என்கிறாள். கண்களில் கண்ணீரும் நெஞ்சில் சுமக்க முடியாத சோகமும் இல்லை. பரிபூரண சுதந்திரத்தோடு ஆனந்தமாக நிற்பதாகச் சூளுரைக்கிறாள்.

நல்லதோர் வீணை செய்தே கதையில், சாந்தாமணிக்கு குழந்தைப் பிறக்கவில்லை. அவள் கணவன், அவளின் தங்கையை மணந்து கொள்கிறான். சில ஆண்டுகள் கழித்து அவர்களுக்கும் குழந்தை இல்லாத நிலை ஏற்படுகிறது. அந்நிலையில், சாந்தாமணி, தன் கணவனின் தம்பி சுகுமாரை, திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாள். எனவே சுகுமாரிடம், சாந்தாமணி, “எனக்குக் கொழந்தை இல்லைன்னுதான் உங்க அண்ணன் எந்தங்கச்சியை ரெண்டாந்தாரம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இப்போ அவருக்குத்தான் குழந்தை இல்லைன்னு தெரிஞ்சு பெறகு நான் ஏன் ரெண்டாந்தாரம் கல்யாணம் பண்ணிக்கிடக் கூடாது? (ப.59) என ஆவேசப்படுகிறாள்.

‘அழகின் ரகசியம்’ கதையில், இடம்பெற்றுள்ள ருக்குமணி ஆசிரியை கணவன் மற்றும் மகனால் ஏமாற்றப்படுகிறார். இத்துயரைத் தாங்க இயலாத ருக்மணி, நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறது. உடல் தானாக தீப்பற்றி எரிகிறது. தணல் கட்டையாக மாறிவிடுவது போல் உள்ளது. இருபத்தியேழு வருட வைராக்கியம், தவம், எல்லாம் சாம்பலாகப் போய்விட்டது. உலகம் முழுவதும் பணம், கௌரவத்திற்காக வஞ்சனை பொய்களோடு தலைவிரித்த கோலமாக வெறிபிடித்து அலைகிறது. சிறிதளவும் நேர்மை, அன்பு, வெட்கம், வீரம் வேண்டாமா? உலகமே சுடுகாடாக இருப்பதுபோல் உணர்வதாகவும் ஆதங்கப்படுகிறார்.

இன்றையப் பெண்கள், குடும்ப உறவுகள், ஆண்களால் ஏமாற்றப்படுதல் மற்றும் சமூகச் சிக்கல்களை, பெருமளவு எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதனால் ஏற்படும் அவமானங்களைத் தாங்க இயலாத சில பெண்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளத் துணிகின்றனர். சமூகத்திற்காகத் தன் கணவன் போராடுகிறான் என்ற மன நிறைவும் பெருமிதமும் ஒரு பெண்ணிற்குத் தோன்றக் கூடும். இருப்பினும், பிறரால் கணவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடும் என்ற பய உணர்வும் அவளை இயல்பாகச் சூழ்ந்து கொள்கிறது. இதனை ‘இளையநிலா’ கதையில் வரும் சீதாமூலம் தெரியப்படுத்துகிறார்.

சீதாவின் கணவர் வங்கிப் பணியாளர். பெண்ணுரிமைக்குப் போராடுகிறார். அதற்கு சீதா, எனக்கும் கூலிக்கார ஜனங்கள் மேல் அனுதாபம் இருக்கிறது. தொழிற்சங்க வேலை, கிராமங்களுக்கு வகுப்பு எடுக்கும் வேலை என்று செல்லும் பொழுதெல்லாம் தடுக்கவில்லை என்கிறாள். “இப்ப போஸீஸ் அராஜகம், நீதிபதிகளின் கொடுமை… இத தடுக்கணும்ணு ஏதாவது செஞ்சிங்கண்ணா” ன்னு சொல்லிக்கிட்டே அவன் கால்கள் இரண்டையும் பிடிச்சிக்கிட்டுத் தேம்பி அழுதாள். வார்த்தைகள் பிஞ்சு பிஞ்சு வெளிவந்தது.” தீவிரவாதி… நக்சலைட்ன்னு சொல்லி இந்தப் பாவிக தீத்துக் கட்டிருவாங்களே…” அழுதாள்… அழுதாள்.. (பக்.185,186) எனத் த.ரா. சித்தரித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: