சென்னை, செப். 10 –
அனிதா மரணத்திற்கு நியாயம் கேட்ட மாணவர்களை சிறையில் அடைத்தது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக ரீதியில் போராடிய இந்திய மாணவர் சங்க மாணவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன், செயலாளர் பி.உச்சிமாகாளி விடுத்துள்ள அறிக்கைவருமாறு -மாநில பாடத்திட்டத்தில் படித்த லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை சிதைத்து மாணவி அனிதாவின் உயிரை பறித்த நீட் தேர்வைரத்து செய்ய கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவரக் கோரியும், கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர். இப்போரா ட்டத்தை ஒடுக்க தமிழக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் காவ ல்துறை மூலம் மிரட்டியும் வருகிறது.

நீதிமன்றமே ஜனநாயக ரீதியில் போராடலாம் என சொன்ன பிறகும் காவல்துறை மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். சென்னை நுங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று (9.9.2017) நீட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டத்தை வழி நடத்த சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், மாணிக்கம், லயோலா கல்லூரி மாணவர் அருண் ஆகிய மூவரையும் காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.  கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னை பெரம்பூர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட வடசென்னை மாவட்டத் தலைவர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் சுகைப், ராஜேந்திர பிரசாத், மணிகண்டன், தாரணி கைது செய்யப்பட்டுள்ளனர். பின்பு நீதிபதி உத்தரவின் பேரில் தாரணி மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.

மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் குமாரவேல், மாவட்ட செயலாளர் விக்கி மற்றும் தமிழரசன், தமிழ்செல்வன், அருண் பாண்டியன் ஆகியோர்கள் மீது ஐபிசி 143, 188, 341, 353 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறே திருப்பூர் மாவட்டச் செயலாளர் விமல் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குபதியப்பட்டுள்ளது. தமிழக அரசு மாணவர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலிக்காமல் சிறையில் அடைப்ப தால் போராட்டத்தை ஒடுக்க முடியாது. கல்லூரி மாணவர்களோடு, பள்ளி மாணவர்களும் களத்திற்கு வந்திருக்கின்றனர். மாநில உரிமையை பாதுகாக்க அடுத்த தலைமுறையின் கல்வி உரிமையை நிலைநாட்டிட நடைபெறும் போராட்டத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

மாறாக கைது செய்வது, ஒடுக்குவதை கைவிட வேண்டும். பொய்யாக போடப்பட்ட வழக்கை ரத்து செய்து மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும். மாணவி அனிதா வின் மரணத்திற்கு நீதி கேட்க தமிழகம்முழுவதும் 12 ஆம் தேதி மாவட்ட தலை நகரங்களில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பேரணி நடைபெறுகிறது. சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறவுள்ளது. அனைத்து ஜனநாயக சக்திகளும் மாணவர் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave A Reply