திருப்பூர், செப்.10-
அனைத்து நுழைவுத் தேர்வுகளின் அடிப்படை கல்வி மறுப்பே என்று சமச்சீர் கல்விக் குழு உறுப்பினர் ச.சீ.இராசகோபாலன் தெரிவித்தார். அனைவருக்கும் தரமான கட்டணமில்லா கல்வி, தாய்மொழியில் அனைத்துக் கல்வி, அனைத்து கல்விச் சட்ட அதிகாரங்களும் தமிழகத்திற்கே என்ற கொள்கைகளை வலியுறுத்தி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் தமிழக மக்கள் கல்வி உரிமைக் கருத்தரங்கு திருப்பூரில் சனியன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி தலைமை வகித்தார். முதுபெரும் கல்வியாளர் ச.சீ.ராசகோபாலனின் தொடக்க உரை காணொளியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியர்களுக்கே தெளிவாக இல்லாத நிலையில், மாணவர்கள் எவ்வாறு நீட் தேர்வை எழுத முடியும். இது அனைத்து மாணவர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய சுமையாகும். மாநில பாடத் திட்டப்படி மருத்துவப் படிப்புக்காக மூன்று பாடங்களில் 9 மணி நேரம் தேர்வெழுதி, 9 மணி நேரம் செய்முறைப்பயிற்சி செய்து பெறும் மதிப்பெண்ணை விட, வெறும் மூன்று, நான்கு மணி நேரங்களில் எழுதப்படும் நீட் தேர்வு எவ்வாறு சிறந்ததாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும். இந்தியாவில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் உரிமை அரசுக்கு உண்டு. கல்வி உரிமைச் சட்டப்படி அனைவருக்கும் சமமான கல்வியைத் தர வேண்டும். அனிதா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ள அவர்களுக்கு முழுமையான கல்வி அளிக்கப்படவில்லை என்பதே காரணம்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்து 8 ஆண்டுகள் ஆனபின்னும், மத்திய அரசால் தரமான கல்வியை அனைவருக்கும் வழங்க முடியவில்லை என்பதாலேயே இதுபோன்ற நீட் தேர்வுகள் கொண்டு வரப்படுகின்றன. அனைத்து நுழைவுத் தேர்வுகளின் அடிப்படை, கல்வி மறுப்பே ஆகும். தாய்மொழிக் கல்வியில் நல்ல தரமான மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்களை உருவாக்க முடியும். பொதுவான கல்வித் திட்டத்தால் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும். பொதுக் கல்வி சகோதரத்துவம் மிக்கது. ஆனால் இன்றைய சூழலில் பொதுக் கல்வியைத் தனியார் பள்ளிகளில் படித்தால் வசதி படைத்தவர்கள் என்றும், அரசுப் பள்ளியில் படித்தால் ஏழைகள் என்ற நினைப்பு மக்களிடத்தில் வந்துவிட்டது.

எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது. அதே நேரத்தில் புற்றீசல் போல பள்ளிகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தி, ஊருக்குத் தேவையான அளவில் மட்டுமே பள்ளிகள் இருக்க வேண்டும். உலகமயமாக்கல் காரணமாக நமது நாட்டில் கல்வி பயின்று விட்டு பிற நாட்டின் தேவைகளை நிவர்த்தி செய்யும் போக்கு உள்ளது. நமது சக்தி நமது நாட்டிற்கே என்ற எண்ணம் வரவேண்டும். தமிழ்நாட்டில் முதல் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் தாய்மொழிக் கல்விக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தாய்மொழிக் கல்வியே நிரந்தரமாக இருக்கும் என்றார். ஆழி செந்தில்நாதன் மொழி நிகர்மை உரிமைப் பரப்பியக்க செயலாளர் ஆழி செந்தில்நாதன் கருத்துரையில் பேசியது: அனிதா, மருத்துவம் படிக்க கனவு கண்டு, மாநிலப் பாடத் திட்டத்தில் போதிய மதிப்பெண்களை எடுத்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மனமுடைந்து போனார். எத்தனை ஆண்டுகள் நாம் நமது உரிமைகளுக்காக போராடுவது. நாட்டில் நடுத்தர மக்கள் கனவு காணக் கூடாதா, நீ எப்படி படிக்க வேண்டும் என்பதை நம்மை விட முட்டாள் வந்து கூறினால் நாம் கோபப்படக் கூடாதா, இதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியா சுதந்திரம் பெற்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திய யூனியன் என்று தான் உள்ளதே தவிர, இந்திய தேசம் என்ற வார்த்தை இல்லை. ஒன்றியத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் கல்வி, நிலம் போன்ற அடிப்படை உரிமைகள் உள்ளன. அவசரகால சட்டம் அமலில் இருந்த போது மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றனர். கல்வியில் நாம் நமது உரிமையை இழக்க வேண்டிய இந்நிலைக்கு அதுவே காரணம். நீட் தேர்வால் ஏழை, சாமானிய மக்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கம் கூட மருத்துவராகும் கனவு காண முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அனிதா மரணத்திற்கு பிறகும் நமது மாநிலத்தில் நீட்டை ஆதரித்துப் பேசும் சிலர், நமது கல்வித்தரம் சரியில்லை என்கின்றனர். நீங்கள் படித்து மருத்துவராகும்போது தரமாக இருந்த இந்தக் கல்வி, தற்போது தரம்சரியில்லை என்று எவ்வாறு சொல்கிறீர்கள்.

விதி எப்படி மாறுகிறது. நீட் என்பது கல்விப் பிரச்சனை மட்டுமல்ல, எதிர்காலத்தில் எதற்கும் உரிமை கொண்டாட முடியாது என்று சொல்லும் பாசிச திட்டமாகும். நமது
வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் திட்டமிட்ட சதியாகும். இவை ஒன்றுடன் ஒன்று இதில் இணைந்துள்ளன. தமிழகம் மட்டுமே இதை எதிர்த்து காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது. நாம் முதலில் பேசினால் அதற்குப் பிறகே பிற மாநிலங்கள் பேசுவார்கள். இத்தனை பிரச்னைகளுக்குப் பிறகும் நாம் எழுந்து நிற்கி
றோம் என்றால், நமது வரலாறு அவ்வாறு உள்ளது. அதை சிதைக்கவே மத்தியில் உள்ளவர்கள் முயலுகிறார்கள். இதை முறியடிக்காவிட்டால் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும். தமிழகத்திற்கு தன்னாட்சி அவசியம் என்பதை வலியுறுத்தும் இடத்தில் நாம் தற்போது உள்ளோம். நீட் என்பது நாம் எதையெல்லாம் இழக்கப் போகிறோம் என்பதற்கான தொடக்கம். நீட் தேர்வுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும், என்றார்.

Leave A Reply