திருப்பூர், செப்.10 –
இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.விமல் மீது காவல் துறையினர் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் சனியன்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.விமல்மாணவிகளின் அழைப்பை ஏற்று அங்கு சென்று அவர்களது போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். இந்த சம்பவத்தின்போது வளாகத்திற்குள் வந்த மாநகர காவல் துணை ஆணையர் கயல்விழி, உதவி ஆணையர்கள் அண்ணாதுரை, தங்கவேல் உள்ளிட்டோர் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.விமலைகடுமையாக மிரட்டி அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி செய்தனர்.

எனினும் மாணவிகள் காவல் துறையின் நடவடிக்கைக்கு எதிராக மாணவர் சங்கச் செயலாளர் விமலுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியை சரஸ்வதியிடம் காவல் துறையினர் பேசி விமல் மீது புகார் தரும்படி கேட்டனர். இதற்கிடையே போராட்டத்தை வாழ்த்திப் பேசிவிட்டு விமல் வெளியேறினார். ஆனால் பள்ளி வளாகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் அவரை உடனே பிடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்து கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த வாலிபர் சங்கத்தினர் எதிர்ப்பை அடுத்து அம்முயற்சியைக் கைவிட்டனர். எனினும் காவல் துறையினர் பழிவாங்கும் நோக்கத்தோடு அதற்குப்பின் அவர் மீது பள்ளித் தலைமை ஆசிரியையிடம் புகார் கடிதம் பெற்று, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, பணி செய்ய விடாமல் தடுத்தது, அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: