இந்தியா – இலங்கை தொடரின் 20 ஓவர் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் ஒரே ஒரு பரிசை மட்டும் தான் இலங்கை அணி பெற்றது. அதனைத் தொடர்ந்து வந்த அனைத்துப் பரிசுகளையும் இந்தியா தான் தட்டிச் சென்றது. இந்திய அணியின் கேப்டன் கோலி வரிசை கட்டி அந்த பரிசுகளை வாங்கிக் கொண்டு இருக்கும் போது வர்ணனையாளர் கோலியைப் பார்த்து ஆச்சரியப்படாதீர்கள், இன்னும் இருக்கிறது என்றார்.

ஆமாம் இந்திய அணியின் இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களும் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியா இலங்கைக்கு விளையாடச் செல்லவில்லை சாதனைப் படைக்க தான் சென்றது என்று அனைவரும் கூறும் அளவிற்கு பல சாதனைகளை இந்திய வீரர்களும் இந்திய அணியும் படைத்துள்ளது.

மின்னல் வேகம்…
மழைக்காலங்களில் மின்னல் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போய் விடும். ஆனால் அதன் தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தோனியின் ஸ்டெம்பிட்டும் அப்படி தான். பேட்ஸ்மேன் பந்தை தவறவிட்டு விட்டு திரும்பிப் பார்க்கும் போது ஸ்டெம்பில் உள்ள பவுல் தரையில் இருக்கும். தோனி மைதானத்தின் பாதியில் இருப்பார். இது அவுட்டா இல்லையா என்று பார்க்க மூன்றாவது நடுவருக்கு குறைந்தது மூன்று ரீவைண்டாவது தேவைப்படும். இப்படி தனது மின்னல் வேக ஸ்டெம்பிட் மூலம் 100 பேரை அவுட்டாக்கி புதிய உலக சாதனை படைத்திருக்கிறார். இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் அகிலா தனஞ்ஜெயனை ஸ்டெம்பிங் செய்து இந்த சாதனையை படைத்தார் தோனி.

இந்தப் பட்டியலில் இவருக்கு அடுத்த நிலையில் இலங்கையின் குமார் சங்கக்கரா (99), கலுவிதரனா (75), பாகிஸ்தானின் மொய்ன்கான் (73), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (55), இந்தியாவின் நயன் மோங்கியா (44) ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தோனி இப்போதும் ஆடிக் கொண்டு இருக்கிறார். 2019 உலகக்கோப்பை வரை ஆடுவார். எனவே தோனியின் இந்த சாதனையை முறியடிக்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தவிர்த்து சர்வதேசப் போட்டிகளில் அதிக முறை (74) ஆட்டமிழக்காமல் இருந்த வீரர், அதிக சர்வதேசப் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் (331 போட்டிகள்), ஒரு நாள் போட்டியில் 200 சிக்சர்களை அடித்த ஒரே ஒரு இந்திய வீரர், ஆறாவது வீரராக அல்லது அதற்கு கீழ் களம் இறங்கி அதிக ரன்கள் எடுத்தவர் (4601) உள்ளிட்ட பல சாதனைகள் இப்போதும் தோனியின் வசம் தான் உள்ளன.

ரன் மிஷின்…
இதுவரை நாம் பார்த்தவர் ஸ்டெம்புகளை சாய்ப்பதில் வல்லவர் என்றால் இப்போது பார்க்க போகிறவர் அப்படியே அதற்கு எதிரானவர். இவர் பேட்டிங் பிடிக்கும் போது பந்து ஸ்டெம்புகளுக்கு அருகில் செல்வது மிக மிகக் கடினம். இந்த ரன் குவிக்கும் எந்திரம் ஒலியின் வேகத்தை விட வேகமாகச் சென்று கொண்டு இருக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அனைவரின் சாதனைகளையும் தகர்த்தெறிந்து வருகிறார் விராட் கோலி.

இந்தத் தொடரில் 5 ஆவது ஒரு நாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் கோலி. 186 இன்னிங்சில் 30 சதங்களை அடித்துள்ள இவர் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார். பாண்டிங் 375 போட்டிகளில் செய்த சாதனையை கோலி 195 போட்டிகளில் செய்துள்ளார். இவர் விரைவில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர்த்து இந்தாண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியல் 20 ஓவர் போட்டிகளிலும் தொடர்ந்தது. 20 ஓவர் போட்டிகளில் சேசிங்கில் ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இலங்கையுடனான 20 ஓவர் போட்டியில் 82 ரன்களை கடக்கும் போது இவர் படைத்தார். இதே போட்டியில் 66 ரன்களை கடந்த போது அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து 15 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் 33ஆவது வீரராக இணைந்தார் கோலி.

இலங்கைக்கு எதிரான மூன்று விதமான போட்டிகளிலும் தொடரை வென்றதன் மூலம் அந்நிய மண்ணில் 3 விதமான கிரிக்கெட் தொடர்களையும் முழுமையாக வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது.  இப்படி இந்தத் தொடரில் தோனி மற்றும் கோலி மாறி படைத்த சாதனைகளை பார்க்கும் போது நமக்கே மூச்சு வாங்குகிறது. இந்த தொடர் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான தொடர். அவர் அணியில் தொடர வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பலர் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். அந்த கேள்விகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் தோனி.

இதனால் தோனி 2019 உலகக்கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார். அப்படி தோனியை மாற்ற வேண்டும் என்றால் தோனியை போன்ற மின்னல் வேகமாக ஸ்டெம்பிட் செய்பவரை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அது இப்போதைக்கு சாத்தியம் இல்லை. அதுவரையில் இவர்களின் தீராத பசிக்கு இரையாக இன்னும் எத்தனை சாதனைகள் காத்துக் கொண்டு இருக்கின்றன என்பது தான் தெரியவில்லை, 2019 உலகக் கோப்பை உட்பட.

Leave A Reply

%d bloggers like this: