புதுதில்லி, செப். 10-
ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் எஸ்எப்ஐ, ஏஐஎஸ்ஏ, டிஎஸ்எப் ஆகிய இடதுசாரி மாணவர் ஐக்கிய அணி 4 முக்கிய பொறுப்புகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் வகுப்பு வாதத்தையும், ஒடுக்குமுறையையும் மாணவர்கள் மத்தியில் திணிக்க முயன்ற சங்பரிவார் அமைப்புகளுக்கு ஜேஎன்யு மாணவர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தி பாடம் புகட்டியுள்ளனர்.  ஜேஎன்யு வளாகம் தேர்தலைப் போலவே வாக்கு எண்ணிக்கையின் போதும் கடைசி நிமிடம் வரை பரபரப்பாகவே காணப்பட்டது. மொத்தம் பதிவான வாக்குகள் 4 ஆயிரத்து 639. இதில் செல்லத்தக்கவை 4 ஆயிரத்து 620. செல்லாதவை 19 வாக்குகள். வாக்கு எண்ணத் துவங்கியதிலிருந்தே எஸ்எப்ஐ உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் முன்னிலை பெற்றனர். இரவு 2 மணியளவில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் தலைவராக இடதுசாரி ஐக்கிய அணி சார்பில் போட்டியிட்ட ஏஐஎஸ்ஏ- வைச் சேர்ந்த கீதாகுமாரி 1506 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வேட்பாளர் 1042 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். துணைத் தலைவராக ஏஐஎஸ்ஏ அமைப்பைச் சேர்ந்த சைமன் ஜோயா கான் 1876 வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு எதிராக போட்டியிட்ட ஏபிவிபியின் துர்கேஸ்குமார் 1028 வாக்குகள் பெற்றார்.  பொதுச்செயலாளராக எஸ்எப்ஐ வேட்பாளர் துக்கிராலா ஸ்ரீகிருஷ்ணா 2082 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஏபிவிபி யின் நிகுஞ்சி மக்வானாவால் 975 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இணை செயலாளராக டிஎஸ்எப் அமைப்பைச் சேர்ந்த சுபான்சு சிங் 1755 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். ஏபிவிபியின் பங்கஜ் கேசரி 920 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் ஏஐஎஸ்எப் வேட்பாளரும் தற்போதைய தலைவருமான அபராஜிதராஜ் 416 வாக்குகள் பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் என்எஸ்யுஐ வேட்பாளர் வர்ஷினிகா சிங் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வெறும் 82 வாக்குகளையே பெற்றார். நோட்டாவுக்கு 127 வாக்குகள் பதிவாகியிருந்தன. மேலும் 31 மாணவர் கவுன்சில்களுக்கான இடங்களுக்கும் தேர்தல் நடந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.  தேர்தல் முடிவு குறித்து தலைவராக வெற்றி பெற்ற கீதா குமாரி கூறுகையில், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை ஜேஎன்யு மாணவர்கள் பாதுகாத்துள்ளார்கள் என்றார். மேலும், காணாமல் போன மாணவர் நஜீப் முகமது, பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வெட்டப்பட்டது, புதிய மாணவர் விடுதி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவித்தார். பொதுச்செயலாளராக தேர்வாகி யுள்ள துக்கிரால ஸ்ரீகிருஷ்ணா கூறுகையில், ஜேஎன்யு அதிக அளவில் ஜனநாயகத் தன்மை கொண்டது என்றும், தினந்தோறும் ஏபிவிபியின் மூர்க்கத்தனமான கொள்கைகளுக்கு பதிலடி கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: