குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடுவோர் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிற ஒரு கொள்கைதான் அருகமைப் பள்ளி. கால்நடையாகவோ அரசுப் பேருந்துகளிலோ தனியார் பள்ளிகளின் வண்டிகளிலோ இதர வாகனங்களிலோ குழந்தைகள் நெடுந்தொலைவு சென்று திரும்ப வேண்டியிருப்பது பாதுகாப்பற்றது என்பதோடு, கற்றல் திறனையும் பாதிக்கிறது. வசதியுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வாகனக் கட்டணம் செலுத்திப் பள்ளிகளுக்கு அனுப்ப முடிகிறது.

பலர் தங்களது தேவைகளைச் சுருக்கிக்கொண்டு பணத்தைச் சேமித்துக் குழந்தைகளின் பள்ளிப் பயணச் செலவை ஈடுகட்டுகிறார்கள், இதனால் கடன் சுமைகளில் விழுவோரும் உண்டு. இதற்கும் வழியில்லாத குடும்பங்களின் குழந்தைகளுக்கோ பள்ளி செல்வதே பகல்கனவாகிவிடுகிறது. கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் அர்த்தப்பூர்வமாகச் செயல்பட வேண்டுமானால் அருகமைப் பள்ளிகளை அமைப்பது அரசின் ஒரு கொள்கையாகவே இருக்க வலி யுறுத்தப்படுகிறது. குழந்தைகள் எளிதில் சென்று வர ஏதுவாக, அவர்களது வட்டாரத்திலேயே, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே பள்ளிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. சொல்லப்போனால் அருகமைப் பள்ளி என்பது குழந்தைகளுக்கான ஒரு வாய்ப்பு அல்ல, அது அவர்களுடைய உரிமை.

அந்த உரிமையை அங்கீகரிக்கிற வகையில்தான், கேரளத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக, 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளை 8ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. 5ஆம் வகுப்பு முடிக்கிற குழந்தைகள் அதற்கடுத்த வகுப்புகளுக்காக வெகு தொலைவு செல்ல வேண்டியிருப்பதால் படிப்பை நிறுத்திக்கொள்ளும் சோகத்துக்கு இது முடிவுகட்டும் என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஒரு தனியார் பள்ளி நிர்வாகமோ தனது வருவாய் பாதிக்கப்படும் என்ற கவலையோடு, ஒரு குறிப்பிட்ட பள்ளியின் நிலை உயர்த்துவதற்கு 2015இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. கேரள உயர்நீதிமன்றம் அரசாணையைத் தள்ளுபடி செய்தது.

பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, முந்தைய அரசின் நடவடிக்கைதானே என்று அலட்சியப்படுத்தாமல், அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பள்ளியின் நிலையை உயர்த்திய நடவடிக்கையின் நியாயத்திற்காக வலுவாக வாதாடியது. அந்தந்த வட்டாரத்துக் குழந்தைகளின் தேவைக்காகவே இந்த நடவடிக்கை என்று நிறுவியது. அதன் பலனாக உச்சநீதிமன்றம் செப்டம்பர் 8இல் பிறப்பித்த ஆணையில், அரசின் நடவடிக்கை செல்லும் என்று அறிவித்துள்ளது. ‘14 வயது வரையில் கல்வி ஒரு அடிப்படை உரிமை. 10 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பள்ளி செல்ல 3 முதல் 6 கி.மீ. வரையில், அதற்கும் அதிகமான தொலைவு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ள கருத்து மிக முக்கியமானது. அருகமைப் பள்ளிகள் நாடுதழுவிய நடப்பாக மாறுவதற்கு கேரள அரசின் நடவடிக்கையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இட்டுச் செல்ல வேண்டும்.

Leave A Reply