விவசாயி –
யாரோ சொன்னார் –
தம் வழியைக் கண்டுகொள்வார் என்று,
தடையொன்றுமில்லாமல்
சோஷலிஸத்தைக் கட்டி எழுப்புவார் என்று.
ஆனால் இல்லை –
ரஷ்யாவில் கூட
உயரமான புகைபோக்கிகள்
நிமிர்ந்து நிற்கின்றன;
கருப்புப் புகைத் தாடிகள்
அவளது நகரங்களையும்
பொறியிலகப்படச் செய்கின்றன.
ஆகாயத்தில் அப்பம் சுட்டுத் தர
நமக்குக் கடவுள்கள் இல்லையல்லவா.
விவசாயிகளின் கூட்டத்தை
தொழிலாளி வர்க்கம்
நடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது.
முதலாளித்துவத்தின் சவத்தின் மீதுதான்
ரஷ்யாவின் ராஜ வீதி
கடந்து செல்கிறது,
உழைக்கின்ற வர்க்கத்துக்கு
வழிகாட்டிக்கொண்டு
லெனினும்.
வாய்ப்பேச்சுக்காரர்களான
மிதவாதிகளும் எஸ்.ஆர்.களும்
குவியல் குவியல்களாக வாக்குறுதிகளை
வழங்குகிறார்கள்.
தொழிலாளிகளின் உழைப்புச் சுவையை
அதிகரிக்கத் தயங்காதவர்கள் இவர்கள்.
லெனின், அவர்களது
கட்டுக் கதைகளுக்கு
முடிவு கட்டினார்.
கனன்றெரியும் உண்மையின் முன் அவர்களைக்
குழந்தையைப்போல அம்மணமாக
விட்டுச் சென்றுவிட்டார்.
“சுதந்திரம்”
“சோதரத்துவம்”
தொடங்கிய அவர்கள் பிதற்றல் பேச்சுகளை
லெனின் அவ்வளவு விரைவாக அகற்றினார்.
மார்க்ஸிஸத்தின் ஆயுதமணிந்து
போருக்குத் தயாராகியவாறு
உலகத்தில்
ஒரு போல்ஷ்விக் கட்சி
உதயமானது.
இப்போது இதோ
ஆடம்பர வாகனத்திலோ
கால்நடையாகவோ
ரஷ்யா முழுவதும் பயணிக்கிற
எழுத்துகளை
நீங்கள் எங்கும் காணலாம்.
ஆர்.சி.பி*
உடன் பக்கத்தில்
பி.என்னும் எழுத்து
அடைப்புக் குறிக்குள்ளிருக்கும்.
இன்று விண்வெளி ஆய்வாளர் வேட்டையாடுவது
சிவப்புச் செய்வாய் கிரகத்தை.
உயர்ந்த கோபுரங்களிலிருந்து
தொலைநோக்கிகளால் ஆகாயத்தைத் துழாவுகிறார்கள்.
ஆயினும் அந்தச் சாதாரண எழுத்துக்கள்
காகிதத்திலும் கொடிகளிலும்
பதின் மடங்குச் சிவப்புடன், ஒளிர்வுடன்
உலகத்தின் முன்னால் பிரகாசிக்கின்றன.

-மயாகோவ்ஸ்கி
*ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்)

Leave A Reply