பாட்னா,

பீகாரில் உள்ள தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலாவதியான இரத்தம் செலுத்தியதால் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் உள்ள தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலாவதியான இரத்தம் செலுத்தியதால் 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஜூனியர் மருத்துவர்கள் கூறுகையில், சமீபத்தில் நோயாளிகள் சிலர் இரத்தம் செலுத்தப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக, அவர்களின் உறவினர்கள் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அன்று நாங்கள் மற்றொரு நோயாளிக்கு இரத்தம் செலுத்திய போது அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தோம். இதையடுத்து இரத்த மாதிரிகளை ஆய்வு செய்த போது தான் காலாவதியான இரத்த பாக்கெட்டுகளில் தேதியும், பேட்ச் எண்ணும் மாற்றி அச்சிடப்பட்டு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது என்றனர். இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்தோஷ் மிஸ்ரா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாலேஷ்வர் சாகர் ஆகியோர் இணைந்து இது தொடர்பாக விசாரணை நடந்த 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். இந்த குழு விசாரணை மேற்கொண்டு ஒரு வார காலத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே , இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்டுள்ளேன். காலாவதியான இரத்த பாக்கெட்டுகளில் தேதி மாற்றி குறிப்பிடப்பட்டு முறைகேடு நடந்தது உண்மையென தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Leave A Reply