===சோழ. நாகராஜன்===                                                                                                                                                      வியாபாரம் என்பது எல்லா இடத்திலுமே உள்ளதுதான் என்றாலும் கலை உலகம் முழுக்க முழுக்க வியாபாரமாக ஆகிப்போவதும் ஒரு ஆபத்துதான். கலைகளின் கலையான சினிமா இன்னமும் நவீன உள்ளடக்கங்களை முயன்று பார்ப்பதில் பெரிய தயக்கங்கள் கொண்ட தமிழ் சினிமா உலகம் கோடிகளில் புரள்வது மட்டும் குறைந்தபாடில்லை…

கூடிக்கொண்டேதான் இருக்கிறது. எளிய முயற்சிகள் அரிதாகவே இப்போதும் இருப்பது ஒரு கலை மக்கள் பயன்பாட்டுக்கானதாக மிளிர்வதற்குப் பெருந்தடை என்பதில் ஐயமில்லை.
இளைஞர் ஒருவர் விளம்பரப்பட வடிவமைப்பாளராக இருந்தார். தனது வேலை நிமித்தமாக லண்டன் செல்லவேண்டியிருந்தது. அவர் அங்கே ஆறு மாத காலம் தங்கியிருந்தார். அப்போது நூற்றுக்கணக்கான திரைப்படங்களை அவர் பார்க்க நேர்ந்தது. அவர் இந்தியா திரும்பியபோது இந்திய சினிமாவையே புதிய பாதைக்குத் திருப்பிடும் உன்னதத் திரைக்கலைஞனாக உயர்ந்தார்.

அவர்தான் தனது பதேர் பாஞ்சாலியின் மூலம் உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பச் செய்த திரைமேதை சத்யஜித் ரே. அவரது அந்தப் படம் 1955 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அறுபது ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் நாம் அந்தப் படத்தையே உதாரணம் காட்டிக்கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது? சத்யஜித் ரே எனும் அந்தப் பெருங்கலைஞனின் மேதைமையையா அல்லது அதற்கு இணையாக இன்றளவும் இந்திய அளவிலும் தமிழிலும் நாம் இன்னொரு உன்னத முயற்சியை உலகுக்கு வழங்காத நமது பலவீனத்தையா?தமிழில் நல்ல முயற்சிகள் அறவே இல்லை என்று சொல்லிவிடவும் முடியாதுதான். ஆனால், தமிழ் சினிமா இன்றளவும் அது ஒரு கம்பீரக் கலை என்பதைவிடவும் கோடிகளில் புரளும் ஒரு கொடூர வணிகமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு கோடிகளில் தயாரிக்கப்பட்ட படம் என்று போட்டுக்கொள்வதில் எவ்வளவு பெருமிதம். இந்தப் பெருமிதம் உணர்த்துவது வேறு எதை? வெளியான முதல்நாள் இத்தனை கோடி வசூல் என்று மார்தட்டிக்கொள்வதும் அதுதானே? கோடிகள் என்றால் அதில் கறுப்பின் கை ஓங்கித்தான் இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தப் படம் நல்ல படம் என்று பேசிக்கொள்வதைக் காட்டிலும் இது எத்தனை கோடிகளைக் குவித்தது தெரியுமா என்று பெருமை பேசுவது சினிமாவை உருவாக்குகிறவர்கள் மத்தியில் மட்டுமல்ல, சினிமாவின் பார்வையாளர்களிடத்திலும் பரவலாக உள்ள வழக்கம். நல்ல சினிமாவை விரும்புகிறவர்களை, சமுதாய அக்கறையோடு கூடிய கலை ரசிகர்களை இது பெரும் வருத்தத்துக்கு உள்ளாக்குவதாகும்.

எல்லோர் மனங்களிலும் நூறு கோடி வசூல் எனும் பாக்ஸ் ஆபீஸ் கனவுதான். அண்மையில் தமிழில் வெளியான படங்களில் எந்தப் படத்திற்கு முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை ஒரு வெளிநாட்டு இணையம் பட்டியலாக வெளியிட்டுள்ளது. அது தரும் தகவலின்படி ரஜினி நடித்த, பா. ரஞ்சித்தின் கபாலி 21 கோடியை முதல் நாளிலேயே குவித்திருக்கிறது.

விவேகம் 16.5 கோடியாம். வேதாளம் 15.5 கோடியாம். தெறி 13.25 கோடியாம். லிங்கா 13 கோடியாம். இப்படி முதல் நாள் வசூலே இவ்வளவுன்னா பாத்துக்கோங்க மக்கா எங்க படத்தின் மகிமையை என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தப் போக்கு நாளாக நாளாக இன்னும் அதிகரித்தவண்ணமிருப்பது இன்னும் பேராபத்தாகப்படுகிறது.இந்த மாத இறுதியில் நிறைய தமிழ்ப் படங்களை வெளியிடும் வேலைகளில் படத்துறையினர் முழு வேகத்தோடு செயல்படுகின்றார்கள் என்று செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. குறிப்பாக, வேலைக்காரன், அறம், கருப்பன், சர்வர் சுந்தரம், செம போத ஆகாத (இப்படியும் ஒரு பெயர்?) முதலான படங்கள். இந்தப் பட்டியலில் மாற்றங்களும் வரலாம்.

வேலைக்காரன் படம் சிவ கார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கிறது. அறம் படத்திலும் நயன்தாராதான் நாயகி. அவர் மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கிறார் என்பதும் படத்தின் கதை பெண்ணை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.

ரேணிகுண்டா படத்தின் இயக்குநர் பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதி – தன்யா நடிக்கும் கருப்பன் படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். ரெமோ, றெக்க படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்த படமும், சிவ கார்த்திகேயன் நடித்த படமும் ஒரே சமயத்தில் வெளியாவது இப்போதுதான் என்கிறார்கள்.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் சர்வர் சுந்தரம். நாகேஷ் நடிப்பில் கே. பாலசந்தர் இயக்கிய அந்த சர்வர் சுந்தரம் பெயரிலேயே இப்போது இன்னொரு சர்வர் சுந்தரம் வருகிறார். நாகேஷ் இடத்தில் சந்தானம் எந்தளவு பொருந்துகிறார் என்று பார்ப்போம்… ஒருவேளை கதையும் அதுவே எனில்.

அதர்வாவை தனது பாணா காத்தாடி மூலம் அறிமுகப்படுத்திய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் மறுபடியும் அதர்வாவோடு கைகோர்க்கும் படம் செம போத ஆகாத. இதில் அதர்வாவுடன் மிஷ்டி, அனைகா, ஜான் விஜய், எம்.எஸ். பாஸ்கர் போன்றோரும் உண்டு. யுவன் சங்கர்ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அதர்வாதான் தயாரித்திருக்கிறார்.

இத்தனை படங்களையும் இந்த மாத இறுதியிலேயே வெளியிட ஏனிந்த அவசரம் காட்டுகிறார்கள் என்றால் அதிலும் காரணம் இல்லாமல் இல்லை. ஆயுதபூஜை, விஜயதசமி, மொகரம், காந்தி ஜெயந்தி என்று தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதே இதற்குக் காரணம். அதவாது வசூல் நோக்கம்.

அதைத் தவறென்றும் சொல்ல முடியாதுதான். ஆனால், பிரம்மாண்டம், நாயக நடிகர்களுக்கு அதிகப்படியான சம்பளம், அதனால் ஆகும் கூடுதல் தயாரிப்புச் செலவை ஈடு செய்யும் நோக்கத்தில் முதல் நாள் டிக்கட் விலையை ஆயிரக்கணக்கில் எகிறச் செய்யும் இதுபோன்ற இன்றைய நிலையில் மாற்றம் வேண்டாமா? நல்ல கதையம்சம், புதிய கற்பனைகள் நிறைந்த எளிய காட்சிப்படுத்தல், குறைந்த செலவினங்கள் என்று தமிழ் சினிமாவை முற்றிலும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பாதையில், மக்களுக்குப் பயனுள்ள கலையாக அதனைத் தரமுயர்த்தும் பாதையில் மடைமாற்றம் செய்திடவும் வேண்டாமா?

Leave A Reply

%d bloggers like this: