===பேராசிரியர் கே. ராஜு===
தேரா சச்சா சவுதா ஓர் அமைப்பு. அதன் தலைவர் ராம் ரஹீம் சிங் என்ற சாமியார். தன்னை கடவுளின் தூதுவர் எனக் கூறிக் கொண்டவர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்த ஆகஸ்ட் 25 அன்று நடந்த கலவரத்தில் 38 பேர் உயிரிழந்தனர், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆகஸ்ட் 28 அன்று சாமியாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

ஹரியானா மாநில அரசு சாமியாருடன் இருந்த நெருக்கம் காரணமாக தேரா நிர்வாகத்திற்கு அரசு நிதியிலிருந்து லட்சக்கணக்கில் அள்ளிவிட்டது. காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த சாமியார் 2014 தேர்தலுக்கு முன் பாஜக ஆதரவாளராக மாறியது, மோடியும் அமித் ஷாவும் அவரை வெளிப்படையாகவே புகழ்ந்து பேசி வந்தனர். தனது குற்றப் பின்னணியை மறைக்க தூய்மை பாரத இயக்கத்திற்கு சாமியார் பணியாற்றினார், ஒரு கோடி பேரைக் கொண்ட தேரா அமைப்பில் பெரும்பாலோர் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கும் அவலம்… அதன் காரணமாகவே பாஜகவின் வாக்கு வங்கியாக சாமியார் மாறினார், போலிச் சாமியார் தனத்தை மிகவும் பிரம்மாண்டமாகச் செய்த சூப்பர் சாமியாராக அவர் உலவி வந்தார், சினிமா படங்களைத் தயாரித்து, நடித்து தன்னை வீரதீர நாயகனாக அவர் கட்டமைத்துக் கொண்டார்.

சிர்சாவில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் ஒரு சாம்ராஜ்ய அதிபர் போல அவர் வலம் வந்தார், ஒரு காலத்தில் அவரது ஆதரவாளராக இருந்து பின்னர் மாறிய ரஞ்சித் சிங் என்பவரையும், இரண்டு பெண்கள் 2002-இல் கொடுத்த புகாரை தனது நாளிதழில் வெளியிட்ட ராமச்சந்திர சத்ரபதியையும் சாமியாரின் ஆட்கள் கொலை செய்தனர். கடந்த 15 ஆண்டுகளாக பல சவால்களை எதிர்கொண்டு நீதிக்காகப் போராடி வென்றுள்ள இரு பெண்களுக்கு பாராட்டுகள் குவிவது… என ராம் ரஹீம் சிங் தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள பல்வேறு செய்திகளைப் படித்திருப்பீர்கள்.

அறிவியல் கட்டுரையில் இந்த ஆன்மிகம், அரசியல் எல்லாம் தேவையா என சிலர் யோசிக்கக்கூடும். அரசியல் இல்லாத இடம் உண்டா… அது ஆன்மிகத்திலும் அறிவியலும் மட்டும் இல்லாமலா போகும் என அவர்களைப் பார்த்துக் கேட்க விரும்புகிறேன். சூரியன் பூமியைச் சுற்றிவரவில்லை, பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற அறிவியல் உண்மையைச் சொன்னதற்காக கலீலியோ தண்டிக்கப்பட்டது அன்றைய அரசியல். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள் (தற்போது கௌரி லங்கேஷ்) கொல்லப்பட்டது இன்றைய இந்துத்துவா அரசியல். சரி, சப்ஜெக்டுக்கு வருகிறேன்.ஹேமானி பண்டாரி என்ற பத்திரிகையாளர் தேரா பகுதிக்குச் சென்றுவிட்டு தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் (செப்டம்பர் 2 ஹிந்து நாளிதழ்). வழிகாட்டுபவர் ஒருவர் இவரை ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே சந்த் ராணி என்பவர் அவரது 27 வயது மகள் சப்னாவுடனும் மகன் கௌரவுடனும் அமர்ந்திருக்கிறார். சந்த் ராணி பேசும்போது மற்றவர்கள் அமைதியாகக் கேட்கின்றனர்.

யாரும் குறுக்கிடுவதில்லை. ராம் ரஹீமை அவர்கள் `பிதாஜி’ என மரியாதையுடன் அழைக்கின்றனர். பிதாஜிக்கு அளிக்கப்பட்ட தண்டனை, அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் ஆகியவற்றைப் பார்த்து அவர்கள் அனைவரும் அதிர்ந்து போயிருந்தனர். தேரா அமைப்பில் ராணி 30 ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தார். “பிதாஜிக்கு முன் இருந்த சாமியார்கள் மஸ்தானா, ஷா சத்னம் ஆகியோர் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால், ராம் ரஹீம் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்” என்கிறார் சந்த் ராணி. தங்களது `குரு’ தங்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என அவரது இரு பெண் பக்தைகள் கூறுவதை அங்கு இருந்த யாரும் நம்பத் தயாராக இல்லை.

ராம் ரஹீம் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய கதைகளை தங்களது உறவினர்களிடமிருந்து கேட்ட பிறகே தாங்கள் அவர் மீது பக்தி கொண்டதாக அவர்கள் கூறினர். சிங் பக்தர்களை லேசாகத் தொட்டதுமே அல்லது அவர்கள் காணிக்கையாக அளித்த பிஸ்கட்டுகளை அவர் சாப்பிட்டதுமே அவர்களை வாட்டிக்கொண்டிருந்த நோய்களிலிருந்து குணமடைந்து விடுவார்களாம். அந்தக் குடும்பத்தினருக்கு மூன்று குருமார்களின் மீது இருக்கும் நம்பிக்கை சமீபத்திய செய்திகளுக்குப் பிறகும் சற்றும் குறையவில்லை. “வேலைக்குச் செல்வதற்கு முன் நாங்கள் அவர்களது நாமத்தை உச்சரிக்கிறோம். நாங்கள் எடுத்துக் கொண்ட வேலை எந்தக் குறையுமின்றி முடிந்துவிடும்” என்கிறார் கௌரவ்.
ராணி வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் அங்கே வந்து அமர்கின்றனர். பிதாஜியை மையமாக வைத்து பின்னப்பட்ட அற்புதங்களைப் பற்றி சொல்லத் தொடங்குகின்றனர். அந்தக் குடியிருப்பில் பல்வேறு சாதியினர் இருக்கின்றனர். ராம் சிங்கின் பக்தர்கள் சாதி, மதம், வர்க்கம் என்ற எல்லைகளையெல்லாம் கடந்தவர்கள் என அவர்கள் கூறுகின்றனர். “அவரது பக்தர்களில் மூன்றாம் பாலினத்தவரும் உண்டு. சிங் அவர்களை மனிதர்களாக்கினார்” என்கிறார் மளிகைக் கடை வைத்திருக்கும் 56 வயதான நரேந்திர குமார்.

மாதம் ஒரு முறை நடக்கும் சத்சங்கக் கூட்டத்தில் நற்செயல்களைச் செய்வது, மாமிசம், மது, போதைப் பொருட்களைக் கைவிடுவது பற்றி சிங் உபதேசம் செய்வார். ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் தான் 10 ஆண்டுகளுக்கு முன் பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டதையும் மருத்துவர்கள் கைவிட்டுவிட்டதையும் பற்றிக் கூறினார். “பிதாஜியைப் பார்க்குமாறும் கூறினர். நான் அவரைப் பார்த்தபோது 10 மருத்துவர்கள் கொண்ட குழுவினரை என்னைப் பரிசோதிக்குமாறு கூறினார். பிறகு அவர் என்னை இறுகக் கட்டித் தழுவினார். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். பாபாஜிக்கு நன்றி சொல்வதற்காக நான் தேராவுக்கு ஓடினேன்” என்கிறார்.ஒரு சிறிய மளிகைக் கடை வைத்திருந்த ஷ்யாம் மேத்தாவின் உறவினர் பிதாஜியின் ஆசிகள் கிடைத்த பிறகு இன்று கோடீஸ்வரர் ஆகிவிட்டாராம். திருமணம் ஆகி குழந்தைகள் பிறக்காத நிலையில் இருந்த ஒரு பெண்மணி பிதாஜியைப் பார்த்தபோது HO JAYEGA  (அது நடக்கும்) என்று சொன்னாராம். ஐந்தே மாதங்களில் அந்தப் பெண் கருவுற்றாராம்.

இப்படி போகின்றன பல கதைகள். அனைத்தையும் சொல்ல இங்கே இடம் இல்லை. மக்கள் சொல்வதையெல்லாம் கேட்கும்போது சிறை வாயிலில் பாபாஜி மருத்துவம் பார்க்கும் ஓர் ஆசிரமத்தைத் திறந்து வைத்துவிட்டு பிற மருத்துவமனைகளையெல்லாம் மூடிவிடலாமே என்று தோன்றுகிறது.மக்கள் இவ்வளவு அறியாமையுடன் இருக்கும்போது ராம் ரஹீம் போன்ற சாமியார்களுக்குக் கொண்டாட்டம் தான். அறிவியலாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளுடன் நின்று கொள்ளாமல் மக்களுடன் நிறைய உரையாட வேண்டிய காலம் வந்திருக்கிறது. அறிவியல் இயக்கங்களுக்கு வேலை நிறைய இருக்கிறது!

Leave A Reply