தலித் பழங்குடி மாணவர்களின் கல்வி உதவித் தொகையை முழுமையாக அரசே  வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து இன்று கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்டு உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், தலித் கிறித்தவர் மாணவர்களுக்கு சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நியமனக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை உதவித் தொகையாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசே செலுத்தி வந்தது. தற்போது இந்த உதவித் தொகை மூன்றில் ஒரு பங்காக திடீரென வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. இது அரசு ஒதுக்கீட்டில் உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், தலித் கிறித்தவ மாணவர்கள் மீது தமிழக அரசு தொடுத்துள்ள கடுமையான தாக்குதலாகும். ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தட்டிப்பறிக்கும் செயலாகும். சமூக நீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அரசு ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12.50 லட்சம் வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை ரூ. 4 லட்சமாகவும், பொறியியல் கல்வி மாணவர்களுக்கு ரூ. 85 ஆயிரம் வழங்கப்பட்டதை ரூ. 70 ஆயிரமாகவும் குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனால் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள், படிப்பைத் தொடர முடியாமல் வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு செல்ல முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அதிமுக அரசின் கல்வி உதவித் தொகை குறைப்பு குறிப்பாக தலித் – பழங்குடியின மக்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர வாழ்நிலை பகுதி மக்கள் திரளைச் சார்ந்த மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்டு உயர்கல்வி பெறும் உரிமையை தடுப்பதாகும்.

எனவே, கல்வி உதவித் தொகையை அடாவடித்தனமாக வெட்டிச் சுருக்கி அடித்தட்டு மக்கள் உயர்கல்வி பெறும் உரிமையை தட்டிப்பறிக்கும் நடவடிக்கையை அஇஅதிமுக அரசு கைவிட வேண்டுமெனவும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டுமெனவும், கல்விக்கட்டண நியமனக்குழு நிர்ணயிக்கும் கல்வி கட்டணத்தை ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதைப் போல் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மற்றும் தலித் கிறித்தவ மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Leave A Reply