-சேதனா தீர்த்தஹள்ளி

அவள் கேள்விகளை எழுப்பினாள்!
அவள் எழுதினாள்!
அவள் போராடினாள்!
அவள் எதிர்த்து நின்றாள்!
அவள் சுடப்பட்டு மரணமடைந்தாள்….!
கௌரி லங்கேஷ், கருத்துச் சுதந்திரத்தின் ஆத்மா. கோழைகளான பாசிஸ்டுகள் அவரைக் கண்டு மிகவும் அச்சமடைந்தனர். அதனால் தான் பாசிசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு, தங்கள் முகத்தைப் பாதுகாக்க அவரைக் கொல்வதைத் தவிர வேறு வழியேதுமில்லை.கௌரி ‘‘லங்கேஷ்’’ பத்திரிகையின் நெஞ்சுரம் மிக்க ஆசிரியராக இருந்தார். மனிதாபிமானத்திற்கும் நீதிக்கும் உறுதியுடன் போராடும் பத்திரிகை தான் அது. தவறான அனைத்தையும் அவர் கேள்வி கேட்டார். ஊடகத்துறையில் செயல்பட்ட வாழ்க்கை முழுவதும் பயமேதுமின்றி பேசினார். சமூகத்தின் தவறுகளுக்கெதிராக, குறிப்பாக பிரிவினைவாத அரசியலுக்கும், சாதியவாதத்திற்கும் அதிகார மையங்களுக்கும் எதிராக உறுதியுடன் நின்றார்
பயமற்றவர்களாக வாழ கௌரி லங்கேஷ் தான் எங்களுக்குக் கற்றுத் தந்தார்.

காவிக் குண்டர்களின் அச்சுறுத்தல்கள், தொடர்ந்து இருந்து வந்த போதும் கௌரி லங்கேஷ் ஒருபோதும் போலீஸ் பாதுகாப்பு கேட்டதில்லை. நாங்கள் பின்பற்றத் தகுந்த முன்னுதாரணமாக இருந்தார், குறிப்பாக பெண் ஊடகச் செயல்பாட்டாளர்களுக்கு.
தனிப்பட்டமுறையில் கூறுவதானால் கௌரி லங்கேஷின் வாழ்க்கையும் செயல்பாடுகளும் என்னை மிகவும் கவர்ந்தன. சங்பரிவாரமும் அவர்களது ஆதரவார்களும் என்னை ஜூனியர் கௌரி லங்கேஷ் என்று கூறித்தான் பரிகசிப்பார்கள்.

ஒரே பாதையில் பயணம் செய்தபோதும் ஒருபோதும் நாங்கள், எங்களுக்குள் நெருக்கமான நட்புறவு கொண்டிருக்கவில்லை. ஆனால் எல்லா காலகட்டத்திலும் அவர் எனக்காக உறுதியோடு என்னுடன் நின்றார். சங்கிகள் சமூக வலைத்தள ஊடகங்களில், என்னை குறிப்பாக தாக்க முற்பட்டபோதெல்லாம், கௌரி லங்கேஷ், தனது பத்திரிகையில் என்னைப் பற்றி எழுதவும், முழு ஆதரவை தெரிவிக்கவும் செய்தார். அவ்வேளையில் நான் அவருக்கு எதிராக ஒரு வழக்கை நடத்திவந்தேன் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

கௌரி லங்கேஷின் இதழில், கட்டுரை பகுதியில் ஒரு செய்தியாளர் என்னைப்பற்றி மோசமான ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். சட்டப்படி செய்தியாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக நான் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றத்திற்கு வெளியே அந்த வழக்கை பேசித்தீர்க்க கௌரி விரும்பினார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நான் மிகவும் விரும்பும் இதழில் என்னைப்பற்றி மோசமாக சித்தரிக்கப்பட்டிருந்தது, என்னை மிகவம் வேதனைப்படுத்தியது. கர்நாடகாவில் உள்ள மற்ற எல்லா முற்போக்காளர்களைப் போலவே நானும் கௌரியின் தந்தையாரின் வெளியீடான “லங்கேஷ் பத்திரிகா” படித்தே வளர்ந்தேன். மாநிலத்தில் மிகவும் செல்வாக்குள்ள வெளியீடாக இருந்தது அது. நூற்றுக்கணக்கான பொதுநல செயல்பாட்டாளர்களை உருவாக்கிய இதழ் அது.வழக்கை வாபஸ் வாங்க நான் மறுத்ததில் கௌரி என்னிடம் கோபம் கொண்டிருந்தார். இருந்தபோதிலும், எனக்கு ஒரு பிரச்சனை வந்தபோது, அவர் எனக்காக உறுதியுடன் நின்றார். அந்தளவுக்கு தான் விரும்பும் கொள்கையின்பால் ஆழ்ந்த பற்றுதல் கொண்டிருந்தார். அதுவே அவரது தனித்துவம். அதனால் தான் எல்லா பிரச்சனைகளையும் புறம்தள்ளி, என்னுடைய முன்னுதாரணத்தின் சாயலாக எனக்குள் நிலைத்திருக்கிறார்.

பொருத்தமான போராட்டவடிவங்களில் கௌரி லங்கேஷ் நம்பிக்கை கொண்டிருந்தார். புதிய தலைமுறை செயல்பாட்டளர்களுக்கு அவர் மூத்த சகோதரியாவார். முற்போக்கு இயக்கங்களுக்கிடையில் உள்ள கருத்து வேற்றுமைகளை பேசித் தீர்த்து ஒற்றுமையை புனரமைக்க தீவிரமாக செயல்பட்டு வந்தார். அவர் கடைசியாக ட்விட்டரில் வலியுறுத்திச் சொன்ன விஷயம், இடதுசாரி இயக்கங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டுமென்பதே ஆகும். பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று திரும்பத்திரும்ப வலியுறுத்தி வந்தார். கண்கள் நிறைகின்றன. துக்கத்தாலும் ஆதரவற்ற நிலையினாலும் வரும் கண்ணீர் அல்ல இது. கோபத்தாலும் அவருடனான ஈர்ப்பினாலும் வரும் கண்ணீர் இது. அவர்களுக்கு ஒரு கௌரியைக் கொல்லமுடிந்திருக்கலாம். ஆனால் அவரது செயல்பாடுகளை முன்னெடுத்துச்செல்ல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கௌரிகள் இருக்கிறோம். அவர்கள், அவரைக் கொன்றிருக்கலாம், ஆனால் கௌரியை இறக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் உணர்வு மண்டலத்தில் அவர் என்றும் வாழ்வார்.
– தமிழில்: சதன், தக்கலை

( கட்டுரையாளர், கன்னட ஊடக, திரைத்துறை செயல்பாட்டாளர், இடதுசாரி சிந்தனையாளர், எழுத்தளார். கௌரி லங்கேஷ் போன்றே சங்கிகளுக்கு எதிராக வீரத்துடன் செயல்பட்டுவருபவர். அதனாலேயே சங்கிகளால் தொடர்ந்து கொலை, பாலியல் மிரட்டல்களுக்கு ஆளாகி வருபவர்)

Leave A Reply

%d bloggers like this: