ஹூஸ்டன்;                                                                                                                                                                             ஹார்வி என்ற புயலால் அமெரிக்காவின் நான்காவது பெரிய மாநகரமாம் ஹூஸ்டன் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத சூறாவளி புயலும், கனமழையும் ஹூஸ்டனை தலைநகராக கொண்ட டெக்சாஸ் மாகாணத்தையே மூழ்கடித்துள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாகாணத்தை கத்ரினா புயல் தாக்கியது. அப்போது டெக்சாஸ் மக்களை ஏறிட்டுக் கூட பார்க்காமல் உலகின் எந்தப் பகுதியில் குண்டு போடலாம் என யோசித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சை போலவே, இப்போதும் வாஷிங்டனில் அமர்ந்து கொண்டிருக்கிறார் டொனால்டு டிரம்ப்.

ஆனால், டெக்ஸாசுக்கு அருகில் உள்ள வெனிசுலா ஓடோடி வந்து கைகொடுத்தது. அன்றைய ஜனாதிபதி சாவேஸ், தனது நாட்டிலிருந்து எண்ணெய்யும், உணவும், நிதியும் என அமெரிக்க மக்களுக்கு கொண்டு வந்து குவித்தார். தனது மிகப் பெரிய எதிரியாக, சாவேஸை குறிவைத்திருந்தது அமெரிக்க நிர்வாகம். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் தனது எதிரியே தவிர, அமெரிக்க மக்கள் அல்ல என்று முழங்கினார் சாவேஸ்.
இன்று அதே முழக்கத்தை எழுப்புகிறார் நிக்கோலஸ் மதுரோ.ஹார்வி புயலால் அனைத்தையும் இழந்து தவிக்கிற டெக்சாஸ் மாகாணத்து மக்களுக்கு உடனடி உதவியாக 500 லட்சம் டாலர் அறிவித்திருக்கிறார் மதுரோ. அதுமட்டுமல்ல, டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற வெனிசுலாவின் மிகப் பெரிய பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகளில் ஒன்றான சிட்கோவின் ஒட்டுமொத்த வருமானத்தையும் டெக்சாஸ் மக்களின் மறுவாழ்வுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்திருக்கிறார்.
மனிதாபிமான அடிப்படையில் வெனிசுலா ஜனாதிபதி இதைச் செய்கிறார்… இதிலென்ன அதிசயம் இருக்கிறது… எல்லோரும் செய்வது தானே என்ற கேள்வி எழலாம்.
ஆனால், அதிசயமும் ஆச்சரியமும் இதில் நிறைந்தே இருக்கிறது.

சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு;
வெனிசுலாவின் பொருளாதார முதுகெலும்பை முறித்தே தீருவேன் என்று பெரும் வன்மத்தோடு களமிறங்கினார் ஜனாதிபதி டிரம்ப். வெனிசுலா மீது இதுவரையிலும் விதிக்கப்படாத விதத்தில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து, வெள்ளை மாளிகை அறிவிக்கை வெளியிட்டது. வெனிசுலாவுடனான அமெரிக்காவின் அத்தனை வர்த்தகங்களும் உடனடியாக நிறுத்தப்படுகிறது என அறிவித்தார். ஒரு பைசா கூட வெனிசுலாவுடன் எந்த நிறுவனமும் வர்த்தகம் வைத்துக் கொள்ளக்கூடாது என உத்தரவு போட்டார். இந்த உத்தரவு அமலுக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.வெனிசுலாவின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறது என்பது உண்மையே. சாவேஸின் மறைவுக்கு பிறகு, ஆட்சிக்கு வந்த நிக்கோலஸ் மதுரோ, தனது மக்கள் நல கொள்கையின் மூலமாக அந்த நெருக்கடி மேலும் தீவிரமடையாமல் நாட்டை பாதுகாத்து வருகிறார். அமெரிக்கா ஏற்படுத்திய தடைகள் காரணமாகவும், அமெரிக்காவில் மையம் கொண்ட உலகப் பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் தீவிரமடைவதன் விளைவாகவும், மிக அருகில் உள்ள நாடான வெனிசுலாவின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியது என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.

ஆனால் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நட்டம் உழைக்கும் மக்கள் தலையில் ஏற்றப்படக் கூடாது என்பதில் மதுரோ அரசு உறுதியாக உள்ளது. அதற்கு எதிராக, வெனிசுலாவில் பெரு முதலாளிகள் மற்றும் அவர்கள் சார்ந்த பணக்கார வர்க்கம் தங்களது லாபம் ஒரு பைசா கூட குறையக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர். இந்த இரண்டுக்கும் இடையிலான மோதலே வெனிசுலாவில் தீவிரமடைந்துள்ளது. பணக்கார வர்க்கத்தின் கரங்களை நேரடியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் களத்தில் இறங்கி, தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

சிஐஏ நாசகர உளவு அமைப்பின் சதிவலைகள் வெனிசுலாவின் பணக்கார வர்க்கத்திற்கு ஆதரவாகவும், உழைக்கும் வர்க்க அரசான மதுரோ நிர்வாகத்திற்கு எதிராகவும் பின்னப்பட்டு வருகின்றன. இதன்விளைவே, வெனிசுலாவில் அரசுக்கு எதிராக வன்முறைகள் கூலிப்படைகளால் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. மறுபுறம் அரசை பாதுகாக்க, மதுரோவுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது மதுரோ அரசின் முதுகை ஒடிக்க வேண்டுமென்றால், அதன் வர்த்தகத்தை முற்றாக தடுக்க வேண்டும். அதைத்தான் டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் செய்திருக்கிறது.

பொருளாதார தடையால் என்ன நடக்கும்?
1995களில் சதாம் உசேனின் இராக்கிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐந்தாண்டு காலம் இலக்கு வைத்து பொருளாதார தடை விதித்தது. வர்த்தகம் முடக்கப்பட்டது. உணவோ, மருந்துகளோ இராக்கிற்கு செல்வது தடுக்கப்பட்டது. உலகிற்கே பெட்ரோல் கொடுத்த நாடு…. உலக நாகரிகம் பிறந்த நாடு… அமெரிக்கா விதித்த கொடூரமான தடைகளால் ஐந்தாண்டு காலத்தில் சுமார் 5 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகளை துடிக்க துடிக்க பறிகொடுத்தது. நாடே பட்டினியின் பிடியில் சிக்கியது. அப்போது ஐ.நா.சபையில் அமெரிக்காவின் தூதராக இருந்த மெடலின் ஆல்பிரைட் கொக்கரித்தார்: “இராக் சரியான தண்டனை அனுபவிக்கிறது”.

அன்றைக்கு சிதைய துவங்கிய இராக் எனும் மாபெரும் தேசம், இன்று வரையிலும் அமெரிக்காவிடம் சிக்கி மடிந்து கொண்டிருக்கிறது.இதேபோல, ஆப்கனில், லிபியாவில், சிரியாவில், சில மாதங்களுக்கு முன்பு ஈரானில்…. இப்போது வடகொரியாவில்… என தனது பொருளாதார தடை எனும் கொடும் கரங்களை நீட்டுகிறது அமெரிக்கா.அதன் நீண்டகால குறி, வெனிசுலா. அந்த வெனிசுலாவை இப்போது ஒழித்துகட்டிவிட முடியும் என நம்பி, பொருளாதார தடை எனும் ஆயுதத்தோடு இறங்கியிருக்கிறது டிரம்ப் நிர்வாகம்.
இந்த தடைகளால் வெனிசுலாவின் நிதிக்கட்டமைப்பு முற்றாக சிதைக்கப்படும் அபாயம் இருக்கிறது. ஏனென்றால் தடையின் முக்கியமான அம்சமே வெனிசுலா அரசுக்கு சொந்தமான சிட்கோ எனும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் எந்தவொரு லாபமோ, பங்குத் தொகையோ வெனிசுலா அரசின் கைகளுக்கு சென்றுவிடாமல் தடுத்திருப்பதுதான்.

ஏனென்றால் சிட்கோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியும் சந்தையும் அமெரிக்காவின் டெக்ஸாஸ், லூசியானா உள்ளிட்ட மாநிலங்களில்தான் இருக்கிறது. இப்போது தடைவிதித்திருப்பதால் தனது சொந்த நிறுவனத்தின் லாபத் தொகையை கூட வெனிசுலா அரசால் அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அந்த தொகை முழுவதும் அமெரிக்க வங்கிகளின் வாயிலாகத்தான் வெனிசுலாவுக்கு வர வேண்டும்.

தடைவிதிக்கப்பட்ட ஒரு வாரகாலத்திலேயே, மதுரோவின் அரசு, தனது முதுகெலும்பை ஒடிக்க முனைந்துள்ள டிரம்பின் நிர்வாகம் நடக்கிற அமெரிக்காவுக்கு அன்பை பரிசாக அளித்திருக்கிறது. எந்த டெக்ஸாஸ் மாகாணத்தில் உருவாகிற தனது நிறுவனத்தின் லாபத்தை தடை காரணமாக பெற முடியாதோ, அதே டெக்ஸாஸ் மாகாணத்தின் மக்களுக்கு 500 லட்சம் டாலர் நிதியுதவி அளித்திருக்கிறது மதுரோ அரசு. டிரம்ப்பின் பதில்களுக்காக வெனிசுலா காத்திருக்கவில்லை. அங்கே புயல் தாக்கியவுடனே வெனிசுலாவிலிருந்து ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், மீட்புப் படையினரும், நிவாரண உதவிக் குழுக்களும் டெக்ஸாசுக்கு விரைந்துவிட்டார்கள்.

இதில் வேடிக்கையான வினோதம் என்னவென்றால், மேற்கண்ட சிட்கோ எண்ணெய் கம்பெனியின் ஒட்டுமொத்த லாபத்தையும் டெக்ஸாஸ் மக்களின் மறுவாழ்வுக்காக அர்ப்பணிப்பதாக மதுரோ அரசு கூறியிருப்பதுதான். அந்த பணம் கிடைத்தால் மதுரோ அரசு சற்று மூச்சுவிட முடியும். ஆனால் வெனிசுலாவின் உழைப்பாளி மக்கள், பக்கத்து தேசத்தில் வெள்ளத்தில் தவிக்கும் சக உழைப்பாளி மக்களுக்கு அந்தப் பணத்தை விட்டுக் கொடுக்க தயாராகிவிட்டார்கள்.வெனிசுலா வெளியுறவு அமைச்சர் கூறுகிறார்:“உங்களைப் போல நாங்கள் ஒருபோதும் போர்களையோ, பொருளாதார தடைகளையோ ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை. அன்பையும், ஆதரவையும், ஆறுதலையும் ஏற்றுமதி செய்கிறோம். உலகின் எந்த பகுதியிலும் துயரின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்காக ஆதரவு கரம் நீட்டுவதே எங்கள் பாதை. இது சாவேஸின் பாதை. இது பொலிவாரியன் புரட்சியின் பாதை. இது இடதுசாரி பாதை.”

Leave A Reply