திருச்செங்கோடு, செப். 8-
திருச்செங்கோடு அருகே அடிக்கடி விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கி வரும் மரண சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் வரகுராம்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியில் வித்யா விகாஸ் பள்ளி அருகில் சுமார் 250 அடி தூரம் வரை சாலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இப்பகுதியில் சாலை போடும்போது கலக்கப்பட்ட தரமற்ற பொருட் கலவையின் காரணமாக சாலைகளில் ஒரு பகுதி மட்டும் ஏற்ற, இறக்கத்துடன் அமைக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மழை பெய்யும் பொழுது சாலையில் வழுக்கும் நிலை ஏற்பட்டு வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துக்கு உள்ளாவது அன்றாட நிகழ்வாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த புதனன்று இப்பகுதியில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. மேலும், இச்சாலையில் இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

(ந,நி)

Leave A Reply