‘எல்லோருமே ஜீனியஸ்தான். ஒரு மீனின் திறமையை அது மரமேற முடியுமா என்கிற அடிப்படையில் நிர்ணயம் செய்தால், வாழ்நாள் முழுவதும் தான் மரமேறத் தெரியாத முட்டாள் என்ற எண்ணத் துடனேயே வாழும். ’அறிவியல் மாமேதை ஐன்ஸ்டைன் இந்த வரிகளை எழுதவில்லை என்கிற வாதம் இன்றும் இருக்கிறது. அது நடக்கட்டும். ஆனால், இந்த வலிமை மிகு வரிகளின் உண்மை இன்று நம்மைத் தாக்குவதற்குக் காரணம், அனிதாவின் தற்கொலை.

பொருளாதார – சமூக அசமத்துவம் தலைவிரித் தாடும், சந்தையில் கல்வி விற்கப்படும் ஒரு நாட்டில், படிப்புக்கோ தொழிலுக்கோ ஒரு மாணவரோ – மாணவியோ தகுதியானவரா என்பதை ஒரே சமமான சோதனையால் நிர்ணயிக்க முடியுமா என்பதுதான் கேள்வி. சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையே இந்தக் கேள்வியிலிருந்துதான் தொடங்குகிறது. சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் உருவாக்கப்படும் தேர்வு முறைகளின் தரத்தையும் சமூக நோக்கத்தையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது, அதனால் பாதிக்கப் படுபவரின் தரத்தை அல்ல. இதற்கு நீட் தேர்வு விதி விலக்கல்ல. அதுவும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதுதான்.

தேர்வின் முக்கியம் எது?

உலகம் முழுவதிலும் நுழைவுத் தேர்வுகளிலும், வேலைக்குத் தெரிவுசெய்யும் தேர்வுகளிலும் பயன்படுத்தப்படும் ஐ.க்யூ. தேர்வு (IQ Test) அல்லது புத்திசாலித்தனத்தை அளக்கும் தேர்வு, இப்படிக் கேள்விக்கு உள்ளானதுதான். கேள்வி கேட்டவர் அமெரிக்க எழுத்தாளர் ஆலன் காஃப்மான். புத்திசாலித்தனத்தை அளக்கும் தேர்வு புத்திசாலித்தனமான தேர்வாக இருக்க வேண்டுமென்றார் அவர்.

“கவனம் குழந்தை யின் மீதுதான்… ஒரு குழந்தை தேர்வுக்கான கேள்விகளைக் குறிப்பிட்ட எந்தச் சூழலில், எப்படி அணுகுகிறது என்பதே தேர்வின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவு கள் அறிவிக்கப்பட வேண்டும். உலகளாவிய மதிப்பெண்களுக்கு அழுத்தம் தரக் கூடாது. தேர்வு என்பது சக்திமிக்க உதவும் காரணியாக இருக்க வேண்டுமேயொழிய, ஓரிடத்தில் அமர்த்திவைப்பது, முத்திரை குத்துவது போன்ற கல்வித் துறை ஒடுக்குமுறைகளின் கருவியாக இருக்கக் கூடாது.”

ஐ.க்யூ. சோதனை குறித்த இத்தகைய வலிமையான விமர்சனங்கள் எழுந்த பிறகு, அத்தகைய சோதனைகளும் மாற்றப்பட்டுவருகின்றன. அவை, இப்போது ஒருவரின் பலவிதத் திறமைகளையும் சோதிக்கும் வகையிலும், பல்வேறு சமூகப் பிரிவினரின் கிரகிக்கும் திறன்களை அடிப்படையாகக்கொண்டும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க மனவியல் அமைப்பின் முன்னாள் தலைவரான டையேன் ஹால்பெர்ன் கூறுவதைக் கேளுங்கள்: “ஒருவரைக் குறித்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதற் கான வழிமுறைகள் நமக்கு எப்போதுமே தேவையாக இருக்கும். நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல; பல்வகைப்பட்ட திறன் கொண்டவர்கள். புத்தி சாலித்தனம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் வளர்வது என்று எண்ணாமல், அது மாற்றமில்லாத உள்ளார்ந்த திறன் என்று நினைப்பது தான் தவறு.”

அறிவியல் ஆய்வுகளும் இதையேதான் சொல் கின்றன. மூளை மாற்றமில்லா ஜடமில்லை. அதன் செயல்பாடு மாற்றியமைக்கத் தக்கது. நியூரான் எனப்படும் நரம்பு செல்கள், செய்திகளை சிக்னல்களாக வெளியிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து வெளியேயும் கடத்துகின்றன. செய்திகள் நியூரான் வழித்தடங்கள் மூலம் பயணம் செய்கின்றன.

நாம் புதியதாகவும் வித்தியாசமானதாகவும் ஒன்றை அனுபவிக்கும்போது, புதிய நியூரான் வழித்தடங்கள் உருவாகின்றன. ஒரு விஷயத்தைத் தொடர்ந்தும் வித்தியாசமாகவும் செய்யும்போது, புதிய நியூரான் வழித்தடங்கள் மூளையில் உருவாகின்றன என்கிறது அறிவியல்.

தூண்டும் நியூரான்கள்

ஐன்ஸ்டைன் கூறுவதைக் கேளுங்கள்: “நான் புத்திக்கூர்மை கொண்டவன் அல்ல. ஒரு சமன்பாட்டையோ கணக்கையோ தீர்க்க நான் மற்றவர்களைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன் என்பதுதான் உண்மை.”

மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் படைப்பாற்றலையும் தூண்டிவிட்டு, புதிய நியூரான் வழித்தடங்களை உருவாக்கும் கல்வியை நாம் அளிக்கிறோமா என்பது தான் கேள்வி. ‘உன் மூளையில் படிப்பே ஏறாது’ என்று இந்த வழித்தடங்களையெல்லாம் அடைத்துவிடுவது தான் துயரம். படிப்பே ஏறாத மூளை என்று ஒன்று இல்லை. (பிறவியிலேயே குறைபாடு இருப்பவர்களைத் தவிர) லூயிஸ் டெர்மான் என்கிற அமெரிக்கக் கல்வி சார்ந்த மனவியல் ஆராய்ச்சியாளர் 1921-ல் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 1,470 பேருக்கு ஐ.க்யூ. சோதனைகள் நடத்தினார். அதில் தேறாத வில்லியம் ஷாக்லியையும் லூயிஸ் ஆல்வாரெஸையும் தன் ஆய்விலிருந்து வெளியேற்றிவிட்டார். வில்லியம் ஷாக்லி 1956-லும், லூயிஸ் ஆல்வாரெஸ் 1968-லும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர்.

ஒரு பள்ளியில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் அங்கிருக்கும் ‘ஞானக் குழந்தைகளின்’ திறனை அடையச் செய்வது சாத்தியம். இதற்கான சரியான மனோபாவத்தையும் அணுகுமுறையையும் கற்றுத்தருவதுதான் அதற்கு வழி. இதற்கு ஒரு குழந்தைக்குப் பள்ளியிலும் வீட்டிலும் சரியான சூழல் தேவை.

தொடர் பயிற்சிதான் சரி

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கல்வி மனவியல் ஆராய்ச்சியாளராக இருக்கும் பேராசிரியர் ஆண்டர்சன் எரிக்சன் இதையே தான் கூறுகிறார். இசை, விளையாட்டு, ஞாபக சக்தி என்று எந்தத் துறையின் சாதனைகளை எடுத்துக்கொண்டாலும், அதில் சிறந்து விளங்குவது ஒரு நபரின் உள்ளார்ந்த திறன் அல்ல என்கிறார் அவர். தொடர் பயிற்சிதான் சாதனையாளர்களை உருவாக்குகிறது.

ஐன்ஸ்டைன் குழந்தையாக இருக்கும்போது சரளமாகப் பேச வராது. ஜூரிக் நகரிலுள்ள பாலிடெக்னிக்கின் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தார். எனினும், இயற்பியல் மற்றும் கணிதத் தேர்வுகளில் அவர் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்ததைக் கருத்தில் கொண்டு, அந்த பாலிடெக்னிக் அவரைப் படிக்க அனுமதித்தது. பிறகு, சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு இயந்திரத் தொழில்நுட்பத்தில் அவருக்குப் போதிய திறமை இல்லாததால் பணி உயர்வு கிடைக்க வில்லை. இதே ஐன்ஸ்டைன்தான் நியூட்டனின் விதிகளை மாற்றி எழுதிய சார்பியல் கோட்பாட்டை உருவாக்கி உலகப் புகழடைந்தார்.

சமமற்ற ஆடுகளத்தில் சீரற்ற ஆட்ட விதிகளுடன் குழந்தைகளை விளையாட விட்டுச் சிலரைத் தேர்ந்தெடுத்துச் சீராட்டுகிறோம்.. பாராட்டுகிறோம். மரமேற முடியாத மீன்கள் நீச்சலையும் மறந்து தண்ணீருக்குள் அழுதுகொண்டிருக்கின்றன!

-ஆர். விஜயசங்கர், ஆசிரியர், ஃபிரண்ட்லைன்,
தொடர்புக்கு: [email protected]

-நன்றி தமிழ் இந்து

Leave A Reply

%d bloggers like this: