ஈரோடு, செப்.8-
ஈரோட்டில் கடைவீதி பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வியாபாரிகள் முற்றகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மணிக்கூண்டு சாலையில் உள்ள பிரகாசம் வீதி, கனி மார்க்கெட் உட்பட அப்பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட வீதிகள் முழுமையாக கடைகள் அமைந்த பகுதியாகும். இங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த மதுக்கடையால் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். இச்சூழலில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் அக்கடை அகற்றப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் சில விதிகளை தளர்த்தியதால் மீண்டும் இக்கடை முன்று தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மதுக்கடையை திறக்கக்கூடாது எனக்கூறி மதுக்கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் கூறியதாவது: எங்களது கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை, மது அருந்த வரும் போதை ஆசாமிகள் நாகரீகம் இன்றி பேசுவதும், தகறாரில் ஈடுபடுவதும் அன்றாட நிகழ்வாகி வருகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள கடைக்கு வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும், இரவில் கடைகளை பூட்டி சென்றபின், அத்தனை கடை வாசல்களையும் பார் போல பயன்படுத்தி, பாட்டில், சாப்பாடு, எச்சில் இலைகளை அப்படியே பேட்டு செல்கின்றனர். இதனால் தினமும் காலையில் கடை வாசல்களை தண்ணீர் விட்டு சுத்தம் செய்துதான் பணியை துவங்கும் நிலை உள்ளது. எனவே, இங்கு செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியேரிடம் மனு வழங்க முடிவு செய்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: