கோவை, செப்.8-
முன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதுவரை 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஜேக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக வெள்ளியன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜேக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், செந்தில்குமார், அரசு, கருப்பசாமி, மைக்கேல், ராஜ் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன் ஜேக்டோ – ஜியோ அமைப்பினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜோக்டோ – ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.பாஸ்கரன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், பெண் ஊழியர்கள் கூடி அங்கேயே ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி:
உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜோக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன், ஆஸரா ஆகியோர் தலைமை வகித்தனர். இதேபோல், கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சலீம், அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சேலம்:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் டி.கோவிந்தன், அரசு ஊழியர் சங்கத்தின் சி.முருகபெருமாள், திருவரங்கன், செல்வம், அர்த்தனாரி உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்:
நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், கே.சுப்பிரமணி, கு.இராஜேந்திரபிரசாத், செல்வராஜ், முருக செல்வராசன், செல்வக்குமார் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு:
ஈரோடு சம்பத் நகர் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.பாஸ்கர் பாபு, யு.கே.சண்முகம், முத்துசாமி, குமரேசன், கே.வெங்கிடு உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பற்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply