நதிகளை மீட்க மிஸ்டுகால் தரும்படி ஜக்கி தந்துள்ளது ஜக்கி வாசுதேவ் கொடுத்துள்ள எண் பிஜேபியின் பிரத்தேக எண் என்ற அதிர்ச்சி தகவலை சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ்   அம்பலப்படுத்தி உள்ளார்.
நீரின் தேவையை வலியுறுத்திப் பேசுவதற்காக `நதிகளை மீட்போம்’ என்று ஒரு இயக்கத்தை அண்மையில் தொடங்கியுள்ள ஜக்கிவாசுதேவ் 16 மாநிலங்கள் வழியாக 20 பெருநகரங்களில் அதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். கடந்த 3ந்தேதி கோவையில் தொடங்கப்பட்ட இந்தப் பிரசாரப் பயணத்துக்காக சுமார் 7000 கி.மீ. தூரத்தை தன்னுடைய 2 கோடி ரூபாய் மதிப்புள்ள G63 AMG மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் காரைத் தானே ஓட்டிக் கடக்கவுள்ளதாகவும் ஜக்கிவாசுதேவ் அறிவித்துள்ளார்.

இந்த இயக்கம் சார்பில் நதிகளை மீட்டு பாரதத்தினைக் காக்க ‘8000980009’ என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தரும்படி ஜக்கிவாசுதேவ் கூற, அதனை வேதவாக்காக ஏற்ற அவருடைய ஆதரவாளர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் அந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வைத்து வருகின்றனர். நதிகளை மீட்பதாக எண்ணிக் கொண்டு அப்பாவி மக்களும் அதை ஒரு கடமையாகச் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் “‘8000980009’ என்ற இந்த செல்பேசி எண் பிஜேபிக்குச் சொந்தமான முக்கியமான எண்களுள் ஒன்று; மக்கள் விடுக்கும் மிஸ்டு கால் மூலம் அவர்களது விபரங்கள் உறுப்பினர் சேர்க்கைக்கும் தேர்தல் பிரசாரத்துக்குமான அந்தக் கட்சியின் டேட்டாவாக சேகரிக்கப்பட வாய்ப்புள்ளது…. என்று கூறி அதிர வைக்கிறார் சேலமே குரல் கொடு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச் சூழல் ஆர்வலருமான பியுஷ் மனுஷ்

இது குறித்துச் சுற்றுச் சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷை சேலத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நாம் சந்தித்துப் பேசினோம். “8000980009 எண்ணை நீங்கள் கூகுளில் டைப் செய்தாலே போதும் பிஜேபியால் நடத்தப்பட்ட நிறைய கேம்பைன்களின் தொடர்புக்கானதாக அந்த எண் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது உங்களுக்குத் தெளிவாகும்.

புகையிலைப் பழக்கத்தில் இருந்து நமது தேசத்தினை விடுவிப்பதற்காக ‘குட்கா முக்தி அபியான்’ என்ற பெயரில் ஒரு இயக்கத்தினை 2012ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தொடங்கினார். அந்த இயக்கத்துக்கு மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களைச் சேர்க்க இந்த எண் முதலில் பயன்படுத்தப்பட்டது. பிறகு தேர்தல் சமயத்தில் மிஸ்டு கால் தரும் மக்களுக்கு பிஜேபியின் தேர்தல் அறிக்கைகள் விளம்பரங்களை அனுப்ப இது பயன்பட்டது.

நூறு கோடி மக்கள் தினமும் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து தினமும் ஒரு மிஸ்டு கால் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் மூலமாக அவர்களது டேட்டாதான் சேகரிக்கபடுமேயன்றி, நதிகள் மீட்கப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட கூடுதலாக ஓடுவதற்கு வாய்ப்பேயில்லை.

மக்களைப் பொறுத்த மட்டிலும் நல்ல விஷயங்களுக்கு எப்போதுமே அவர்களின் ஆதரவு கட்டாயம் இருக்கும். ஆனால் அவர்களை ஜக்கி தவறுதலாக வழி நடத்துகிறார். மக்கள் ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்ய விடாமல் வேறு பாதைக்குத் திருப்பி அவர்களது போராட்ட வடிவத்தினை மாற்றுகிறார். மக்களை ஒரு போதும் ஏமாற்ற முடியாது. இப்படி ஒரு இயக்கத்தினைத் தொடங்கி அவரை அவரே ஏமாற்றிக் கொண்டுள்ளார் என்பத அவர் புரிந்து கொண்டால் சரிதான்” என்று கூறித் தனது பேட்டியினை நிறைவு செய்தார் பியுஷ் மனுஷ்.

அக்டோபர் 2 ம் தேதியன்று டெல்லியில் தன் பயணத்தை முடிக்கவுள்ள ஜக்கி வாசுதேவ் அதற்குள் 30 கோடி மிஸ்டு கால் தேவை என்று திருச்சியில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூறத் தக்கது.

 

Leave A Reply