மும்பை;
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து, மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் இவ்வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.மும்பை பங்குச் சந்தை, ஏர் இந்தியா அலுவலகம் மற்றும் ஒரு சொகுசு விடுதி உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. ‘நிழலுலக தாதா’ எனப்படும் தாவூத் இப்ராகிம் தலைமையில் பயங்கரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயம் அடைந்தனர்.

ஆர்எஸ்எஸ்- விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங்-பரிவார அமைப்புக்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையொட்டி ஏற்பட்ட வன்முறையில் முஸ்லிம்கள் தேடித் தேடி வேட்டையாடப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கை என்ற பெயரில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.இதுதொடர்பாக தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும் தாவூர் உட்பட இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 107 பேரில் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்ட நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் இருப்பவர்கள் மீதான குற்றச்சாட்டு மட்டும் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு வந்தது.இரண்டாம் கட்டமாக அபு சலீம், பெரோஸ் அப்துல் ரஷீத் கான், தாஹீர் மெர்ச்சண்ட், கரிமுல்லாகான், ரியாஸ் சித்திக் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் என்று அறிக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில், அவர்களுக்கு தண்டனை விவரங்களை மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது. இதில், தாஹீர் மெர்ச்சண்ட், பெரோஸ் அப்துல் ரஷீத் ஆகியோருக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அபு சலீம், கரிமுல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ரியாஸ் சித்திக்கிற்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

தற்போது தண்டனை பெற்றவர்கள் 2003க்கும் 2010க்கும் இடையில் கைது செய்யப்பட்டு தனித்தனியே விசாரணைக்கு உள்ளானவர்கள் ஆவர்.குண்டுவெடிப்புக்குப் பிறகு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற அபு சலீம், போர்ச்சுக்கல்லில் இருந்து 2005-ஆம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: