மும்பை;
பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புராண கற்பனைக் கதைகளை வரலாறு என்று பெயரில் பாடத்திட்டத்தில் சேர்ப்பதுடன், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை இருட்டடிப்பு செய்யும் வேலை அரங்கேற்றப்பட்டு வருகிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் பாடங்களை நீக்கியும் வருகின்றனர்.

அந்த வகையில், மகாராஷ்டிர மாநில பாடப்புத்தகங்களில் இருந்து வந்த, முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்த பாடங்களை தற்போது அங்கு ஆட்சியிலுள்ள பாஜக அரசு நீக்கியுள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான கட்டடங்களும், நினைவுச்சின்னங்களும் முகலாயர் காலத்தில் கட்டப்பட்டவை. சுமார் 300 ஆண்டுகளாக நீடித்த முகலாயர்களின் ஆட்சி, இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத முக்கியமான பகுதியாகும்.

ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முகலாயர்களின் முக்கியத்துவம் தெரிய வேண்டியதில்லை என்று அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் பள்ளி கல்வித் திட்டத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான பாடங்களை முற்றிலுமாக அகற்றியுள்ளது.

தற்போது அங்குள்ள வரலாற்றுப் பாடத்தில் சத்ரபதி சிவாஜியை மையப்படுத்தியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

17-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களை தோற்கடித்து மராட்டா சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றினார் சிவாஜி. அவர் மகாராஷ்டிரா உட்பட நாட்டில் பல பகுதிகளில் ஆட்சிபுரிந்தார்.
அரசர் சிவாஜி இந்து மதத்தை சேர்ந்தவர், ஆனால் மக்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்று சொல்லித்தரப்படுகிறது.இந்தியா, இந்து ஆட்சியாளரால் நிறுவப்பட்ட பேரரசு என்பதை வலிந்து நிறுவுவதற்கான முயற்சியாக இந்நடவடிக்கைகளை மகாராஷ்டிர மாநில எடுத்துள்ளது.
வரலாற்றை இருட்டடிப்புச் செய்யும் அரசின் நடவடிக்கையை பாடத்திட்ட குழுவின் தலைவர் சதானந்த் மோரே என்பவர் நியாயப்படுத்தியுள்ளார்.

‘நமது குழந்தைகள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்; எனவே மராட்டா வரலாறே அவர்களுக்கு முக்கியமானது; அதன்பிறகு பிற வரலாற்றை தெரிந்துக் கொள்ளட்டும்’ என்று மோரே கூறியுள்ளார்.

புத்தகங்களில் பக்கங்களில் எண்ணிக்கைக்கு வரம்பிருப்பதால், எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டே சில பாடங்களை நீக்க வேண்டியது இருந்ததாகவும், முகலாயர் வரலாற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக மராட்டா வரலாற்றை புறக்கணிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.வரலாற்றை காவி மயமாக்கும் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: