====எஸ்.வி.வேணுகோபாலன் ====
அதிர்ச்சி அளிக்கத்தக்க ஒரு படுகொலை நடந்திருக்கிறது. ஆனால் ஆத்திரம் இன்னும் அடங்காத வெறியோடு ஒரு கும்பல் – கொல்லப்பட்ட மனிதர்மீது, அவதூறுகளைப் பொழிந்தவண்ணம் இருக்கிறது. இந்தக் கொலையை வரவேற்று, கொலைகாரர்களை வாழ்த்திக் கூட சமூக ஊடகத்தில் பதிவுகள் போடப்படுகின்றன.

இத்தகைய படுகொலைகள் மேலும் தொடரட்டும் என்று சொல்லுமளவு திமிரெடுத்து எழுதப்படும் வாசகங்களையும் முகநூலில் பார்த்து வருவதாக பெங்களூருவில் வசிக்கும் என் மைத்துனர் தோழர் குருமூர்த்தி வேதனையோடு சுட்டிக் காட்டி இருந்தார். மைய அரசின் அதிகாரக் கொடி பறக்கும் ஆணவமும், அராஜகமும் தெறிக்கும் இத்தகைய பதிவுகளைத் தொடர்பவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிரதமரோடு, மகாராஷ்டிர முதல்வரோடு இன்னும் பாஜக முக்கிய புள்ளிகளோடு எல்லாம் இணைந்து நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஏந்தி நிற்கும் பதிவுகளில் இருந்து கக்கப்படும் நஞ்சு, தேச ஒற்றுமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும், பரந்துபட்ட சமூக மேம்பாட்டுக்காகவும் பேசும் குரல்களை எச்சரிக்கிறது.lankesh news paper

ஆட்சியை விமர்சிப்போரை ஏற்கெனவே தேச விரோதிகள் என்று முத்திரையிட்டிருக்கும் இந்த சக்திகள் தொடர் இடைவெளிகளில் நடத்திவரும் இந்தப் படுகொலைகள் மக்களுக்கு எந்தச் சேதியைக் கொடுக்கின்றன என்பதை கவனிக்கத் தவறினால் எதிர்காலத்தில் சூழ இருக்கும் இருள், கூடுதல் விசையோடு நம்மை வந்து கவ்வக் காத்திருப்பதாகவே தோன்றுகிறது.

துணிச்சலான பெண்மணியாக சமூக வெளியில் வலம் வந்த ஒருவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது. படுபயங்கரமான விதத்தில் அவரைப் பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர் எதிரிகள் என்பது நமது காலத்திய சவால்களது தன்மையை உணர்த்துகிறது. “நெஞ்சினைப் பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம், நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று வாட்டுவோம் நீதி நாட்டுவோம்” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் போர்க்குரல் கவிதை வரிகளை உள்ளம் அசைபோடுகிறது. கௌரி லங்கேஷ் போன்ற அசாத்திய வீராங்கனையைத் தொலைத்துவிட்டு நிற்கிறது நாடு. கன்னட இதழாளராக மிகவும் பரவலாக அறியப்பட்டிருந்த தமது தந்தையான அற்புத சிந்தனையாளர் லங்கேஷ் வழியிலேயே தாமும் ஓர் இதழாளராகக் கருத்தியல் களத்தில் நேர்மறை அரசியலையும், சமூக தளத்தில் துணிவோடு எதிர்மறை விமர்சனங்களையும், பண்பாட்டுக் களத்தில் முகத்தில் அறைந்தாற்போல் உண்மைகளையும் ஓய்வு ஒழிச்சலின்றி தமது இயங்கு விதியாகக் கொண்டு வாழ்ந்துவந்த அரிய வாழ்க்கை கௌரி லங்கேஷ் அவர்களுடையது. தமது வழியை, பகைவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடைமறிப்பர் என்பது அறிந்தே அமைந்திருந்தது அவரது செயல்பாடு. விவசாயிகள் நலனை, தலித் மக்களுக்கான நியாயத்தை, வழி மீட்டெடுத்துக் கொண்டு பொது நீரோட்டத்தில் இணையத் துடித்த நக்சல் இயக்கத் தோழர்களது மறுவாழ்க்கைக்கான சாத்தியங்களை மிகவும் முன்னுரிமை கொடுத்து ஆட்சியாளரது தலையீட்டோடு அருமையான விஷயங்கள் பலவற்றை இயல்பாக சாதிக்க முடிந்திருக்கிறது அவருக்கு. நெடிய காலம் எடுக்கும் கோரிக்கைகளுக்காகவும் இடைவிடாத முயற்சிகளை இன்னொரு பக்கம் மேற்கொண்டபடி தொடர்ந்து கொண்டிருந்தது அவரது பயணம். அதுதான் வன்மத்தோடு முறிக்கப்பட்டிருக்கிறது இப்போது!

‘தேடிச் சோறு நிதம் தின்று, வசதியான கதைகள் பேசி, சொந்த நலன் காத்தபடி , பெயருக்காக சிலபோது குரல் கொடுத்துக்கொண்டு, நரை கூடிக் கிழப்பருவம் எய்தி இயற்கையாக மரணத்தைத் தழுவக் காத்திருக்கும் வேடிக்கை மனித வாழ்க்கையை’ மறுத்துக் கொண்ட வேகம் அவருடையது. நேற்று இருந்த உயிர் நாளை தரிக்க வாய்ப்பற்றுப் போகக் கூடும் என்பதறிந்ததுபோல் ஓர் இலட்சிய வெறியோடு செழித்து வளர்ந்து கொண்டிருந்த வித்தியாசமான தரு (மரம்) வீழ்த்தப்பட்டிருக்கிறது.

ஒரு திரைப்படக் காட்சிக்கோவை போல கடந்த சில ஆண்டுகளில் வரிசையாக ஒரே விதத்தில் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற வழிமுறையில் அறிவியல் பகுத்தறிவு செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் (பூனா), இடதுசாரி சிந்தனையாளர் – மக்கள் தொண்டர் கோவிந்த் பன்சாரே (கோலாப்பூர்), முற்போக்கு எழுத்தாளர் எம். எம். கல்புர்கி (தார்வார்) மூவர் கொல்லப்பட்டது போலவேதான் நிகழ்ந்திருக்கிறது. பெங்களூருவில் செப். 5 அன்று கௌரி லங்கேஷ் அவர்களது படுகொலையும்.

புன்னகை அழியாத முகத்தோடு மக்களை விழிப்புணர்வுப் பாதையில் வழி நடத்திக் கொண்டிருந்த இயக்கம் தபோல்கருடையது. மூட நம்பிக்கைகளை மிக சாதாரணமான அறிவியல் செய்முறைகள் மூலம் தகர்த்தெறிந்து சொந்த நம்பிக்கையோடு தமது வாழ்க்கைக்கான போராட்டத்தை நடத்தும்படி பாமர மக்களையும் தெளிவித்துக் கொண்டிருந்த வாழ்க்கை அவருடையது. அறிவுக்குப் புறம்பான மொழியை எந்த அழகியலோடும், புராணக் கட்டுக்கதைகளோடும் சொன்னாலும் செல்லுபடியாகாத எதிர்க்குரலை ஓயாது உருவாக்கிக் கொண்டிருந்ததால் அவர் தொடர்ச்சியாக மிரட்டலை சந்திக்க வேண்டி இருந்தது.

மதவெறியைத் தூண்டும் இந்துத்துவ சக்திகளின் அடாத செயல்பாடுகளுக்கு சவாலாக வலுவான வரலாற்று ஆதாரங்களது மேடையில் உயர்ந்து நின்று மக்கள் ஒற்றுமையை உருவாக்கிக் கொண்டிருந்தவர் கோவிந்த் பன்சாரே. சிவாஜி யார்? என்ற அவரது ஆய்வு நூல், வீர சிவாஜியைச் சொல்லி இஸ்லாமியருக்கு எதிரான உளவியலை விதைத்துக் கொண்டிருந்த சங் பரிவார கும்பல்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்தது. பாட்டாளி மக்களுக்காகத் தமது போராட்டத்தை, எழுபது வயதைக் கடந்த நிலையிலும் முன்னெடுத்துக் கொண்டிருந்தார் பன்சாரே என்பது அவர் மீதான முக்கிய பழியாக இருந்திருக்கக் கூடும். தமது கருத்தை ஏற்றுக் கொள்ளாத சிந்தனையாளர்களிடத்தும் நன்மதிப்பு பெற்றிருந்த பண்பாக்கத்தோடு கன்னட இலக்கியத்தில், ஆய்வுத் துறையில், நாட்டார் வழக்கியலை மிக ஈடுபாட்டோடு எடுத்துக்கொண்டு பணியாற்றி வந்த களம் எம். எம், கல்புர்கி அவர்களுடையது. வலதுசாரி கருத்தியலை முற்றாக எதிர்த்த குரல் அவருடையது.

சாதிய, மதவாத கலகங்களைத் தூண்டுவோரை சமரசமின்றி கண்டனத்தோடு விமர்சித்தது அவரது எழுத்து. மிக முக்கியமாக, தபோல்கர் கொல்லப்பட்ட போதும், பன்சாரே வீழ்த்தப்பட்ட போதும் ஆவேசத்தோடு எதிர்த்துத் திரண்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் வரிசையில் முக்கியமானவராக தெறித்த முழக்கம் அவருடையது. அதைச் சொல்லியே அவர் படுகொலையின்போது அதை நியாயப்படுத்தி முகநூல் பதிவுகளையும் போட்டிருந்தது காவிப் படை.

மர்ம நபர்களது துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பன்சாரே உயிர் பிரிந்தபோது, ஆயிரக்கணக்கில் திரண்டுவந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய துப்புரவாளர்கள், கூலித் தொழிலாளர்கள், பல்துறை ஊழியர்கள், முற்போக்கு செயல்பாட்டாளர்கள் நாங்கள் தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள்…ஓயமாட்டோம், உங்களது பணியைத் தொடர்வோம் என்று உணர்ச்சிகர முழக்கங்கள் எழுப்பி அவரை வழியனுப்பி வைத்தனர்.

தபோல்கர் குடும்பத்தினர் அவரது அறிவியல் விழிப்புணர்வு பரப்புரையை இடைவிடாது சிற்றூர்கள் எல்லாம் சென்று செயல்பாட்டு முறையில் மக்களிடையே நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். கல்புர்கி படுகொலைக்கு எதிராக மகத்தான ஒற்றுமையோடு கர்நாடக பண்பாட்டுக் களத்தில் எழுச்சிகர கண்டனக்குரல்கள் முன்னெழுந்தன. இந்த மூவரது படுகொலை நடந்தபோதும் சரி, கன்னட எழுத்தாளர் யு ஆர் அனந்தமூர்த்திக்கு எதிராக இந்துத்துவ சக்திகள் மிக மோசமான செயல்பாடுகளில் இறங்கியபோதும் சரி எதிர்ப்புக்குரலை வலுவாக முழங்கியவர் கௌரி.

தன்னை வளர்ப்புமகன் என்று அழைத்துக் கொண்டாடியவர் கௌரி லங்கேஷ் என்று சொல்லும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் போராளி கன்னய்ய குமார், எங்கள் தாய் என்று நெகிழ்ச்சியுறப் பதிவிட்டுள்ள ஜீவேஷ் மேவானி, ஷீலா ரஷீத், உமர் காலித் இவர்களோடு ஏராளமான இளைஞர்கள் நாடு முழுவதும் அவரது இழப்புக்காகக் கண்ணீர் உகுக்கும் அதே நேரத்தில், கொடிய வன்முறை, பகைமை அரசியலுக்கு எதிரான கண்டனப் பேரணிகளிலும் பங்கேற்று வருகின்றனர். இதழாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கௌரி லங்கேஷ் அவர்களது படுகொலைக்கு எதிராக நூற்றுக்கணக்கான இடங்களில் ஒன்று திரண்டு ஆவேச முழக்கங்கள் எழுப்பி உள்ளனர்.

பெங்களூரு அதிர்ந்து போயிருக்கிறது என்று எழுதுகின்றன நாளேடுகள். ஆனால், உடனடியான ஒற்றை கண்டனக்குரல் எழுப்பவில்லை பிரதமர். சங் பரிவாரங்களோ கௌரி குறித்த அவதூறுகளால் நிரப்புகின்றனர் சமூக ஊடகப் பதிவுகளை. அவரது சொந்த வாழ்க்கை மீதும் கொச்சையான விமர்சனங்களை வழக்கம்போல் கட்டவிழ்த்து விட்டனர் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிகிறவர்கள். விவாகரத்து செய்துகொண்ட பின்னர் நண்பர்களாகத் தொடரும் உறவை, அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருக்கும் சிதானந்த் ராஜ்கட்டா அவர்கள் கௌரி மரணத்திற்கு இட்டிருக்கும் அஞ்சலிப் பதிவு உணர்த்துகிறது.

தளராத மனவுறுதியோடு, வலதுசாரி பிற்போக்குக் கருத்தியலைத் தொடர்ச்சியாக சவாலுக்கு அழைத்த தொடர் இயக்கங்களில் ஈடுபட்டிருந்த கௌரி லங்கேஷ், கல்புர்கி எதிர்கொண்ட மரணத்தைத் தழுவவும் தயார் என்று வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருக்கிறார் எனும்போது, இப்படியான துணிவுமிக்க போராளிகளை பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தவறான, மோசமான நிகழ்வுகள் நடக்கும்போது என்றில்லாமல், சாதாரண காலத்திலேயே, மிகவும் பரந்துபட்ட அளவில் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள கொடிய வன்முறை சவாலுக்கு எதிராக இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். சாதிய, மத வெறியர்களது நுட்பமான பண்பாட்டு ஊடுருவலுக்கு எதிராகவும், நச்சுக் கருத்தியலை அடையாளம் காட்டும் வண்ணமும் மக்களிடையே வலுவான உணர்வுகள் உருவாக்கப்படவேண்டும்.

‘உன் துப்பாக்கி ரவைகள் என்னுடலை மட்டுமே துளைக்க முடியும், செம்மாந்த உணர்வுகளை அல்ல’ என்று சம்மட்டியால் அடித்துச் சொல்வதுபோல் ஓங்கி முழக்கமிட்டு மடிந்துள்ள கௌரி லங்கேஷ் அவர்களுக்கான புகழஞ்சலி, சொற்களால் கட்டமைப்பதை விடவும், உளமார்ந்த செயல்பாடுகளால் உணர்த்தப்படவேண்டும். கௌரி மட்டுமல்ல, அவரைப்போன்ற வீரஞ்செறிந்த கருத்தியலாளர்கள், களச்செயல்பாட்டாளர்கள் அந்த நம்பிக்கையில்தான் தங்களை சமூகத்திற்கு முற்றாக ஒப்புவித்துக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: